Published:Updated:

`கூடங்குளம் சைபர் தாக்குதலில் என்ன நடந்திருக்கும்?’ - விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன்

அணு உலைகளில் மால்வேர் தாக்குதல் நடத்தப்பட்டால் அணு உலைகளையே நேரடியாகக் கட்டுப்படுத்தலாம் என்னும் விதத்தில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன்
விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன்

இந்தியாவின் முக்கிய சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்களுள் ஒருவரான புக்ராஜ் சிங், கடந்த அக்டோபர் 28-ம் தேதியன்று பதிவிட்ட ட்விட்டர் பதிவில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பதாகப் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்த, இந்தியாவின் அனைத்து அணு உலைகளையும் கட்டுப்படுத்தும் இந்திய அணு மின்சாரக் கழகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், NPCIL கணினிகளில் மால்வேர் தாக்குதல் நடைபெற்றிருப்பது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டது. NPCIL வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அணுஉலை பாதுகாப்பு தொடர்பான பல கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதன்படி, அணு உலைகளில் மால்வேர் தாக்குதல் நடத்தப்பட்டால் அணு உலைகளையே நேரடியாகக் கட்டுப்படுத்தலாம் என்னும் விதத்தில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

`கூடங்குளம் சைபர் தாக்குதலில் என்ன நடந்திருக்கும்?’ - விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன்

இதன் உண்மைத் தன்மையை அறிய விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரனை தொடர்புகொண்டு பேசினோம். ``இந்தியாவில் உள்ள அணு மின் நிலைய கணினிகளுக்கு மற்ற வலைப்பின்னல்(Network) அமைப்புகளுடன் எந்த விதத்திலும் தொடர்பு இருக்காது. அவை அனைத்தும் தனித்து இயங்கும் தன்மை கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அணு உலைகளில் நிர்வாக மேலாண்மை மற்றும் அணு உலைகளைக் கட்டுப்படுத்த தனித்தனி கணினிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் மூலம் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அணு மின் நிலைய கணினிகளில் தேடு பொறிகள் மூலம் தேடப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. தற்போது கூடங்குளம் அணு மின் நிலைய கணினிகளைத் தாக்கியது DTRACK என்ற மால்வேர்தான் என கண்டறியப்பட்டுள்ளது. இது வட கொரியாவுக்காக உளவு வேலைகளைச் செய்ய உருவாக்கப்பட்டதென கூறப்பட்டு வந்தாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில், அணுஉலை கணினிகளில் இவை தாக்குதல் நடத்தியுள்ளதால், மால்வேர் அனுப்பிய உளவாளிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருக்கலாம்.

`அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்'... எத்தனை அலட்சியம் கூடங்குளத்தில்?!

அணுஉலை மாதிரியான மிகுந்த எச்சரிக்கைத் தன்மையுடன் செயல்படக்கூடிய நிறுவனங்களில் இதுபோன்ற சிறிய மால்வேர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுவதில்லை. ஆனால், இது மாதிரியான சிறிய தாக்குதல் நடைபெறும் அளவுக்கு வாய்ப்பளித்திருப்பது நிர்வாகத்தின் கவனமின்மையை உணர்த்துவதாக இருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம்

மேலும், இந்த மால்வேர் தகவல் திருடப்படும் நோக்கிலேயே அனுப்பப்பட்டுள்ளது. இது, அணுஉலைகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்குத் திறன் வாய்ந்ததல்ல என்பதால் அணுஉலை பாதுகாப்பு குறித்து தற்போது நாம் அச்சம் அடையத் தேவையில்லை. இந்த மால்வேர் தாக்குதலால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லையென்றாலும், இதிலிருந்து படிப்பினையாக, பாதுகாப்புக் காரணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.