கட்டுரைகள்
Published:Updated:

சத்தமின்றி சாதித்த இஸ்ரோ... இந்திய ராக்கெட் LVM3 அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்திய ராக்கெட் LVM3
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய ராக்கெட் LVM3

தரையிலோ, கடலிலோ செல்லும் வாகனங்களுக்கும் ராக்கெட்டுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு லாரி, அதைவிட அதிக எடைகொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும்.

ரிஷி சுனக் பிரிட்டன் அதிபரான சம்பவத்தை, பிரிட்டனையே இந்தியா வசப்படுத்தியதுபோல பெரும்பான்மையினர் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சத்தமில்லாமல் ஒரு சாதனை புரிந்திருக்கிறது. ஆம், இந்தியா உருவாக்கிய அதிக எடை கொண்ட ராக்கெட்டான LVM3 அக்டோபர் 22 அன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. மொத்தம் 6,000 கிலோ எடைகொண்ட 36 செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்று விண்ணில் நிலைநிறுத்தியிருக்கிறது.

LVM3 வணிகரீதியான பயணமாக விண்ணுக்குச் சென்றது இதுவே முதல் முறை. இஸ்ரோ இதுவரை ஏவிய ராக்கெட்களில், அதிக எடையைச் சுமந்து சென்றது இதுதான். அதிக எடை கொண்ட ராக்கெட்களை வணிகரீதியாக விண்வெளிக்கு எடுத்துச்சென்று அதிகம் சம்பாதித்துக்கொண்டிருந்தது ரஷ்யாதான். உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவைத் தவிர்க்க முடிவு செய்துள்ளன. அதனால் இந்த வாய்ப்பு இந்தியாவுக்கு வந்திருக்கிறது. பிரிட்டன் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இந்தச் செயற்கைக்கோள்களை ஏவும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தது.

சத்தமின்றி சாதித்த இஸ்ரோ... இந்திய ராக்கெட் LVM3 அப்படி என்ன ஸ்பெஷல்?

Launch Vehicle Mark-3 எனப்படும் LVM3 என்றால் என்ன? இதில் அப்படி எது ஸ்பெஷல்?

இஸ்ரோவின் பல ஆண்டுகள் ஆராய்ச்சியில், 2,962 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது இந்த ராக்கெட். 2 டன்னுக்கும் மேல் எடை கொண்ட பெரிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் திறனை சில நாடுகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. சமீப காலம் வரை இந்தியாவின் பெரிய செயற்கைக்கோள்களை ஐரோப்பாவுக்கு எடுத்துச் சென்றே விண்ணில் ஏவினோம். இப்போது ஐரோப்பிய சாட்டிலைட்களை ஏவும் திறனை இந்தியா பெற்றிருக்கிறது. அதற்குக் காரணம், LVM3.

இந்தியாவிடம் இப்போது மூன்று வகையான ராக்கெட்கள் உள்ளன. ஒன்று, பி.எஸ்.எல்.வி ராக்கெட். விண்ணில் குறுகிய தூரம் சென்று சாட்டிலைட்களை நிலைநிறுத்தும் ராக்கெட் இது. இதுவரை 53 முறை விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது பி.எஸ்.எல்.வி. இவற்றில் இரண்டு முயற்சிகள் மட்டுமே தோல்வியில் முடிந்தன. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்கள் விண்வெளியில் 36,000 கிலோமீட்டர் தூரம் வரை சாட்டிலைட்களைச் சுமந்து செல்லும் திறன் படைத்தவை. இதுவரை 14 முறை ஏவப்பட்டுள்ளன ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்கள். இவற்றில் நான்கு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

ஆனால், LVM3 அப்படி இல்லை. இதுவரை சோதனை முயற்சியாகவும் வணிக முயற்சியாகவும் ஐந்து முறை விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஐந்தும் வெற்றிகரமான முயற்சிகள்தான். சந்திரயான்-2 விண்கலத்தை இந்த ராக்கெட்தான் சுமந்து சென்றது.

தரையிலோ, கடலிலோ செல்லும் வாகனங்களுக்கும் ராக்கெட்டுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு லாரி, அதைவிட அதிக எடைகொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும். ஒரு கப்பல், அதைவிடப் பல மடங்கு எடை கொண்ட கன்டெய்னர்களை சுமந்து செல்லும். இந்த இரண்டிலும் எரிபொருள் டேங்க் என்பது மிகச் சிறியதாகவே இருக்கும். ஒரு லாரியின் எடையுடன் ஒப்பிடும்போது, அதன் டீசல் டேங்க் மிகச் சிறியது.

சத்தமின்றி சாதித்த இஸ்ரோ... இந்திய ராக்கெட் LVM3 அப்படி என்ன ஸ்பெஷல்?

ஆனால் ராக்கெட்கள் அப்படிக் கிடையாது. புவி ஈர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு விண்ணில் பாய வேண்டும் என்பதால், அதற்கு எரிபொருளே அதிகம் தேவைப்படும். குறிப்பாக வளிமண்டலத்தைத் தாண்டும் வரை அதிக சக்தி அதற்குத் தேவைப்படும். எனவே, ஒரு ராக்கெட்டில் 90 சதவிகிதம் வரை எரிபொருளின் எடையே இருக்கும். ஒட்டுமொத்த ராக்கெட்டின் எடையுடன் ஒப்பிடும்போது, அது சுமந்து செல்லும் செயற்கைக்கோளின் எடை மிகக் குறைவு.

உதாரணமாக, LVM3 ராக்கெட்டின் மொத்த எடை 640 டன். அது, வெறும் 8 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை மட்டுமே சுமந்து செல்ல முடியும். உலகின் எல்லா ராக்கெட்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

உலகின் நவீன ராக்கெட்கள் எல்லாமே திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எரிபொருள் என மூன்று எரிபொருள்களையுமே பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்படுகின்றன. பூமியிலிருந்து மேலெழும்போது கூடுதல் சக்தி தேவை. அதை திட எரிபொருள் தருகிறது. மற்றவை ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுகின்றன. LVM3 இதேபோல வடிவமைக்கப்பட்ட நவீன ராக்கெட்.

எதிர்காலத்தில் நாம் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்ப இருக்கிறோம். நிலவுக்கு முதன்முதலில் இந்தியர்களைக் கூட்டிச் செல்வதற்கு ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம். இந்திய விண்கலம் ஒன்று மனிதர்களை ஏற்றிக்கொண்டு விண்ணில் பாயப்போகும் அந்த மகத்தான தருணத்துக்காக இப்போதே தயாராகியிருக்கிறது, நவீன ராக்கெட்டான LVM3.