ஆன்லைன் மோசடி: ரூ.88,000 இழந்த மகாராஷ்டிர இளைஞர்... கூகுள் பே மூலம் வலைவிரித்த மோசடி நபர்!

சவான்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்து 72,900 ரூபாய் மற்றும் 15,521 ரூபாய் என மொத்தமாக 88,421 ரூபாயை மோசடி செய்து எடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏமாற்றி ஆன்லைன் மூலம் 88,000 ரூபாய் பணத்தைப் பறித்துள்ளார் மோசடி நபர் ஒருவர்.
நவி மும்பையைச் சேர்ந்த சவான்ட் என்ற இளைஞர் ஆன்லைன் விற்பனைத் தளம் (Online shopping site) ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் டி-சர்ட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய டி-சர்டின் அளவு சரியாக இல்லாமல் போகவே அதனைத் திருப்பி அனுப்பும் நோக்கில், அந்தக் குறிப்பிட்ட ஆன்லைன் விற்பனைத் தளத்தின் என்னை கூகுள் மூலம் கண்டறிந்து தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசிய மோசடி நபர் தன்னை அந்தத் தளத்தின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, டி-சர்ட்டிற்கான பணத்தை நிறுவனம் திருப்பி அளித்துவிடும் அதற்காக அவரது கூகுள் பே ஐடி (Google pay ID), அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் ஆகிய விவரங்களைக் கேட்டுள்ளார்.

பின்னர், கூகுள் பே ஐடி-க்கு சவான்ட் பயன்படுத்தும் பின் (PIN) நம்பரை நேரடியாகக் கேட்காமல் அவரது வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களில் பின் நம்பரைக் கழித்து விட்டு வரும் விடையை கேட்டுள்ளார். சவான்ட்டும் பணம் திரும்ப வரும் நம்பிக்கையில் அவர் கேட்ட விடையைக் கூறியுள்ளார். அந்த விடையை வைத்து சவான்ட்டின் கூகுள் பே பின் நம்பரை அறிந்து கொண்ட மோசடி நபர், சவான்ட்டின் வங்கிக் கணக்கில் இருந்து 72,900 ரூபாய் மற்றும் 15,521 ரூபாய் என மொத்தமாக 88,421 ரூபாயை மோசடி செய்து எடுத்துள்ளார்.

தன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததை அறிந்த சவான்ட் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டுள்ளார். இதனை விசாரித்த வங்கி நிர்வாகம், இது பயன்பாட்டாளரின் தவறு என கூறிவிட்டது. எனவே, கடந்த பிப்.15ல் பெயர் தெரியாத அந்த மோசடி நபர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார் சவான்ட்.
வங்கிக் கணக்காக இருந்தாலும் சரி, கூகுள் பே (Google pay), போன் பே (Phone pe) போன்ற UPI தளங்களாக இருந்தாலும் சரி, பின் (PIN) நம்பரும், OTP நம்பரும் நம் தனிப்பட்ட வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே. அதனை யாரிடமும் பகிராமல் இருந்தாலே இது போன்ற மோசடிகளைத் தவிர்த்துவிடலாம்.