Published:Updated:

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கம்பேக்!` - ரூ.10,000-த்துக்குள் விலை; 3 ஸ்மார்ட்போன்கள்

மைக்ரோமேக்ஸ்
மைக்ரோமேக்ஸ்

இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ரூ.10,000-த்துக்குள் 3 ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்திய மொபைல் போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இந்தியர்களின் கையில் தவழும் 3-ல் இரண்டு ஸ்மார்ட்போன்கள் சீன தயாரிப்பு என்ற நிலையே இருக்கிறது. இந்த நிலையில், பட்ஜெட் செக்மென்டைக் குறிவைத்து 3 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

மைக்ரோமேக்ஸ்
மைக்ரோமேக்ஸ்

கொரோனா ஊரடங்கு, சமூக இடைவெளி உள்ளிட்ட பிரச்னைகளால், சமூக ஊடகங்கள் மூலம் இந்தப் புதிய மாடல்களை வெளியிட மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டிருக்கிறது. அந்த நிறுவனம் சார்பில், கடைசியாக ₹8,199 என்ற விலையில் Micromax iOne Note என்ற மாடலை வெளியிட்டது. அதன்பின்னர் எந்தவொரு புதிய மாடலும் வெளியிடப்படாத நிலையில், தற்போது மேலும் 3 புதிய மாடல்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கேட்ஜெட்ஸ் 360 (Gadgets360) அளித்த தகவலின்படி மைக்ரோமேக்ஸின் இந்தப் புதிய ஸ்மார்ட் போன்களின் விலை ₹10,000-க்குள் இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஜுலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் வேளையில், மைக்ரோமேக்ஸ் தனது வாடிக்கையாளர்களிடமும் இதுகுறித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது. மொபைல் பயன்படுத்துபவர்கள், சீனாவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் இந்தச் சூழலில், ``பெரிய மாற்றத்திற்காக நாங்கள் கடினமாக உழைத்துவருகிறோம். காத்திருங்கள்" என்று மைக்ரோமேக்ஸ் ட்வீட் செய்துள்ளது. தனது இன்னொரு ட்வீட்டில்,``நவீன தோற்றத்திலும், புதிய அம்சங்களுடனும் எங்கள் அடுத்த வெளியீடுகள் இருக்கும். குறைந்த விலையிலேயே அடுத்த மாடல்கள் வெளிவரும்" என்றும் அறிவித்துள்ளார்கள். சீனத் தயாரிப்புகளுக்குப் போட்டியாக தங்களை வெளிப்படுத்த #MadeByIndian, #MadeForIndian போன்ற ஹேஷ்டாக்களுடன் டிரெண்ட் செய்துவருகின்றனர்.

மைக்ரோமேக்ஸ் iOne Note
மைக்ரோமேக்ஸ் iOne Note

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மைக்ரோமேக்ஸ் இந்திய மொபைல் சந்தையில் பெரும் பங்கு வகித்தது. 2014-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு அறிக்கையின்படி, உலக அளவில் பத்தாவது இடத்தையும் பிடித்திருந்தது. ஷாவ்மி போன்ற சீன நிறுவன வருகையால் தங்களுடைய மார்க்கெட்டை இழந்தது மைக்ரோமேக்ஸ். Infinity N11, Infinity N12 போன்ற மாடல்கள் மூலம் இழந்த தன் நிலையை மீண்டும் பெற முயற்சிக்கிறது மைக்ரோமேக்ஸ். புதிய அம்சங்களுடனும் குறைவான விலையிலும் வெளியாக இருக்கும் இந்த மாடல்கள் மூலம், தன் நிலையை மைக்ரோமேக்ஸ் தக்கவைக்கும் என்றும் அந்த நிறுவனம் சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு