Published:Updated:

டிக்டாக்: `4 நாடுகளுக்கான உரிமை; ட்ரம்ப்பின் கவலை!’ - மைக்ரோசாஃப்ட்டின் புது பிளான்

மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட்

``அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள டிக் டாக் உரிமத்தை மைக்ரோசாஃப்ட் வாங்குவது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி சீனப் பின்னனியைக் கொண்ட டிக் டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக்கூடும் என்றும் தேசிய பாதுகாப்பைக் கருதியும் அமெரிக்காவும் டிக் டாக் செயலியைத் தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து, டிக் டாக்கின் தாய் நிறுவனமாக பைட்டான்ஸ், செயலி மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்பதோடு, அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படாமல் இருப்பதற்கான வழிகளையும் ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் பைட்டான்ஸ் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.

டிக் டாக்
டிக் டாக்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள டிக் டாக் உரிமத்தை மைக்ரோசாஃப்ட் வாங்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் சில வாரங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளாவும் சந்தித்துப் பேசியது விவாதப் பொருளானது. இந்த உரையாடலுக்குப் பிறகு அமெரிக்காவில் டிக்டாக்கின் உரிமத்தை வாங்குவது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகளவில் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவின் டிக்டாக் உரிமத்தைப் பெறாத பட்சத்தில் டிக்டாக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப்பின் டிக்டாக் மீதான கவலைகள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம், ``டிக்டாக் செயலியின் பாதுகாப்பு குறித்து முழுமையாக மறு ஆய்வு செய்யப்படும். அதிபர் ட்ரம்ப்பின் செயலி தொடர்பான கவலைகளுக்கு மைக்ரோசாஃப்ட் முக்கியத்துவம் கொடுக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நன்மைகளுக்கு உதவிகளையும் வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அறிக்கை தொடர்பாக வெள்ளை மாளிகை எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்குவது தொடர்பான தகவல்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

கரூர்: டிக்டாக், ஃபேஸ்புக்குக்கு மாற்றாகப் புதிய செயலிகள்! - 10 இளைஞர்களின் புதிய முயற்சி
அடுத்த கட்டுரைக்கு