Published:Updated:

இனி இந்திய ராணுவத்திலும் ரோபோக்கள்!- மத்திய பாதுகாப்புத்துறை பிளான் என்ன?

இந்த ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பு குறையும் என நம்புகிறது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்.

காஷ்மீரில் ரோபோக்கள்!
காஷ்மீரில் ரோபோக்கள்!

ரோபோக்கள் இன்று கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இந்திய ராணுவத்திலும் நுழைந்திருக்கின்றன ரோபோக்கள். காஷ்மீரில் கூடிய விரைவில், கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைக் கட்டுக்குள் வைக்க (Counter Insurgency Operation) உதவப்போகின்றன ரோபோக்கள்.

Kashmir
Kashmir

இதற்காக நமது பாதுகாப்புத்துறை 550 ரோபோக்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. அதிலும் வாங்கவிருக்கும் ரோபோக்களெல்லாம் குறைந்தது 25 வருடம் உழைக்கக்கூடியதாக இருக்கும். இந்த ரோபோக்கள் படிகள் ஏறக்கூடியதாகவும் வழியில் இருக்கும் தடங்கல்களைக் கண்டறிந்து தவிர்க்கக்கூடியதாகவும் இருக்கும். தீவிரவாத பகுதிகளில் கிரனேட் வகை குண்டுகளை எரியக்கூடிய திறனும் இவற்றில் இருக்குமாம். இந்த ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பு குறையும் என்று நம்பப்படுகிறது.

"சீக்கிரம் அங்கிருந்து நகருங்கள்!" - காஷ்மீர் நேரடி அனுபவக் குறிப்புகள்!

இதுகுறித்து, நவம்பர் 19-ம் தேதி இந்தியாவில் இருக்கும் ரோபோ தயாரிப்பாளர்கள் பலரையும் அழைத்துள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம். அந்தச் சந்திப்பில் தங்களது ரோபோவின் செயல்பாடுகள் குறித்து விளக்க வாய்ப்பு வழங்கப்படும். இந்த முயற்சி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியைக் குறைப்பதற்கும் இந்தியாவில் இருக்கும் தொழிற்சாலைகளை வளர்ப்பதற்கும் உதவிகரமாக இருக்கும்.

ரோபோ மாதிரி படம் (Representational Image)
ரோபோ மாதிரி படம் (Representational Image)
Pixabay

இந்த ரோபோக்கள் புகைப்படம் எடுக்கவும் வீடியோ எடுக்கவும் உதவியாக இருப்பது அவசியம். இவற்றின் மூலம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும்.

அனைத்தையும்விட இந்த ரோபோக்கள் அதிக எடை கொண்டதாக இல்லாமல், எளிதில் இடம் மாறக்கூடியதாக இருக்க வேண்டியது அவசியம். குண்டுகளைத் தடுக்கக்கூடியதாகவும், அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாகவும் இவை அமைய வேண்டும் என்றும் எடுக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை 150 முதல் 200 மீட்டர் தூரம் வரை அனுப்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது பாதுகாப்புத்துறை.