Published:Updated:

`இப்ப முடியல; அக்டோபரில் பார்க்கலாம்!’ -விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியின் படங்களை வெளியிட்ட நாசா

கடந்த 17-ம் தேதி விக்ரம் லேண்டர் விழுந்த பகுதிக்கு மேலே பறந்து அதைக் கண்டுபிடுக்கும் முயற்சியாக எல்.ஆர் ஆர்பிட்டரில் இருக்கும் உயர் தர கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டது.

NASA
NASA

சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டரை திட்டமிட்டபடி நிலவின் பரப்பில் கடந்த 7-ம் தேதி தரையிறக்க முடியவில்லை. லேண்டர் வேகமாக நிலத்தில் சென்று மோதியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தாலும் லேண்டர் நொறுங்காமல் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, லேண்டரைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.

Image from LRO
Image from LRO
NASA

இஸ்ரோவின் இந்த முயற்சியில் நாசாவும் கைகோத்தது. நாசாவின் விண்கலமான LRO (Lunar Reconnaissance Orbiter) விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்து, லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. கடந்த 17 -ம் தேதி விக்ரம் லேண்டர் விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலே பறந்த நாசாவின் ஆர்பிட்டரால் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், எல்.ஆர் ஆர்பிட்டரிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டு விக்ரம் லேண்டரை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கடந்த 17 -ம் தேதி விக்ரம் லேண்டர் விழுந்த பகுதிக்கு மேலே பறந்து அதைக் கண்டுபிடுக்கும் முயற்சியாக எல்.ஆர் ஆர்பிட்டரில் இருக்கும் உயர்தர கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் நிழல் சூழ்ந்திருந்தது.

Image from LRO
Image from LRO
NASA

விக்ரம் லேண்டர் நிழல்களில் மறைந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதே பகுதியின் மேலே, வரும் அக்டோபர் மாதம் மீண்டும் பறந்து ஆய்வு செய்யவுள்ளோம். அப்போது வெளிச்சம் நிச்சயம் உதவி செய்யும் என நம்புகிறோம். விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 21-ம் தேதியோடு விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியில் இரவு காலம் தொடங்கிவிட்டது. அதன் பின்னர், அந்தப் பகுதியில் வெளிச்சம் இருக்காது. மேலும், வெப்பநிலையும் மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸுக்குக் கீழே செல்லும். லேண்டரும், வரும் அந்த வெப்பநிலையில் இயங்கும்படி வடிவமைக்கப்படவில்லை.

அதன் கருவிகளும் நிரந்தரமாகப் பாதிப்படையும் வாய்ப்புகளும் அதிகம். எனவே, இனி விக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்துவது என்பது முடியாத காரியம் என்றே கூறப்பட்டாலும் அது விழுந்த இடத்தையும் அதன் நிலைமையும் புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.