சந்திரயான்-2 விண்கலனுடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் ஜூலை 22 விண்ணில் சீறிப் பாய்ந்ததிலிருந்தே இந்தியாவை உலக நாடுகள் கவனிக்க தொடங்கியது. காரணம் யாரும் செல்ல முயற்சிக்காத நிலவின் தென் துருவத்தின் அருகே தரையிறங்க இஸ்ரோ முடிவு செய்தது. திட்டம் வெற்றிபெற சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் லேண்டருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இது இஸ்ரோவுக்கு ஏற்பட்ட பின்னடைவாக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களும் இஸ்ரோவின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். விஞ்ஞானம் என்பதே முயற்சிதான். இதில் வெற்றி தோல்விகள் கிடையாது என விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை அளித்தார் பிரதமர் மோடி. இனிமேல் தான் ஆய்வுகள் இன்னும் வேகமெடுக்கும், இந்திய அரசும் இந்நாட்டு மக்களும் உங்ளுடன் இருப்பார்கள் என்றார் மோடி.
சந்திரயான்-2 விண்கலத்தின் செயல்பாடு 95 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ அதிகாரிகள், `விக்ரம் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது வெறும் 5 சதவிகித தோல்வியே. நிலவில் கால்பதிக்கும் திட்டத்தில் 95 சதவிகிதம் வெற்றிபெற்றுவிட்டோம்.

ஆர்பிட்டர் தொடர்ந்து சுற்றுவட்ட பாதையில் மிகவும் பாதுகாப்பாகச் சுற்றிவருகிறது. நிலவின் பரப்பிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் நிலவை அடுத்த ஒரு வருடத்துக்குச் சுற்றிவரும். இந்த ஆர்பிட்டர் நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு படம்பிடித்து அனுப்பும். இதைக்கொண்டு தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரையும் ஆர்பிட்டரால் படம்பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் லேண்டரின் நிலை பற்றி உறுதியான தகவல்கள் கிடைக்கும்'' எனப் பிடிஐ நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்திரயான்2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் நேற்று தூர்தர்ஷன் சேனலில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், `லேண்டரை தரையிறக்கும் இறுதிக்கட்டப்பணிகள் சரியான முறையில் செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக லேண்டருடனான தொடர்பை நாங்கள் இழந்தோம். மேலும் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த அடுத்த 14 நாள்கள் தொடர்ந்து முயற்சிப்போம்.

பிரதமர் மோடி பேசியது எங்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாகவும் ஆதரவு அளிக்கும் விதமாகவும் இருந்தது. அவர் சொன்னதில் எனக்கு பிடித்து, குறித்துக் கொண்ட விஷயம், ``அறிவியலில் வெற்றி அல்லது முடிவை நோக்கி குறிவைக்க கூடாது. சோதனைகளைதான் செய்ய வேண்டும். அந்த சோதனை முயற்சிகள் வெற்றிக்கு அழைத்து செல்லும்” என்பது தான்” என்றார்.
இந்நிலையில் நேற்று இஸ்ரோ தனது ட்விட்டர் பதிவில், ``சந்திரயான் -2 மிஷன் மிகவும் சிக்கலான திட்டமாக இருந்தது. இஸ்ரோவின் கடந்த கால திட்டங்களை ஒப்பிடும்போது நிலவின் தென் துருவத்துக்கு அருகே செல்லும் இந்தபயணம் மிக கடுமையானதாக இருந்தது” என குறிப்பிட்டது.
நாசாவும் இஸ்ரோவின் முயற்சியை பாராட்டியுள்ளது. நாசாவின் ட்விட்டர் பதிவில், ``விண்வெளி கடினமானது. சந்திரயான்2 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சிகளுக்கு எங்களின் பாராட்டுகள். இந்த முயற்சியின் மூலம் எங்களுக்கும் ஊக்கமளித்துள்ளீர்கள். மேலும் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்யும் பணியில் நாம் ஒன்றாக இணைந்து செயலாற்றும் எதிர்கால வாய்ப்புகளை எதிர்நோக்குவோம்” என கூறியுள்ளது.