Published:Updated:

`கார், பைக் மட்டுமல்ல இனி ஃபிளைட்டும் எலக்ட்ரிக்தான்!'- அறிமுகமானது நாசாவின் X-plane

எதிர்காலத்தில் விமானங்களை மின்சாரம் மூலம் எப்படி இயக்குவது என்னும் ஆராய்ச்சியில் நாசா தொடர்ந்து தீவிரமாக ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

நாசாவின் x-57 மேக்ஸ்வெல்
நாசாவின் x-57 மேக்ஸ்வெல்

இன்றைய 21-ம் நூற்றாண்டில் அனைத்துமே மின்சார மயமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே மின்சார மயமாக்கப்பட்ட இருசக்கர வாகனங்களும் கார்களும் தெருக்களில் வலம் வரத் தொடங்கி விட்டன. இந்நிலையில் தற்போது நாசா நிறுவனம் விமானங்களையும் மின்சாரம் மூலம் இயக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆராயச்சியின் சோதனை முயற்சியாக நாசா தனது முதல் மின்சார மயமாக்கப்பட்ட விமானத்தை கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸில் உள்ள ஆர்ம்ஸ்ட்ராங்க் விமான ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கிய ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விமானத்தின் பெயர் x-57 மேக்ஸ்வெல் (x-57 maxwell) அல்லது எக்ஸ் பிளேன்(x-plane). எதிர்காலத்தில் விமானங்களை மின்சாரம் மூலம் எப்படி இயக்குவது என்னும் ஆராய்ச்சியில் நாசா தொடர்ந்து தீவிரமாக ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நாசா ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ``எதிர்காலத்திற்கான புதிய விமானப் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளோம். மின்சாரம் மூலம் இயங்கும் இந்த விமானம் சுற்றுச்சூழலைப் பாதிக்காத ஒன்றாக இருக்கும். மேலும் அதிக சத்தமில்லாமல், மாற்றியமைக்கப்பட்டுள்ள அமைப்பில் இது விண்ணில் பறக்கும்" என்றும் தெரிவித்துள்ளது .

இந்த x-57 விமானத்தின் திட்ட மேலாளர் டாம் ரிக்னே கூறுகையில் "இந்த விமானத்தைச் சோதனை ஓட்டம் செய்த பிறகுதான் அதன் தரத்தை உறுதிசெய்யமுடியும். பறக்கும் விமானத்தை முழுமையாகச் சோதனை செய்யும் முன்னர் ஆராய்ச்சியிலிருந்து கிடைத்த பாடங்களை உடனடியாக அனைவருக்கும் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் உதவிகரமானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

நாசாவின் x-57 விமானம் இரண்டு இஞ்சின்களைக் கொண்ட Tecnam P2006T அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நான்கு இருக்கைகளை மட்டுமே கொண்ட மெலிசான இந்த விமானம் 2006-ம் ஆண்டு இத்தாலியில் வடிவமைக்கப்பட்டதாகும். இதில் நாசா நிறுவனம் இரண்டு Rotax இயந்திரங்களுக்குப் பதிலாக 14 எலக்ட்ரிக் மோட்டார்களைப் பொருத்தியுள்ளது. இவை இரண்டு இறக்கைகளின் முனையிலும் உள்ள ப்ரோபோலர்களை இயக்கும். ஒரு மணி நேரம் மட்டுமே பறக்கக் கூடிய இந்த விமானம் 160 கிலோமீட்டர் வரை பயணிக்கும். இந்த விமானத்தின் வேகம் ஒரு மணி நேரத்தில் 280 கிலோமீட்டர் வரை செல்லும். நாசாவின் இந்த x-57 விமானத்தின் வடிவமைப்பு, இன்னும் சிக்கலான என்ஜின்கள் கொண்ட விமானங்களையும் மின்சார மயமாக்க உதவிகரமாக இருக்கும்.

பல்வேறு தனியார் நிறுவனங்களும் மின்சாரம் மூலம் இயங்கும் விமானங்களையும் ஹோவர்க்ராஃப்ட்களையும் பல ஆண்டுகளாகத் தயாரிக்க முற்பட்டுவருகின்றன. இந்நிலையில் நாசாவின் x-57 விமானம் அரசாங்கம் நிர்ணயித்த தரத்திற்கு வடிவமைக்கப்படவுள்ளது. இந்தத் தரநிலையைத் தனியார் தயாரிப்பாளர்களும் அரசாங்க அனுமதி பெறப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

`பெண்களுக்கான முதல் விண்வெளி நடை!’ - தயாராகும் நாசா

ஆனால், வருங்காலத்தில் நாசா நிறுவனமானது விமான பேட்டரியின் சேமிப்புத் திறனில் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நிறைய பேட்டரிகள் சுமந்து சென்றால் விமானத்தின் எடை அதிகரித்து விடும். இதனால் எலக்ட்ரிக் மோட்டார்களின் மீதும் அதிக அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதற்கான தீர்வையும் நாசா நிறுவனம் கண்டறிந்து செயல்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும்.