Published:Updated:

செவ்வாய் கிரகத்தில் 'Perseverance' ரோவர்... என்னவெல்லாம் செய்திருக்கிறது... இனி என்ன செய்யும்?!

Perseverance rover
Perseverance rover

செவ்வாயில் உயிர்கள் இருந்ததா, இருக்கிறதா என்ற தேடல்தான் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம்!

நாசாவின் அதிநவீன 'பெர்சவரன்ஸ்' ரோவர் 7 மாதங்கள் விண்ணில் பயணம் செய்து 293 மில்லியன் மைல்கள் கடந்து இந்திய நேரப்படி பிப்ரவரி 19, அதிகாலை 2.55 மணிக்குத் தரையிறங்கியுள்ளது. செவ்வாயில் உயிர்கள் இருந்ததா, இருக்கிறதா என்ற தேடல்தான் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம்.

மனிதர்களுக்குப் பல காலமாகவே பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்குமா என்ற கேள்வி இருந்து கொண்டேதான் இருக்கிறது. உயிர் வாழ்வதற்கு ஏற்ப சூழ்நிலைகள் இருக்கலாம் என்ற கணிப்பில் பல கோள்களைக் கண்டறிந்திருந்தாலும், கைக்கெட்டும் தூரத்தில் இருப்பது செவ்வாய் மட்டுமே. செவ்வாய்க் கிரகத்தில் என்ன இருக்கிறது, அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, இதற்கு முன்னர் அங்கே உயிர்கள் இருந்ததா, இனி உருவாக வாய்ப்பிருக்கிறதா எனப் பல கோணங்களில் பல கேள்விகள் ஆராய்ச்சியாளர்கள் கண்முன்னே விரிகின்றன.

Mars mission
Mars mission

சூரியக் குடும்பத்தில் இத்தனை கோள்கள் இருந்தும் செவ்வாயின் மேல் மட்டும் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. மெர்குரி மற்றும் வீனஸ் ஆகிய இரண்டும் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அங்கு உயிர் வாழ்வதற்கு ஏதுவான சூழல் இல்லை. செவ்வாயை அடுத்து இருக்கும் கோள்கள் அனைத்தும் சூரியனில் இருந்து தொலைவில் இருப்பதால் அவை மிகவும் குளிர் நிறைந்த கோள்களாக இருப்பதால் அவையும் உயிர் வாழ்வதற்கு ஏதுவான கோள்கள் இல்லை. செவ்வாய் மட்டுமே, பூமிக்கு அருகிலும், சூரியனில் இருந்து உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான தூரத்திலும் இருக்கிறது. பூமியைப் போலவே அடர்த்தியான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. செவ்வாயில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமும் இருக்கிறது. இதை எல்லாம் சேர்த்துத்தான் செவ்வாயில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

1960-ல் இருந்தே செவ்வாயை ஆராய்ச்சி செய்யும் பணிகளை ரஷ்யாவும் அமெரிக்காவும் தொடங்கிவிட்டன. 1964-ல் தான் முதல் வெற்றிகரமான 'Flyby' எனப்படும், செவ்வாயை அருகில் கடந்து சென்று படமெடுக்கக்கூடிய தொழில்நுட்பத்தைச் சாத்தியப்படுத்தியது அமெரிக்கா. 'Flyby' தொழில்நுட்பத்தில் இருந்து ஆர்பிட்டர் (Orbiter), லேண்டர் (Lander), ரோவர் (Rover) எனப் பல தொழில்நுட்பங்களை கொண்டு செவ்வாயை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். இப்போது செவ்வாயில் தரையிறங்கியிருக்கும் நாசாவின் 'பெர்சவரன்ஸ்' ரோவர், செவ்வாயைப் பற்றிய ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Perseverance rover making
Perseverance rover making

பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவரில் இருக்கும் தொழில்நுட்பங்கள்:

தற்போது அனுப்பப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாயை ஆய்வு செய்வது மட்டுமில்லாமல் பின்னாளில், மனிதர்கள் செவ்வாயில் தரையிறங்கும் போது அவர்களுக்கு உதவக்கூடிய சில உபகரணங்களோடும் சேர்த்தே உருவாக்கப்பட்டுள்ளது. ரோவரில் MOXIE எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றும் உபகரணமும் இணைக்கப்பட்டுள்ளது. இது செவ்வாயில் பின்னாளின் தரையிறங்கும் மனிதர்களுக்கு உதவக்கூடும்.

பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் வகையில் RIFMAX என்ற தொழில்நுட்பமும் பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் முக்கியமாக நிலத்துக்கடியில் தண்ணீர் இருக்கிறதா எனக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

1.8 கி அளவிலான குட்டி டிரோன் ஒன்றும் பெர்சவரன்ஸ் ரோவரில் இடம்பெற்றுள்ளது. இந்த குட்டி டிரோனானது, செவ்வாயின் குறைந்த அடர்த்தியில் டிரோன்காளால் பறக்க முடியுமா எனக் கண்டறியவும், பறந்து கொண்டே செவ்வாயைப் படமெடுக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பெர்சவரென்ஸ் தனி ஒரு திட்டமாக, இதனோடு சேர்த்து அடுத்து வரவிருக்கும் சில திட்டங்களுக்காகவும் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாயில் உயிரினங்களைத் தேடுவது மட்டுமில்லாமல், அங்கிருந்து மண் மற்றும் கல் மாதிரிகளைப் பூமிக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Mars Sample Return Mission (MSR):

செவ்வாயில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வரும் திட்டத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்கா அதன் முதல் படியை எட்டியுள்ளது. இந்த திட்டமானது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் 2031-ம் ஆண்டு செவ்வாயின் மண் மாதிரி, பூமியில் இருக்கும்.

இந்தத் திட்டத்தின் முதல் படியாக பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயின் மண் மாதிரிகளை ஒரு சிறிய புட்டியில் அடைத்து அங்கேயே விட்டுத் செல்லும்.

அமெரிக்காவின் மற்றொரு லேண்டரும், ஐரோப்பாவின் ரோவரும் 2026-ல் செலுத்தப்பட்டு, 2028-ல் செவ்வாயில் தரையிறக்கப்படும். அந்த ரோவர் பெர்சவரன்ஸ் விட்டுச் சென்ற மாதிரிப் புட்டிகளை லேண்டருக்கு எடுத்து வரும்.

அந்த லேண்டரானது செவ்வாயின் வட்டப்பாதையின் குறிப்பிட்ட பகுதிக்கு எடுத்து வரும்.

2026-ம் ஆண்டே ஐரோப்பாவின் மற்றொரு விண்கலம் பூமியில் இருந்து செலுத்தப்பட்டு, 2029-ம் ஆண்டு செவ்வாயின் மாதிரியைக் கொண்டு வரும் லேண்டரிடம் இருந்து மாதிரிகளைப் பெற்றுக் கொண்டு 2031-ம் ஆண்டு பூமிக்குத் திரும்பும்.

Perseverance rover
Perseverance rover

கேட்பதற்குச் சுலபமாக இருந்தாலும், மிகவும் சவாலான திட்டம் இது. இந்தத் திட்டத்திற்குச் செலவு செய்யும் தொகையில் 5-ல் இருந்து 10 விண்வெளி திட்டங்களை நிறைவேற்றிட முடியும். ஆனாலும், அமெரிக்கா இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்துள்ளது. மேற்கூறப்பட்ட ஏதேனும் ஒரு படியில் சிறிய தவறு நிகழ்ந்தாலும் கூட திட்டம் மொத்தமும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mars- Fully Loaded:

அமெரிக்கா மட்டுமல்ல, இந்த மாதத்தின் 9 மற்றும் 10-ம் தேதிகளிலும் செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் இரண்டு ஆர்பிட்டர்களை நிலைநிறுத்தியிருக்கின்றன சீனாவும், யூ.ஏ.இ-யும் (UAE). மேலும் சீனாவின் லேண்டரும், ரோவரும் வரும் மே மாதம் செவ்வாயில் தரையிறங்குவதற்கான பயணத்தில் இருக்கின்றன. 2024-ல் இந்தியாவின் மங்கள்யான் 2 திட்டமும் இருக்கிறது.

'வி ஆர் கம்மிங், மார்ஸ்'

அடுத்த கட்டுரைக்கு