Published:Updated:

இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க புதிய வழி; டாரன்டினோ மீது வழக்கு; - இன்றைய டெக் அப்டேட்ஸ்!

படைப்பாளிகள் தங்களது பாலோவர்ஸ் மூலம் பணம் ஈட்டுவதற்காக பேட்ஜஸ் (Badges) என்ற வசதியை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தவிருக்கிறது இன்ஸ்டாகிராம்.

நெட்பிளிக்ஸின் புதிய இணையதளம்

நெட்பிளிக்ஸின் புதிய வெப்சைட் | Netflix
நெட்பிளிக்ஸின் புதிய வெப்சைட் | Netflix

நெட்பிளிக்ஸில் (Netflix) வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களைத் தரவரிசைப்படுத்தும் புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது நெட்பிளிக்ஸ். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் 'டாப் 10' பட்டியலை வழங்கவிருக்கிறது இந்தத் தளம். ஒரு படம் அல்லது தொடர் எத்தனை மணி நேரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த டாப் 10 பட்டியல் அமையும் எனத் தெரிவித்திருக்கிறது நெட்பிளிக்ஸ். ஆங்கிலப் படம் மற்றும் ஆங்கிலம் அல்லாத படம் என இரண்டு வகைகளின் கீழ் டாப் 10 பட்டியலைக் காணமுடியும். அதே போலத் தொடர்களுக்கும் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் அல்லாத தொடர் என இரு வகைகளின் கீழ் டாப் 10 பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர்த்து ஒவ்வொரு நாட்டிலும் அதிகம் பார்க்கப்பட்ட தொடர் எது என்கிற பட்டியலையும் நம்மால் பார்க்க முடியும். எத்தனை மணி நேரம் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதை வைத்துத் தரவரிசைப்படுத்துவது சரியான வழிமுறை தானா என்பதைத் தெரிந்து கொள்ள EY என்ற நிறுவனத்தை அணுகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது நெட்பிளிக்ஸ்.

கிரிப்டோவில் முதலீடா.. நோ!

கிரிப்டோகரண்ஸி
கிரிப்டோகரண்ஸி

"கிரிப்டோகரண்ஸிக்களில் முதலீடு செய்வது சரியான விஷயமாக எனக்குத் தெரியவில்லை" எனச் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரியான (CFO) நெட் சீகல். இதற்குக் காரணமாக கிரிப்டோகரண்ஸி மதிப்புகளின் நிலையற்ற தன்மையையும், அதற்கு போதுமான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாததையும் குறிப்பிட்டிருக்கிறார் சீகல். ட்விட்டரின் தற்போதைய முதலீட்டுக் கொள்கைகளின் படி கிரிப்டோவில் ட்விட்டரால் முதலீடு செய்ய முடியாது, ட்விட்டர் நிறுவனம் ஒரு விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அது நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என அதன் முதலீட்டுக் கொள்கைகளில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சீகல்.

நெட் சீகல் | Ned Segal
நெட் சீகல் | Ned Segal

ட்விட்டரின் CFO இப்படிச் சொல்ல, அதன் நிறுவனரான ஜாக் டார்ஸே தன்னுடைய முதல் ட்வீட்டையே டிஜிட்டல் அஸட் ஆக்கி அதனை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முதல் ட்வீட்டை NFT வடிவில் 2.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தின் மூலம் விற்றார் ஜாக் டார்ஸே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனி இன்ஸ்டாவிலும் சம்பாதிக்கலாம்!

இன்ஸ்டாகிராம் பேட்ஜஸ்
இன்ஸ்டாகிராம் பேட்ஜஸ்
ஐபோனுக்கு 'டைப் சி' போர்ட்; பப்ஜி விளையாடினால் ரூ.12,50,000 பரிசு?!  இன்றைய டெக் அப்டேட்ஸ்!

படைப்பாளிகள் தங்களது பாலோவர்ஸ் மூலம் பணம் ஈட்டுவதற்காக பேட்ஜஸ் (Badges) என்ற வசதியை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தவிருக்கிறது இன்ஸ்டாகிராம். 2020-லேயே இந்த வசதியை அறிமுகப்படுத்தியது இன்ஸ்டா, ஆனால் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும். தற்போது இந்த வசதியை அனைத்து பயனர்களாலும் பயன்படுத்த முடியும். 18 வயதுக்கு மேற்பட்ட, 10,000 பாலோர்கள் கொண்டவர்களால் இந்த வசதியைப் பயன்படுத்தி பணம் ஈட்டமுடியும். படைப்பாளிகள் வீடியோ லைவ் செய்யும்போது அவரது பாலோவர்களால் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி பேட்ஜஸை வாங்க முடியும். இந்தத் தொகை தான் அந்தப் படைப்பாளிகளுக்குச் சென்று சேரும். பேட்ஜஸ் மூலம் கிடைக்கும் தொகையில் இன்ஸ்டாகிராமின் பங்கு எதுவும் இப்போது இல்லை. ஆனால், செயலியின் மூலம் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளில் 30 சதவிகிதம் கூகுள் மற்றும் ஆப்பிளுக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளில் குறிப்பிட்ட பயனர்கள் இந்த வசதியினைத் தற்போது பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியப் பயனர்களுக்கு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NFT வெளியீடு, டாரன்டினோ மீது வழக்கு!

டாரன்டினோ
டாரன்டினோ

தன்னுடைய சிறப்பான படைப்புகளுள் ஒன்றான பலப் பிக்ஷன் படத்தைக் கொண்டு NFT-க்கள் சிலவற்றை வெளியிடும் முடிவில் இருந்திருக்கிறார் டாரன்டினோ. இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிடும்படி கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது அந்தத் திரைப்படத்தை விநியோகம் செய்த மிராமேக்ஸ் நிறுவனம். அதனைப் பொருட்படுத்தாமல் டாரன்டினோ NFT-க்களை வெளியிடும் திட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்தே டாரான்டினோ மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது மிராமேக்ஸ் நிறுவனம். பல்ப் பிக்ஷன் திரைப்படத்தின் பதிப்புரிமை தங்களிடமே இருப்பதாகவும், தங்கள் நிறுவனமும் NFT-க்களை வெளியிடும் திட்டத்தை வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். அனைத்து பதிப்புரிமையும் மிராமேரக்ஸிடம் இருந்தாலும், திரைக்கதை மறு உருவாக்கம் தொடர்பான உரிமை தங்களிடம் இருப்பதால், NFT-க்களை தங்களால் உருவாக்கி வெளியிடமுடியும் என வாதிடுகிறது டாரன்டினோ தரப்பு. யாருக்கு NFT-க்களை உருவாக்கும் முடிவுகள் செல்லும் என்பது நீதிமன்ற விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு