Published:Updated:

`இது புதுசு..!' - முதல்முறையாக டிரெண்டான #DontGoBackModi

பிரதமர் மோடி காஞ்சிபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

modi
modi

63 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன அதிபர் 2 நாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். நேற்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் மோடியும் நேரில் பார்வையிட்டனர். அதன் பிறகு, இன்று கோவளத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டனர். முன்னதாக இரு நாட்டு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் தனியாகப் பேசினர், அதன் பிறகு சீன, இந்திய அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

மோடி - ஜின்பிங்
மோடி - ஜின்பிங்

இறுதியாகத் தமிழக கலாசாரங்களை மையப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களின் கண்காட்சியை மோடியும் ஜின்பிங்கும் பார்வையிட்டனர். பின்னர் கோவளம் ஹோட்டலில் இருந்து நேராக சென்னை விமான நிலையம் சென்ற சீன அதிபர், அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்படப் பல அமைச்சர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். இதன்பின் பிரதமர் மோடியும் காஞ்சிபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி சென்னை வரும்போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. அதற்குப் பதிலடியாக #TNWelcomeModi டிரெண்ட் செய்யப்பட்டது. மோடி சமீபகாலமாகத் தமிழகம் வரும்போதெல்லாம் இந்த டிரெண்டிங் வழக்கமாகி வந்தது. இந்த வழக்கத்துக்கு மாறாக ஜின்பிங் சந்திப்பு முடிந்து மோடி திரும்பிச் செல்லும் நேரத்தில், #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

மோடி - ஜின்பிங்
மோடி - ஜின்பிங்

நீண்ட நேரம் டிரெண்டில் இருந்த இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பலரும் மோடியின் மாமல்லபுரம் விசிட்டை புகழ்ந்து பேசியிருந்தனர். தமிழர்களின் பாரம்பர்யமான வேட்டி சட்டையில் சீன அதிபரை வரவேற்றது, கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டது என அவரின் இரண்டு நாள் பயணம் தொடர்பான புகைப்படங்களைப் பதிவிட்டு மோடியை வாழ்த்தி பதிவிட்டிருந்தனர்.