Published:Updated:

டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள்... ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?!

டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள்
டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள்

செய்தி நிறுவனங்களின் செய்திகளை வைத்துதான் தனிப்பெரும் நிறுவனங்களாக இந்த டெக் நிறுவனங்கள் வளர்ந்துள்ளன என்கிறது ஆஸ்திரேலிய அரசு.

கூகுள், ஃபேஸ்புக் தங்கள் சேவைகளில் இடம்பெறும் செய்திகளுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செய்தி நிறுவனங்களுக்குச் செலுத்தும் வகையில் புதிய வரையறைகளைக் கொண்டு வர ஆஸ்திரேலியா அரசு திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் இந்தக் கொள்கைக்கு டெக் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. டெக் உலகில் சில வாரங்களாகவே இந்தப் பஞ்சாயத்துதான் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது.

சரி, சமூக வலைத்தளங்கள் ஏன் செய்தி நிறுவனங்களுக்குப் பணம் தர வேண்டும் எனத் தெரிவிக்கிறது ஆஸ்திரேலியா?
கூகுள் | Google
கூகுள் | Google
Patrick Semansky

அனைத்து துறைகளையும் போலச் செய்தி நிறுவனங்களும் முழுவதுமாக டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நன்றாகக் கவனித்தால் டெக் நிறுவனங்களும் செய்தி நிறுவனங்களும் தொழில்முறைப் போட்டியாளர்கள்தான்‌. இரண்டு துறைக்குமே விளம்பர வருமானம்தான் முதன்மையானதாக இருக்கிறது. செய்தி நிறுவனங்களின் செய்திகள் இல்லாமல் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களால் பெருமளவில் பயனர்களைக் கவர முடியாது. அப்படி செய்தி நிறுவனங்களின் செய்திகளைக் கொண்டு பயனர்களை ஈர்க்கும் டெக் நிறுவனங்கள் அதனைக் கொண்டு விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றன. இப்போது ஆஸ்திரேலியாவின் மொத்த விளம்பர வருமானத்தில் 47 சதவிகிதத்தைக் கூகுளும், 21 சதவிகிதத்தை ஃபேஸ்புக்கும் தட்டிச் செல்கின்றன. அதனால் செய்தி நிறுவனங்களின் செய்திகளை வைத்து தனிப்பெரும் நிறுவனங்களாக வளர்ந்துள்ள இந்த டெக் நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையைச் செய்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலியா அரசு டெக் நிறுவனங்களை நிர்ப்பந்திக்கிறது.

இந்த விஷயத்தில் டெக் நிறுவனங்களின் வாதமும் ஏற்றுக் கொள்ளும் படியாகத்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியா மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் மூலம்தான் செய்தி நிறுவனங்கள் வழங்கும் செய்திகளைப் படிக்கின்றனர். எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களை மீண்டும் செய்தி நிறுவனங்களின் தளத்திற்கே திரும்ப அனுப்புகிறோம். இது ஒரு கொடுத்தல் வாங்குதல் கணக்குதான். எங்களால்தான் செய்தி நிறுவனங்கள் பல பேரைச் சென்றடைய முடிகிறது, அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிகிறது என்கின்றன டெக் நிறுவனங்கள்.

Facebook
Facebook

பயனர்களின் தகவல்களை அலசி அவர்களது குணநலன்களைப் புரிந்து குறிப்பிட்ட பயனர்களுக்குக் குறிப்பிட்ட செய்திகளையும், விளம்பரங்களையும் காட்டி பெரும்பான்மையான வருமானத்தை ஈட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், செய்தி நிறுவனங்களுக்கு வரும் விளம்பரங்கள் குறைகின்றன. இதன் மூலம் செய்தியாளர்களின் வேலையும் பறிபோகிறது என்கின்றன‌ செய்தி நிறுவனங்கள்.

Apple Event: வாட்ச் சீரிஸ் 6 செம ஸ்மார்ட், ஐபேட் ஏர் சூப்பர் பவர்ஃபுல்... ஆனா அந்த விலை?!

டெக் நிறுவனங்கள் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?

எத்தனை சதவிகித தொகை செலுத்த வேண்டும் என்றோ யாருக்கெல்லாம் செலுத்த வேண்டும் என்றோ இன்னும் எதுவும் கூறப்படவில்லை. செய்தி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்துச் செலுத்த வேண்டிய தொகையை முடிவு செய்யலாம் என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மட்டும் 4.3 பில்லியன் டாலர்களை விளம்பர வருமானமாக ஈட்டியுள்ளது கூகுள்.

Facebook
Facebook
Pixabay

இந்த விவகாரத்தில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு என்ன?

கூகுள், ஃபேஸ்புக்... இந்த இரு நிறுவனங்களும் ஆஸ்திரேலியா அரசின் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த மாட்டோம் என மறுப்பு தெரிவிக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆஸ்திரேலியாவில் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்வது மற்ற நாடுகளிலும் இதைப் போன்ற நடைமுறையைக் கொண்டு வருவதற்கான முதற்படியாக இருக்கக்கூடும் என நினைக்கின்றன இந்த நிறுவனங்கள். ஃபேஸ்புக், இப்படி ஒரு சட்டம் வந்தால் தங்கள் தளத்தில் செய்திகள் பதிவிடுவதையே மொத்தமாக நிறுத்திவிடுவோம் என அதன் தரப்பில் தெரிவித்திருக்கிறது. இது செய்தி நிறுவனங்களுக்குப் பெரிய இழப்பாக இருக்கும்.

இப்படி இரண்டு தரப்புமே ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பவை என்பதால் இதில் சுமூகமான முடிவை எடுக்கும் முயற்சியில் தற்போது இருக்கிறது ஆஸ்திரேலியா அரசு.

இந்த விஷயத்தில் எந்த தரப்பு முன்வைக்கும் நியாயம் சரி... செய்தி நிறுவனங்களா, டெக் நிறுவனங்களா? கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு