Published:Updated:

`உலகின் முதல் 3D பிரின்டிங் குடியிருப்புகள்!' -தொண்டு நிறுவனத்தின் புதிய முயற்சி

3D பிரின்டிங் குடியிருப்புகள்
3D பிரின்டிங் குடியிருப்புகள்

500 சதுர அடி கொண்ட இந்த வீடுகளை 24 மணி நேரத்தில் இந்த பிரின்டர் கட்டி முடித்துவிடுகிறதாம்.

மெக்சிகோ மாகாணத்தில் உள்ள தபஸ்கோ நகரின் மிகவும் ஏழ்மையான மக்கள் மரக் கட்டைகள், கையில் கிடைத்த பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு தங்கள் வசிப்பிடங்களை உருவாக்கி, வசித்து வருகின்றனர். மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் முறையான வீடுகள் இல்லாததால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

3D பிரின்டிங்கில் கட்டப்படும் வீடு
3D பிரின்டிங்கில் கட்டப்படும் வீடு

இவர்களுக்கு உதவும் வகையில் நியூ ஸ்டோரி என்ற தனியார் தொண்டு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ஐகான் என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து 3D பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம் வீடுகளைக் கட்டித் தர முன்வந்துள்ளது. இது குறித்துப் பேசிய நியூ ஸ்டோரியின் தலைமைச் செயல் அதிகாரி பிரட் ஹாக்லர், ``இந்தப் பகுதியில் வசித்து வரும் மக்களின் ஒருநாள் வருவாய் சராசரியாக மூன்று டாலர்களே. மேலும், இது தாழ்வான பகுதியாக இருப்பதால் அவர்களது வசிப்பிடம் முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏழ்மையின் பிடியில் உள்ள இவர்களுக்கு, முறையான வீடுகள் அமைத்துத் தருவதே எங்கள் நோக்கம்" என்றார்.

Vikatan

ஒரு ஹால், ஒரு சமையல் அறை, இரண்டு படுக்கையறை, கழிப்பறை உடன் கூடிய 500 சதுர அடி பரப்பளவில் இந்த வீடுகள் கட்டப்பட உள்ளன. பேரிடர் காலங்களில் பெரிதும் பாதிக்கப்படும் பகுதியாக இருப்பதனால் வழக்கமான கான்கீரிட் கலவையை விட அதிக உறுதித்தன்மை கொண்ட கலவை இதில் பயன்படுத்தப்படுகிறது. ஐகான் நிறுவனத்தின் வல்கன் - II(Vulcan II) என்ற 3D பிரின்டர் மூலம் இந்த வீடுகள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டப்படுகின்றன.

9 அடி நீளம், 28 அடி அகலம், 33 அடி உயரமுள்ள இந்த பிரின்டர் 2,000 சதுர அடி வரை உள்ள வீடுகளைக் கட்டும் திறன் கொ‌ண்டது. மேலும், 500 சதுர அடி கொண்ட இந்த வீடுகளை, 24 மணி நேரத்தில் இந்த பிரின்டர் கட்டி முடித்துவிடும் என்று ஐகான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை வீடுகளுக்கு விலையேதும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்ற போதிலும் குறைந்தபட்சமாக தங்களின் வருவாயில் 20-30% தொகையைத் தங்களின் சொந்த வீடு என்ற எண்ணம் வர வேண்டும் என்பதற்காக வசூலிக்கலாம் என்றும் 2020-ம் ஆண்டின் முடிவிற்குள் 50 வீடுகளை கட்டித் தரவும் நியூ ஸ்டோரி திட்டமிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு