Published:Updated:

"கார்ப்பரேட் விவசாயத்தில் விருப்பமில்லை" - நீதிமன்றத்தில் ஜியோ... விவசாயிகள் போராட்டம் காரணமா?

130 கோடி இந்தியர்களுக்கு அன்னமிடும் விவசாயிகள் மீது தங்களுக்கு அளவு கடந்த மரியாதையும் நன்றியுணர்வும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது ஜியோ.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த பல வாரங்களாக நடத்திவரும் தொடர் போராட்டம், இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார்கள்.

Delhi farmer protest
Delhi farmer protest
AP Photo / Manish Swarup
புதிய வேளாண் சட்டங்கள்... ஒழுங்குமுறைக் கூடங்கள் ஒழிந்து போகும்!

இந்த சட்டங்கள் வேளாண்துறையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்கின்றன என்ற குற்றச்சாட்டும் விவசாயிகளால் முன்வைக்கப்படுகிறது. இந்த புதிய வேளாண் சட்டங்களின் பின்னணியில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானிதான் இருக்கிறார் என்பதும் அவர்களது கருத்தாக இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் இருக்கும் சிலர் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு டவர்களை சேதப்படுத்திவருகின்றனர். மின்சாரத்தைத் துண்டிப்பது, கேபிள்களை அறுப்பது போன்ற செயல்களில் பலரும் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபில் இருக்கும் 9000 ஜியோ டவர்களில் 1,500-க்கும் மேற்பட்டவை இப்படிக் கடந்த மாதம் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

இது தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார். ஆனால், எந்த வழக்குகளும் தொடுக்கப்படவில்லை, கைதுகளும் நடக்கவில்லை. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை நாடி நீதி கேட்டிருக்கிறது.

"இது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஜியோ ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டும்" என நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளது ஜியோ.

இது உள்நோக்கத்துடன் சிலரால் தூண்டிவிடப்படுகிறது. போட்டி நிறுவனங்கள் இதனால் பயனடைகின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறது ஜியோ. தங்களுக்கும் வேளாண் சட்டங்களும் எந்த தொடர்பும் இல்லை, கார்ப்பரேட் வேளாண்மையில் துளியும் விருப்பமும் இல்லை எனப் பதில் அளித்திருக்கிறது ஜியோ.

ஜியோ
ஜியோ
"ரிலையன்ஸ் ரீடெயில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மற்றும் ரிலையன்ஸ் தொடர்பான எந்த நிறுவனமும் இதுவரை கார்ப்பரேட் ஃபார்மிங்கோ, கான்ட்ராக்ட் ஃபார்மிங்கோ செய்ததில்லை. இனி செய்யும் திட்டங்களும் இல்லை."
ரிலையன்ஸ்

130 கோடி இந்தியர்களுக்கு அன்னமிடும் விவசாயிகள் மீது தங்களுக்கு அளவு கடந்த மரியாதையும் நன்றியுணர்வும் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது ஜியோ.

இதை விசாரித்த பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்குமாறு தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பஞ்சாப் தலைமை காவல்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

விவசாயிகள் அமைப்பான கிஷான் ஏக்தா மஞ்ச் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஜியோவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி வைத்ததில் முக்கிய பங்கு வகித்த இந்த அமைப்பு, "இந்தப் புதிய சட்டத்தால் லாபம் அடையப்போவது மோடியின் ஆத்ம நண்பர்களாக அதானியும், அம்பானியும்தான். அதனால்தான் எங்கள் எதிர்ப்பை ரிலையன்ஸுக்கு எதிராக காட்டுகிறோம்" என தெரிவித்திருக்கிறது அந்த அமைப்பு.

"ஜியோவின் இந்த எதிர்வினையை எங்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம்" என்கின்றனர் விவசாயிகள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு