Published:Updated:

₹1000 கோடி முதலீடு, 1,500 பேருக்கு வேலை... ஹைதராபாத்துக்கு ஒன்ப்ளஸ் ஜாக்பாட்!

OnePlus R&D Centre

இதன் மூலமாக இந்தியாவில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் பலம் பல மடங்கு அதிகரிக்கும்

₹1000 கோடி முதலீடு, 1,500 பேருக்கு வேலை... ஹைதராபாத்துக்கு ஒன்ப்ளஸ் ஜாக்பாட்!

இதன் மூலமாக இந்தியாவில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் பலம் பல மடங்கு அதிகரிக்கும்

Published:Updated:
OnePlus R&D Centre

சீனாவைச் சேர்ந்த ஒன்ப்ளஸ் நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவுக்குள் நுழைந்தது. அறிமுகம் செய்த முதல் ஸ்மார்ட்போன் தொடங்கி அண்மையில் வெளியான போன் வரை அனைத்து ஒன்ப்ளஸ் தயாரிப்புகளுமே சந்தையில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

OnePlus R&D Centre
OnePlus R&D Centre
மு.ராஜேஷ்

சீனாவுக்கு அடுத்தபடியாக சந்தை வாய்ப்பு அதிகம் இருக்கும் இடமாக இந்தியாவைக் கருதுகிறது ஒன்ப்ளஸ். அதைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத்தில் புதிதாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D centre) ஒன்றைத் திறந்திருக்கிறது.

1000 கோடி ரூபாய் முதலீடு, 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு

ஒன்ப்ளஸ் நிறுவனத்துக்கு ஏற்கெனவே ஷென்ஷென், ஷாங்காய், தைபே, நான்ஜிங் மற்றும் சான்டியாகோ என மொத்தம் ஐந்து இடங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் இருக்கின்றன. இப்போது இந்தியாவில் இந்தியாவில் ஒன்று திறக்கப்பட்டுள்ளதால் எண்ணிக்கை ஆறாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமன்றி இது ஒன்ப்ளஸ்ஸின் மிகப்பெரிய R&D சென்டர்களில் ஒன்றாகவும் இருக்கும்.

ஹைதராபாத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த புதிய R&D சென்டர். Financial district எனப்படும் இந்தப் பகுதியில் இண்டஸ்ட்ரியல் மற்றும் ஐ.டி துறை சார்ந்த கட்டடங்களே நிறைந்திருக்கின்றன. அந்தப் பகுதியில் உள்ள Sohini Tech Park கட்டடம்தான் ஒன்ப்ளஸ் R&D சென்டரின் இருப்பிடம்.

எப்படி இருக்கிறது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்?

17 தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தில் 1,86,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்துக்காக மொத்தம் ஐந்து தளங்களைச் சொந்தமாக்கியிருக்கிறது ஒன்ப்ளஸ். இதில் 36,000 சதுர அடி பரப்பளவில் அலுவலகம் இப்போதே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. மீதியிருக்கும் இடம் தேவைக்கேற்ப பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இப்போது இங்கே பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 200 மட்டுமே. இது அடுத்த மூன்று வருடத்தில் 1500-ஆக உயரப்போகிறது.

Sohini Tech Park கட்டடத்தின் பல தளங்களில் பணிகள் முழுமையடையவில்லை. 15-வது மாடியில்தான் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தற்காலிகமாக இருக்கைகளும், எல்இடி திரையும் அமைக்கப்பட்டிருந்தன. அந்த தளத்தில் இன்னும் பணிகள் முழுமையடையாமல் இருக்கின்றன. அங்கே வந்திருந்தவர்கள் அவ்வளவுதானா என நினைத்துக் கொண்டிருக்க 17-வது மாடியில் சர்ப்ரைஸ் ஒன்றை வைத்திருந்தது ஒன்ப்ளஸ். பணிகள் முழுமையாக நிறைவடைந்து முழுமையான அலுவலகமாக இருந்தது அந்தத் தளம். பத்திரிகையாளர்கள் உள்ளே சென்று பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

"அவங்களை விடவும் நாங்க நல்லா தோசை சுடுவோம்"

R&D சென்டரைத் திறந்து வைப்பதற்காக இதற்காகச் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்தார் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பீட்லாவ். " கடந்த வருடம் ஹைதராபாத்துக்கு வந்த போது பத்து வருடங்களுக்கு முன்னால் ஷென்ஷென் எப்படி இருந்ததோ அதைப் போல எனக்குத் தோன்றியது. சந்தை மற்றும் மனிதவளத் திறமை ஆகியவை இந்த நவீன நகரத்தில் கொட்டிக் கிடக்கின்றன" என்றார். மேலும் " 'மேக் இன் இந்தியா' திட்டத்தை விரிவுபடுத்துவது, இந்தியாவில் இருக்கும் திறமைகளைப் பயன்படுத்துவதில் அதிக முதலீட்டை மேற்கொள்வது மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான கண்டுபிடிப்பு மையமாக இந்தியாவை மாற்றுவது என மூன்று இலக்குகளையும் இந்த புதிய R&D சென்டர் பூர்த்தி செய்யும்." எனவும் தெரிவித்தார்.

இந்த திறப்பு விழா நிகழ்வுக்காகத் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி ராமா ராவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஒன்ப்ளஸ் ஹைதராபாத்தில் இந்த சென்டரைத் திறந்துவைக்க தெலங்கானாவின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த அவரும் ஒரு முக்கிய காரணம். மேலும் இந்த நிகழ்வில் அவரது கவனம் ஒன்ப்ளஸ் செய்த முதலீட்டின் மீதே இருந்தது. "இந்தியாவில் எவ்வளவோ டெக் நகரங்கள் இருக்கும்போது ஹைதராபாத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக பீட் லாவிற்கு நன்றி. இதன் மூலமாக 1500 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. R&D சென்டர் போல மொபைல் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும் ஒன்ப்ளஸ் இங்கே தொடங்க வேண்டும். அதற்காக ஒத்துழைப்பை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் ஹைதராபாத்தில் எவ்வளவோ வசதிகள் இருந்தாலும் விகாஸ் அகர்வால் பெங்களூரில்தான் தங்கியிருக்கிறார். நிறுவனத்தின் தலைமையிடமும் அங்கேதான் இருக்கிறது. அதை அவர்கள் இங்கே மாற்ற முயற்சி செய்யவேண்டும். பீட் லாவ் இந்தியாவுக்கு வந்தாலும் அங்கேதான் தங்குகிறார். எனக்குத் தோசை பிடிக்கும் எனச் சொன்னீர்களே பீட் லாவ், உங்களிடம் ஒன்றைக் கூறியே ஆக வேண்டும். பெங்களூரில் இருப்பவர்களை விடவும் ஹைதராபாத்தில் நாங்கள் சுவையாகத் தோசை சுடுவோம். அது மட்டுமல்ல சுடச் சுடப் பிரியாணி செய்யவும் எங்களுக்குத் தெரியும்" எனக் கலாய்த்தார் கே.டி ராமா ராவ்.

இந்த R&D சென்டரில் கேமரா லேப், தகவல் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் லேப் மற்றும் ஆட்டோமேஷன் லேப் என மொத்தம் மூன்று பரிசோதனைக் கூடங்கள் (labs) இருக்கும். இவை கேமரா தொடர்பான மேம்பாடு, 5 ஜி மற்றும் மென்பொருள் சோதனை, AI மற்றும் செயல்திறன் சோதனை ஆகிய விஷயங்களில் உதவியாக இருக்கும்.

K T Rama Rao & Pete Lau
K T Rama Rao & Pete Lau

அதுமட்டுமன்றி நெட்வொர்க், OxygenOS ஆப்கள், மென்பொருள் மேம்பாடு & பரிசோதனை, Global Carrier Customization, மற்றும் Global product development, ஆகியவற்றின் மேம்பாட்டிலும் ஒன்ப்ளஸ் கவனம் செலுத்தும்.