Published:Updated:

தற்காலிகமாக சேவையை நிறுத்தும் அமேசான், ஃபிளிப்கார்ட்!- அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் கிடைக்கும்

Amazon
Amazon

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசான் இந்தியா மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, அனைத்து மாநிலங்களையும் முடக்கி, தேசிய ஊரடங்கு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது மத்திய அரசு. அத்தியாவசியப் பொருள்கள் எளிதில் கிடைக்கும் வகையில், குறிப்பிட்ட சில கடைகளை மட்டும் திறந்து வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத இந்த அசாதாரண சூழ்நிலையில், இந்தியா முழுவதும் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் கூட்டமைப்பு. இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ``நாடு முழுவதும் முடக்கப்பட்டு, அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மக்கள் எங்களைப் பெரிதும் நம்பி இருக்கிறார்கள். மக்களுக்குச் சேவை செய்வதே எங்களின் கடமையும் கூட. ஆனால், நாடு முழுவதும் உற்பத்தி நிறுத்தப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் பொருள்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது மிகவும் சவாலாக இருக்கிறது. எங்கள் ஊழியர்களின் உடல் நலனின் மீதும் நாங்கள் கவனம் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே, அடுத்த 21 நாள்களுக்கு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் இயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறது இந்த அமைப்பு.

Amazon
Amazon

இதைத்தொடர்ந்து பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசான் இந்தியா மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. ஆனால், அதிக முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசியப் பொருள்களை மட்டும் டெலிவரி செய்கிறோம் என்கிறது இந்நிறுவனங்கள்.

அமேஸான், ஃப்ளிப்கார்ட்டில் ஃபிட்னெஸ் பொருட்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை! #HomeFitness

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அமேசான் இந்தியா நிறுவனம், ``கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உற்பத்தி மற்றும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த 21 நாள்களுக்கு அமேசான் நிறுவனத்தில் இணையதளத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே வாங்கமுடியும். டெலிவரி நேரம் முன்பைப் போல இருக்காது" என்று தெரிவித்துள்ளது.

ஃபிளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட்

ஃபிளிப்கார்ட் நிறுவனம், `இந்தியாவில் தனது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும், மீண்டும் சேவைகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு