Published:Updated:

240W, 9 நிமிடத்தில் ஒரு போன் முழுமையாக சார்ஜாகிவிடும்... புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டிய ஓப்போ!

Oppo 240w Charging

இதற்கு முன்னர் ஷாவ்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 200W சார்ஜிங் வசதிதான் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டதிலேயே அதிவேக சார்ஜிங் வசதியாக இருந்தது. ஓப்போ அதைத் தாண்டி சாதித்திருக்கிறது.

240W, 9 நிமிடத்தில் ஒரு போன் முழுமையாக சார்ஜாகிவிடும்... புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டிய ஓப்போ!

இதற்கு முன்னர் ஷாவ்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 200W சார்ஜிங் வசதிதான் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டதிலேயே அதிவேக சார்ஜிங் வசதியாக இருந்தது. ஓப்போ அதைத் தாண்டி சாதித்திருக்கிறது.

Published:Updated:
Oppo 240w Charging
ஸ்மார்ட் போன்களில் கேமரா, ப்ராசஸருக்கு அடுத்த படியாக நாம் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு வசதி பேட்டரி லைஃப். சில நேரங்களில் கேமரா உள்ளிட்ட சில அம்சங்களில் சமரசம் செய்து கூட அதிக பேட்டரி லைஃப் கொண்ட மொபைலையே நாம் தேர்ந்தெடுத்திருப்போம்.

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பேட்டரி தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை என்கிறது ஒரு தரவு. எனவே, பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என்பது ஒரு புறம் இருக்க, சார்ஜிங் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதைக் கையிலெடுத்தன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். அதில் முன்னோடியாக தற்போது வரை ஷாவ்மி நிறுவனமே இருந்து வந்தது. எப்போதெல்லாம், அதிவேக சார்ஜிங் என்ற புதிய மைல்கல் குறித்த செய்தி வருகிறதோ, அப்போதெல்லாம் ஷாவ்மி நிறுவனமே அதனை நிகழ்த்திக் காட்டியிருக்கும். ஆனால், தற்போது ஓப்போ (Oppo) நிறுவனம் அந்தச் சாதனையைச் செய்திருக்கிறது.

240W சார்ஜிங்
240W சார்ஜிங்

ஆம், அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை இந்த முறை ஓப்போ நிறுவனம் தொட்டிருக்கிறது. 240W பாஸ்ட் சார்ஜிங் வசதியை பார்சிலோனாவில் தற்போது நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress) நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓப்போ. இதோடு ஓப்போவின் Battery Health Engine வசதியுடன் கூடிய 150W பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.

ஷாவ்மியின் 200W பாஸ்ட் சார்ஜிங்:

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மே மாதம் ஷாவ்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 200W சார்ஜிங் வசதிதான் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டதிலேயே அதிவேக சார்ஜிங் வசதியாக இருந்தது. 200W சார்ஜிங் வசதியைச் செயல்படுத்திக்காட்ட அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 4,000 mAh பேட்டரி கொண்ட Mi 11 Pro மொபைலை 8 நிமிடங்களில் முழுவதுமாகச் சார்ஜ் செய்து காட்டியது ஷாவ்மி. 44 நொடிகளில் 10 சதவிகிதமும், 3 நிமிடத்தில் 50 சதவிகிதமும் சார்ஜ் ஆனது ஷாவ்மியின் அந்த Mi 11 Pro. அதன் கூடவே 120W வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் அறிமுகப்படுத்தியது ஷாவ்மி. அந்த 120W வயர்லெஸ் சார்ஜிங் வசதியின் மூலம் 4,000 mAh பேட்டரி கொண்ட மொபைலை 15 நிமிடத்தில் முழுவதுமாகச் சார்ஜ் செய்தும் காட்டியது ஷாவ்மி. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 100W சார்ஜிங் வசதியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதும் ஷாவ்மி நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஷாவ்மியின் சாதனையை முறியடித்த ஓப்போ!

கடந்த காலங்களில் ஷாவ்மி செய்து வந்த பாஸ்ட் சார்ஜிங் சாதனையை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் 240W சார்ஜிங் வசதி மூலமாக முறியடித்திருக்கிறது ஓப்போ நிறுவனம். இந்தப் புதிய சார்ஜிங் வசதியின் மூலம் 4,500 mAh பேட்டரி கொண்ட ஒரு மொபைலை 9 நிமிடங்களில் முழுவதுமாகச் சார்ஜ் செய்துவிட முடியும் எனக் கூறுகிறது ஓப்போ. மேலும், அதன் மற்றொரு 150W சார்ஜிங் வசதி மூலமாக 4,500 mAh பேட்டரி கொண்ட மொபைலை 5 நிமிடத்தில் 50 சதவிகிதமும், 15 நிமிடத்தில் 100 சதவிகிதமும் சார்ஜ் செய்துவிட முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஓப்போ.

இந்த 150W சார்ஜிங் வசதியை Battery Health Engine (BHE) அம்சத்துடன் ஓப்போ வழங்கியிருப்பதாக மேலே கூறியிருந்தோம். இந்தப் புதிய BHE வசதியை கடந்த வாரம் தாங்கள் வெளியிட்ட ஓப்போ ஃபைண்டு X5 சீரிஸில் அறிமுகப்படுத்தியது ஓப்போ. இந்த அம்சத்தின் மூலம் பேட்டரியின் செயல்பாடுகள் பாதுகாக்கப்படும் எனவும், 1600 சார்ஜ் சைக்கிள்களுக்குப் பிறகும் 80 சதவிகிதம் வரை பேட்டரியால் சார்ஜை தக்கவைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருக்கிறது ஓப்போ.

ஒரு சார்ஜ் சைக்கிள்
ஒரு சார்ஜ் சைக்கிள்

(ஒரு சார்ஜ் சைக்கிள் என்பது ஒரு பேட்டரியின் அளவை முழுமையாக உபயோகித்து முடிப்பதுதான். அதாவது 4,500 mAh அளவுள்ள ஒரு பேட்டரியில் 60 சதவிகிதத்தை ஒரு நாளில் பயன்படுத்தி விடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதன் பிறகு பேட்டரியில் 40 சதவிகிதம் சார்ஜ் மீதம் இருக்கும் போதே மீண்டும் 100 சதவிகிதத்திற்குச் சார்ஜ் செய்து விடுகிறீர்கள். 100 சதவிகிதம் சார்ஜ் ஆன பேட்டரியில் மறுநாள் 40 சதவிகிதத்தை உபயோகித்து முடிப்பது என்பது தான் ஒரு சார்ஜ் சைக்கிள். அதாவது முழுவதுமாக 4,500 mAh-ஐ பயன்படுத்தி முடிப்பதுதான் ஒரு சார்ஜ் சைக்கிள் எனப்படுகிறது. இது பேட்டரியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். மேற்கூறிய சார்ஜ் சைக்கிள் என்பது லித்தியம் அயன் பேட்டரிக்ககளுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சாதனங்களில் லித்தியம் அயன் பேட்டரிக்களே பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட அளவு பயன்பாட்டிற்குப் பின்னர் ஒரு பேட்டரியினால் தன்னுடைய அளவை விடக் குறைவான அளவு சார்ஜையே தக்க வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக 4,000 mAh அளவு கொண்ட ஒரு பேட்டரியானது 1000 சார்ஜ் சைக்கிளைக் கடந்துவிட்டால், அதனால் 50 அல்லது 60 சதவிகிதம் வரையிலான சார்ஜைதான் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அதற்குப் பின்னர் அந்த பேட்டரியால் 2,400 mAh அளவுள்ள சார்ஜையே தக்கவைத்துக் கொள்ள முடியும்.)

150W பாஸ்ட் சார்ஜிங்
150W பாஸ்ட் சார்ஜிங்

ஓப்போவின் இந்த BHE வசதியினால் 1,600 சார்ஜ் சைக்கிள்களுக்குப் பிறகும் அதனால் 80 சதவிகிதம் சார்ஜை தக்க வைத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஓப்போ. இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் மொபைல்கள் வழங்குவதை விட அதிகம். இந்த அம்சத்தைத்தான் 150W சார்ஜிங் வசதியுடன் வழங்கும் வகையில் MWC-ல் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓப்போ.

240W சார்ஜிங் வசதி நம்முடைய பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் காலம் ஆகும் என்றாலும், தாங்கள் அறிமுகப்படுத்திய BHE-யுடன் கூடிய 150W சார்ஜிங் வசதியை 2022-ன் இரண்டாம் காலாண்டில் குறிப்பிட்ட சில ஒன்ப்ளஸ் மொபைல்களில் மட்டும் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதாம். கமான் ஓப்போ!