சில ஆண்டுகளுக்கு முன் எப்போதாவது நடந்த நிகழ்வு, தற்போது வாரத்துக்கு ஒன்று, இரண்டு என்கிற கணக்கில் நடக்கத் தொடங்கிவிட்டது. ஸ்டார்ட்அப் நிறுவனம் யுனிகார்ன் நிலைக்கு உயர்வதுதான் அது. 100 கோடி டாலர் (ரூபாய் மதிப்பில் 7,400 கோடி)) மதிப்பு கொண்ட நிறுவனங்களைத்தான் யுனிகார்ன் நிறுவனங்கள் என்கிறோம். இந்த ஆண்டு இதுவரை 21 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்துள்ளன.
யுனிகார்ன் நிலையை அடைந்ததில் சமீபத்தில் அதிக கவனம் பெற்றது பாரத்பே நிறுவனம்தான். கடந்த பிப்ரவரி மாதம் நிதி திரட்டும்போது, 90 கோடி டாலர் என்னும் அளவில் மட்டுமே சந்தை மதிப்பு இருந்தது. ஆனால், தற்போது மூன்று மடங்குக்குமேல் உயர்ந்து, 285 கோடி டாலர் அளவுக்கு சந்தை மதிப்பு இருக்கிறது. தவிர, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 44 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவரும் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை வாங்க இருக்கிறது. சிக்கலில் இருக்கும் இந்தக் கூட்டுறவு வங்கியை சென்ட்ரம் நிறுவனத்துடன் இணைந்து வாங்க முடிவெடுத்திருப்பதால் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது பாரத்பே நிறுவனம்.

பாரத்பே-யின் ஆரம்ப காலம்...
இந்தியாவில் பணம் செலுத்தும் சேவைகள் மிகவும் எளிதாகப்பட்டிருக்கிறது. ஆனால், பேமென்டுக்கு சேவைக்கட்டணம் வசூலிக் கப்பட்டு வருகிறது. பலவிதமான ஆப்கள் மற்றும் வாலட்டுகள் இருந்தாலும் சிறு நிறுவனங்கள் அல்லது கடைக்காரர்களின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகை வரும்போது கமிஷனுக்குப் பிறகே வருகிறது. சராசரியாக 1.5% அளவுக்கு சிறு கடைக்காரர் லாபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால், பொருள் அல்லது சேவைக்காக மக்கள் தரும் பணம், சிறு கடைக்காரர்களுக்கு முழுவதுமாகக் கிடைத்தால் எப்படி இருக்கும். தவிர, அந்தப் பணமும் ஒன்றிரண்டு நாள் கழித்துக் கிடைப்பதைவிட, அதே நாளில் வந்தால் சிறு கடைக்காரர்களுக்கு பயன் தருமே என்னும் ஐடியாவில் பிறந்ததுதான் பாரத்பே நிறுவனம்.
வழக்கமாக டெக்னாலஜி நிறுவனங்களில் நிறுவனர்கள் சமகாலத்துக்கு நபர்களாக இருப்பார்கள். ஆனால், பாரத் பே நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஆஷ்னீர் குரோவர் (Ashneer Grover) ஐ.ஐ.எம்மில் படித்து பல நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார். இன்வெஸ்ட் மென்ட் பேங்கிங் மற்றும் குரோபர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர். பாரத்பே நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் இன்னொருவரான ஷஷ்வத் நக்ரனி (Shashvat Nakrani). இவர் ஐ.ஐ.டி-யில் படித்துக்கொண்டிருக்கும்போது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் குரோவரை சந்தித்தார். அப்போது இருவரும் இந்த ஐடியா குறித்து விவாதித்தனர். அதைத் தொடர்ந்து தங்களுடைய சொந்த பணத்தை முதலீடு செய்து பாரத்பே நிறுவனத்தை உருவாக்கினார்கள்.
இவர்கள் நிறுவனத்தைத் தொடங்கும்போது பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் பெரிய வளர்ச்சியை அடைந்திருந்தன. இருந்தாலும் நம்பிக்கையுடன் நிறுவனத்தைத் தொடங்கினார் கள். ரீடெயில் துறையில் குரோ வருக்கு அனுபவம் இருந்தது. ரீடெயில் துறையில் மார்ஜின் மிகவும் குறைவு. இரண்டாவது, ரீடெயில் துறையினர் சேவைக்காக பணம் செலுத்த விரும்ப மாட்டார்கள். ஆனால், வளர்ச்சிக்கு முதலீடு தேவைப் பட்டால் கடன் வாங்கி சரியாக வட்டியைச் செலுத்துவார்கள் என்று புரிந்துவைத்திருந்தனர்.
அதனால் இவர்களது இலவச சேவை முதல் ஆயிரம் வாடிக்கை யாளர்களுக்குச் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து ரீடெயில் நிறுவனங்களுக்குத் தேவையான கடனை வழங்கினார்கள். இந்தச் சூழலில் ஆயிரம் வாடிக்கை யாளர்கள், 50,000 வாடிக்கை யாளர்களாக மாறினார்கள். அதே சமயத்தில் போட்டி நிறுவனங்களும் இதே மாதிரி யான சேவையை வழங்கத் தொடங்கின.
அதனால் சிறு நிறுவனங் களுக்கு கடன் வழங்கும் நிறுவனமாகவும் பாரத்பே மாறியது. இவர்கள் மூலமாகப் பணப்பரிவர்த்தனை நடக்கும் பட்சத்தில், ஒரு நிறுவனத்துக்கு எவ்வளவு கடன் கொடுக்க முடியும் என்பதை கிட்டத்தட்ட துல்லியமாகக் கணிக்கின்றனர். தவிர, எந்தவிதமான அடமான மும் இல்லாமல் கடன் கொடுக்கப்படுகிறது என்பதால், சிறு நிறுவனங்களும் அதை விரும்புகின்றன. சுமார் ரூ.20,000 முதல் ரூ.7 லட்சம் வரையில் கடன் தரப்படுகின்றன. இவை அனைத்தும் ஓர் ஆண்டுக்கு உட்பட்ட கடன்கள்.
மேலும், கடன்கள் என்பது மாதத் தவணையில் வசூலிக்கப் பட்டுவந்த நிலையில், சிறு நிறுவனங்களுக்கு தினசரி வருமானம் இருப்பதால், தினசரி தவணை மூலம் கடன் வசூலிக்கப் பட்டன. மாதத்துக்கு 300 கோடி அளவுக்குக் கடன் வழங்கப்படு கின்றன. தற்போது கடனை வாங்குவது பெரிய சிக்கல் என்றாலும், பணப்பரிவர்த்தனை இவர்கள் மூலம் நடப்பாதால் 96% கடன்கள் திரும்பிவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல, பாரத்பே நிறுவனம் பாரத் ஸ்வைப் என்னும் பாயின்ட் ஆஃப் சேல் மெஷின் களையும் விநியோகம் செய்கிறது. இதற்கு சேவைக் கட்டணம் கிடையாது. ஆனால், ஒருமுறை கட்டணம் உண்டு. இந்த சந்தை யிலும் மூன்றாவது இடத்தில் பாரத்பே இருக்கிறது.


பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி
நிறுவனத்துக்குக் கிடைக்கும் வருமானத்தில் 90 சதவிகிதத்துக்கு மேல் கடன் வழங்குவது மூலமாகவே கிடைக்கிறது. அதனால் 2019-ம் ஆண்டு என்.பி.எஃப்.சி (வங்கி அல்லாத நிதி நிறுவனம்) அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், முதலீட்டாளர்கள் மொரிஷியஸில் இருப்பதால், ரிசர்வ் வங்கி வழங்க வில்லை. அதனால் சிக்கலில் இருக்கும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியை சென்ட்ரம் நிறுவனத்துடன் இணைந்து வாங்கத் திட்டமிட்டது. வங்கி அல்லாத நிதி நிறுவனம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டது. ஆனால், அதைவிட கூடுதல் அமைப்பான வங்கிக்கே அனுமதி கிடைத்துவிட்டது. இதற்கு ரிசர்வ் வங்கியும் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கியிருக்கிறது. புதிய நிறுவனத்தில் சென்ட்ரம் மற்றும் பாரத்பே சம அளவில் இருக்கும். மேலும், இந்தக் கூட்டுறவு வங்கி, ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்காக செயல்படும் எனத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் முழுமையான அனுமதிக்கு பிறகே இது குறித்து இன்னும் அதிகமான தகவல்கள் தெரியவரும்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறிய வங்கிகளுக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது. இவர்களிடம் டெக்னாலஜி பலம் இருக்கிறது. அதே சமயம், ஐந்து ஆண்டுகள் சிறிய வங்கியாகச் செயல்படும்பட்சத்தில் யுனிவர்சல் பேங்கிங் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது சில வங்கிகள் அந்தத் திட்டத்தில் இருப்பதால், சிறிய வங்கிக்கான தேவை இருக்கும் எனக் கருதப்படுகிறது.
குறுகிய காலத்தில் ஃபைனான்ஷியல் டெக்னாலஜி பிரிவில் முக்கிய நிறுவனமாக பாரத்பே வளர்ந்திருக்கிறது. பேடிஎம், போன்பே, ராசர்பே மற்றும் ஃபைன்லேப்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குப் பிறகு, அதிக சந்தை மதிப்புடைய நிறுவனமாக பாரத்பே இருக்கிறது. அதுவும் நிறுவனம் தொடங்கி மூன்று ஆண்டுகளில். மற்றவை டெக்னாலஜி நிறுவனங்களாக இருக்கும் சுழலில் பாரத்பே ஒரு படி மேலே சென்று சிறிய வங்கியாக மாற இருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் பாரத்பே நிறுவனம் சிறிய வங்கியாக மாறி, செயல்படுவதை நாம் பார்க்கலாம்.
பி.எம்.சி வங்கியை நடத்த அனுமதி!
1984-ம் ஆண்டு தொடக்கப்பட்ட இந்த வங்கியில், முறைகேடு நடந்ததை அடுத்து, 2019-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. ஹெச்.டி.ஐ.எல் குழுமத்துக்கு ரூ.6,500 கோடி கடன் கொடுத்தது. வங்கி கொடுத்த மொத்த கடனில் இது 73% ஆகும். முறைகேடாகக் கொடுக்கப்பட்ட இந்தக் கடன், வாராக்கடனாக மாறியது. அதனால் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. இந்த வங்கியை எடுத்து நடத்த கொள்கை அளவிலான அனுமதியை ரிசர்வ் வங்கி பாரத்பே மற்றும் சென்ட்ரம் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது!