`வணிகர்களுக்கென பிரத்யேக ஆப்; அனைத்துக்கும் ஒரே QR கோடு!'- பேடிஎம் அதிரடி அறிமுகம்

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இரண்டு டிரில்லியன் ரூபாய் அளவிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக NPCI (National Payments Corporation of India) தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி பேமன்ட் செயலியான பேடிஎம் (Paytm) வணிகர்களுக்கு மட்டுமான பிரத்யேகமான `Paytm for Business' செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தி, பின் அதைத்தொடர்ந்து பேசிய அந்நிறுவனத்தின் முதுநிலைத் துணைத் தலைவர் சௌரப் ஷர்மா, ``கடந்த சில ஆண்டுகளாகவே பேடிஎம்-ன் வளர்ச்சி சீராக இருந்து வருகிறது.

அதிகளவிலான வணிகர்கள் பேடிஎம்-ஐ பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். வணிகர்களுக்கு உதவும் வகையில் எளிமையாகவும், அவர்களது தேவையின் அடிப்படையிலும் செயலியை மேம்படுத்தி வருகிறோம்" என்று கூறினார்.
பேடிஎம்-ல் புதிதாக All-in-one QR கோடை அறிமுகம் செய்து வைத்தார். இந்தப் புதிய All-in-one கோடின் மூலம் பேடிஎம் வாலெட், RuPay கார்டு, UPI ஆகியவை மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும், பேடிஎம்-ல் இனி வணிகர்களின் வசதிக்காக நிறைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என நிறுவனத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் UPI மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இரண்டு டிரில்லியன் ரூபாய் அளவிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக NPCI (National Payments Corporation of India) தெரிவித்துள்ளது.