Published:Updated:

`டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட பெரும் பிளவு!’ - டிக்டாக், வீ சாட் செயலிகளுக்குத் தடைவிதித்த ட்ரம்ப்

டிக்டாக் - வீ சாட்
டிக்டாக் - வீ சாட்

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் டிக்டாக் மற்றும் வீசாட் போன்ற செயலிகள் தடையாக இருப்பதாக அவற்றுக்கு அதிபர் ட்ரம்ப் தடைவிதித்துள்ளார்.

இந்தியா - சீனாவுக்கு இடையேயான எல்லை பதற்றத்தின்போது, சீன செயலிகளால் இந்தியாவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி டிக்டாக், ஹலோ உள்பட 100-க்கும் அதிகமான செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதித்தது மத்திய அரசு. இந்திய அரசின் இந்த செயலை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அவரது கட்சி எம்.பிகளும் வெகுவாக வரவேற்றிருந்தனர். இதேபோன்று அமெரிக்காவிலும் விரைவில் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

அதன்படி, சீன செயலிகளான டிக்டாக், வீ சாட் (WeChat) போன்ற செயலிகளுக்குத் தடை விதிக்கும் உத்தரவில் நேற்று ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாள்களிலிருந்து நடைமுறைக்கு வரும் எனக் கூறியுள்ளார்.

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்?

செயலி தடை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களைத் தானாக அபகரிக்கிறது. அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து மதிப்பு ஆகியவற்றை இந்த செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்துகொள்கிறது. இதனால் அமெரிக்காவின் சாதாரண மக்கள் தொடங்கி, பெரும் அதிகாரிகள் வரை அனைவரது நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அவர்களை மிரட்டவும் முடியும்.

வீ சாட்
வீ சாட்

எனவே, இந்த செயலி அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது, இந்த உத்தரவு அடுத்த 45 நாள்களில் நடைமுறைக்கு வரும். அதேபோல் சீனாவின் டென்செண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட வீ சாட் செயலியைத் தடை செய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக்: `4 நாடுகளுக்கான உரிமை; ட்ரம்ப்பின் கவலை!’ - மைக்ரோசாஃப்ட்டின் புது பிளான்

``அமெரிக்கா மற்றும் சீனா இடையே இருக்கும் டிஜிட்டல் உலகில் ஏற்பட்ட பெரும் பிளவு இது. நிச்சயமாக இதற்கு சீனா பதிலடி கொடுக்கும். மேலும், அமெரிக்காவில் வெறும் 3 லட்சம் வீ சாட் பயனாளர்கள் மட்டுமே உள்ளனர் அவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இந்த செயலி, டிக்டாக்கை விட அதிக தகவல்களைச் சேகரிக்கிறது. அதுவும் சீன மொழியில் சேகரிக்கிறது” என வாஷிங்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஆய்வுகளுக்கான சிந்தனைக் குழுவின் தொழில்நுட்ப நிபுணர் ஜேம்ஸ் லூயிஸ் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு