Published:Updated:

"இந்தியாவில் மீண்டும் வருவோம்!"- PUBG Corporation... எப்படிச் சாத்தியம்?

PUBG
PUBG

"PUBG Corporation என்னும் தென்கொரிய நிறுவனமான எங்களின் அறிவுசார் சொத்து இது. தொடர்ந்து எங்களது தனித்துவமான Battle Royale அனுபவத்தை அனைத்து மக்களுக்கும் வழங்கிவருகிறோம்."

சில மாதங்களாகவே சீன-இந்திய உறவு என்பது மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 118 ஆப்களைத் தடைசெய்வதாகச் சமீபத்தில் அறிவித்திருந்தது அரசு. இதில் பிரபல மொபைல் கேம்மான PUBG-ம் இடம் பெற்று இருந்தது. ஏற்கெனவே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது PUBG.

PUBG உட்பட 118 ஆப்களுக்குத் தடை... பின்னணி என்ன, மீண்டும் வருமா?

PC, Xbox, PS வெர்ஷன்களில் நேரடி சீன தொடர்பு என்பது கிடையாது. மொபைல் வெர்ஷனை வெளியிடுவது மட்டும்தான் 'டென்சென்ட் கேம்ஸ்' என்னும் சீன நிறுவனம். இதனால்தான் மொபைல் கேமுக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. PC, Xbox, PS வெர்ஷன்களில் உங்களால் தொடர்ந்து PUBG ஆட முடியும்.

இந்நிலையில், விரைவில் மீண்டும் இந்தியாவில் PUBG-யை பார்க்கலாம் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது PUBG-யை வடிவமைத்து வெளியிடும் PUBG corporation நிறுவனம். அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

"PUBG MOBILE Nordic Map: Livik மற்றும் PUBG MOBILE Lite ஆகிய ஆப்களுக்கு இந்தியாவில் போடப்பட்டிருக்கும் தடையைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். சர்ச்சைகளைக் கடந்தும் பல இந்தியர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களின் உத்வேகத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அரசு எடுத்திருக்கும் இந்த முடிவை மதிக்கிறோம். நாங்களும் அவற்றுக்கு முன்னுரிமை தரும் நிறுவனம்தான். இந்திய அரசுடன் இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என நம்புகிறோம். இந்திய அரசு எதிர்பார்க்கும் நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த மாற்றங்களுடன் விரைவில் PUBG களத்தில் மீண்டும் இந்தியப் பயனர்கள் களமிறங்க முடியும் என நம்புகிறோம்.

PUBG Corporation
PUBG Corporation

சமீபத்திய சர்ச்சைகளை எல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவில் PUBG mobile-ல் டென்சென்ட் நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம் அனைத்தையும் நீக்குகிறோம். இந்தியாவில் இனி PUBG தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் முழுவதுமாக நாங்களே பார்த்துக்கொள்ளப் போகிறோம். தங்களுக்கென செதுக்கப்பட்ட புதிய PUBG அனுபவத்தை இந்தியர்கள் விரைவில் பெறுவார்கள்" என்று தெரிவித்த PUBG Corporation, PUBG ஒரு தென்கொரியா படைப்புதான் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது.

"PLAYER UNKNOWN’S BATTLEGROUNDS-ன் மொபைல் வெர்ஷன்தான் PUBG Mobile. PUBG Corporation என்னும் தென்கொரிய நிறுவனமான எங்களின் அறிவுசார் சொத்து இது. தொடர்ந்து எங்களது தனித்துவமான Battle Royale அனுபவத்தை அனைத்து மக்களுக்கும் வழங்கிவருகிறோம். இந்தியாவிலும் பயனாளர்களுக்கு அதை மீண்டும் வழங்க முடியும் என்று நம்புகிறோம். ஈ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள், சிறப்பு நிகழ்வுகள் என இந்தியாவிற்குச் சிறப்பு திட்டங்கள் வைத்திருக்கிறோம்."

அடுத்த கட்டுரைக்கு