Published:Updated:

`இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு; ஜிபிஎஸ்-க்கு மாற்று!’ - மொபைலுக்கு வரும் இஸ்ரோவின் புதிய நேவிகேஷன்

இனிமேல், ஜிபிஎஸ்ஸை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம். இஸ்ரோவின் முயற்சியால் மொபைலுக்கு வரும் நேவிகேஷன் சிஸ்டம்.

இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்

ஸ்மார்ட்போன்களில் வெகு காலமாகவே அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான நேவிகேஷன் அமைப்பான ஜிபிஎஸ் முதன்மையானதாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் ஜிபிஎஸ் இருக்கும் என்ற அளவுக்கு இந்தத் துறையில் அதன் ஆதிக்கம் இருந்து வருகிறது.

Mobile Navigation
Mobile Navigation

ஜிபிஎஸ் என்ற வழிகாட்டும் அமைப்பானது போன்களில் மட்டுமன்றி ராணுவம் போன்ற வேறு சில துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்குச் சொந்தமான இதில், சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் பல உலக நாடுகள் அவர்களுக்கென தனியாக நேவிகேஷன் அமைப்பை உருவாக்க முடிவு செய்தன.

முதலாவதாக ரஷ்யா அதற்கான வேலைகளில் இறங்கி குளோனாஸ் (GLONASS) என்ற நேவிகேஷன் அமைப்பை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் கலிலியோ (Galileo)-வை உருவாக்கியது. பின்னர், சீனாவும் பெய்டோ (BeiDou)வை உருவாக்கியது. இந்த நாடுகளைப் பின்பற்றி இந்தியாவும் தனக்கென நேவிகேஷன் அமைப்பை உருவாக்க முடிவு செய்தது.

IRNSS (Indian Regional Navigation Satellite System) எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்துக்காக அரசு கடந்த 2013-ம் ஆண்டில் அனுமதி கொடுத்து. அதன் பின்னர், இஸ்ரோ நேவிகேஷன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தத் தொடங்கியது. இதுவரை 9 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன, அவற்றில் 7 - செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக NavIC (Navigation with Indian Constellation) எனப்படும் இந்தியாவுக்குச் சொந்தமான நேவிகேஷன் அமைப்பும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் குளோனாஸ், ஐரோப்பிய யூனியனின் கலிலியோ மற்றும் சீனாவின் பெய்டோ ஆகியவை ஸ்மார்ட்போன்களில் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் இந்தியாவின் சொந்த தயாரிப்பான NavIC என்ற நேவிகேஷன் அமைப்பை போனில் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது குவால்காம் நிறுவனம். அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம் உலக அளவில் மொபைல்களுக்கான ப்ராஸசர் தயாரிப்பில் முன்னணியில் இருந்துவருகிறது. சந்தையில் இருக்கும் பெரும்பாலான மொபைல்களில் குவால்கமின் ஸ்னாப்டிராகன் ப்ராஸசர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இஸ்ரோ சிவன்
இஸ்ரோ சிவன்

இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள்களின் சிக்னல்களை சப்போர்ட் செய்யும் வகையிலான சிப்களை குவால்காம் தயாரிக்கத் தொடங்கும். வரும் 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் வியாபார ரீதியான ஸ்மார்ட்போன்களில் இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது குவால்காம். ``நாட்டின் முன்னேற்றத்துக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சியில் NavIC அடுத்த கட்டமாகும். அதை மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறோம். குவால்காமின் தலைமையில் மொபைல்களில் கொண்டு வரப்படும் NavIC ஒரு இந்தியத் தயாரிப்பை ஒவ்வொரு இந்தியனுக்கும் கொண்டு சேர்க்கும்” என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார்.