Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக் கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக் கேள்வி-பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

வணக்கம். நான் Dunzo எனும் டெலிவரி ஆப்பில், டெலிவரி பாயாக வேலை செய்கிறேன். நான் தற்சமயம் பழைய யூனிகார்ன் BS-4 பைக்தான் பயன்படுத்தி வருகிறேன். ஒரு நாளைக்கு 150 கிமீ பயணிப்பேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு எனது பைக்கின் மைலேஜ், எனது வருமானத்தையே காலி செய்துவிடுகிறது. பைக்கும் நாட்கணக்காவதால், செலவு வேறு வைக்கிறது. எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. அதாவது, பேசாமல் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கி விடலாமா என்று நினைக்கிறேன். அப்படி வாங்கினால், எது வாங்கலாம்? எலெக்ட்ரிக் செட் ஆகவில்லை என்றால், பெட்ரோல் பைக்குக்கே போகலாம் என்றால், எந்த பைக்கை ரெக்கமண்ட் செய்வீர்கள்? பெர்ஃபாமன்ஸெல்லாம் முக்கியம் இல்லை; மைலேஜ் தரும் பைக்காக இருக்க வேண்டும்.

_ செல்வகுமார், வேளச்சேரி.

பைக்கின் மைலேஜ்
பைக்கின் மைலேஜ்

உங்களின் கஷ்டம் புரிகிறது. உங்களின் ஐடியா நல்ல ஐடியாதான். பெட்ரோல் செலவை மிச்சம் பிடிக்கலாம்தான். ஆனால், நீங்கள் டெலிவரி பணிபுரிவதாலும், உங்களின் ஒரு நாள் பயண தூரம் அதிகமாக இருப்பதாலும், எலெக்ட்ரிக் பைக்குகள் நிச்சயம் உங்களுக்கு செட் ஆகுமா என்று தெரியவில்லை. காரணம், விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் பைக்குகள் ஒரு ஃபுல் சார்ஜிங்குக்கு சுமார் 80 கிமீதான் வரும் என்று அந்த கம்பெனிகளே சொல்கின்றன. ரியல் டைமில் நிச்சயம் இதன் ரேஞ்ச் குறையும். அதாவது, 70 முதல் 75 கிமீ வரைதான் பயணிக்க முடியும். இதற்கு நீங்கள் பைக்கை உங்கள் வீட்டிலேயே 5 மணி நேரம் ஃபுல் சார்ஜ் போட வேண்டும். எலெக்ட்ரிக் பைக்குகள், தினசரி ஒரு குறிப்பிட்ட தூரம் அலுவலகம் சென்று வரும் கம்யூட்டர்களுக்கு மட்டுமே மிகச் சரியாக இருக்கும் என்பது எங்கள் ஐடியா. பெட்ரோல் பைக்கைப் பொறுத்தவரை, இப்போது மார்க்கெட்டில் இருக்கும் மைலேஜ் பைக்குகளில் முதலிடத்தில் இருப்பது பஜாஜின் ப்ளாட்டினாதான். இதில் 100 சிசி டிஸ்க் வேரியன்ட் உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். லேசான பெர்ஃபாமன்ஸுக்கு ப்ளாட்டினாவின் 110சிசி இருக்கிறது. இதில் 5 கியர் உண்டு. இதன் ஆன்ரோடு விலையும் 75,000-த்துக்குள்தான் வரும். இதுவே ஸ்கூட்டர் என்றால், ஹீரோவின் ப்ளஷர் உங்களுக்குச் சரியாக இருக்கும். இதுதான் பெர்ஃபாமன்ஸ் ஓரளவு கொண்ட, விலை குறைவான ஸ்கூட்டர்.

உங்களின் கஷ்டம் புரிகிறது. உங்களின் ஐடியா நல்ல ஐடியாதான். பெட்ரோல் செலவை மிச்சம் பிடிக்கலாம்தான். ஆனால், நீங்கள் டெலிவரி பணிபுரிவதாலும், உங்களின் ஒரு நாள் பயண தூரம் அதிகமாக இருப்பதாலும், எலெக்ட்ரிக் பைக்குகள் நிச்சயம் உங்களுக்கு செட் ஆகுமா என்று தெரியவில்லை. காரணம், விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் பைக்குகள் ஒரு ஃபுல் சார்ஜிங்குக்கு சுமார் 80 கிமீதான் வரும் என்று அந்த கம்பெனிகளே சொல்கின்றன. ரியல் டைமில் நிச்சயம் இதன் ரேஞ்ச் குறையும். அதாவது, 70 முதல் 75 கிமீ வரைதான் பயணிக்க முடியும். இதற்கு நீங்கள் பைக்கை உங்கள் வீட்டிலேயே 5 மணி நேரம் ஃபுல் சார்ஜ் போட வேண்டும். எலெக்ட்ரிக் பைக்குகள், தினசரி ஒரு குறிப்பிட்ட தூரம் அலுவலகம் சென்று வரும் கம்யூட்டர்களுக்கு மட்டுமே மிகச் சரியாக இருக்கும் என்பது எங்கள் ஐடியா. பெட்ரோல் பைக்கைப் பொறுத்தவரை, இப்போது மார்க்கெட்டில் இருக்கும் மைலேஜ் பைக்குகளில் முதலிடத்தில் இருப்பது பஜாஜின் ப்ளாட்டினாதான். இதில் 100 சிசி டிஸ்க் வேரியன்ட் உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். லேசான பெர்ஃபாமன்ஸுக்கு ப்ளாட்டினாவின் 110சிசி இருக்கிறது. இதில் 5 கியர் உண்டு. இதன் ஆன்ரோடு விலையும் 75,000-த்துக்குள்தான் வரும். இதுவே ஸ்கூட்டர் என்றால், ஹீரோவின் ப்ளஷர் உங்களுக்குச் சரியாக இருக்கும். இதுதான் பெர்ஃபாமன்ஸ் ஓரளவு கொண்ட, விலை குறைவான ஸ்கூட்டர்.நான் கோவையில் வசிக்கிறேன். நான் 3 ஆண்டுகளாக ஸ்கோடா ரேபிட் பயன்படுத்தி வருகிறேன். கார் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு. எனது அப்பார்ட்மென்ட்டில் கார் பார்க்கிங் வசதி இருந்தாலும், அதை உள்ளே கொண்டு செல்லும்போது, மேடாகக் கட்டியிருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு முறை நான் காரை உள்ளே கொண்டு போகும்போதும், கீழே ‘தடார் தடார்’ என அடிவாங்கும்போது மனசு வலிக்கிறது. எனக்கு பெர்ஃபாமன்ஸ், மைலேஜ் இவற்றையெல்லாம் தாண்டி, கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமான காராக, ஸ்பீடு பிரேக்கர்களில் தட்டாத காராக எனக்குப் பரிந்துரை செய்யுங்களேன்! விலை 10 லட்சத்துக்குள் இருக்கட்டும்!

– சுந்தர் லட்சுமணன், கோவை.

காம்பேக்ட் எஸ்யூவி
காம்பேக்ட் எஸ்யூவி

வணக்கம். தொடர்ந்து கீழே அடிவாங்கியும் உங்கள் கார் இன்னும் வைத்திருக்கிறீர்கள் என்றால் ஆச்சரியம்தான். எதற்கும் உங்கள் அண்டர்பாடி சேஸி, ஆயில் சம்ப் போன்றவற்றை அடிக்கடி சர்வீஸில் செக் செய்து கொள்ளுங்கள். விஷயத்துக்கு வருகிறோம். உங்களின் தேவையைப் பார்த்தால், உங்களுக்கு எஸ்யூவி மட்டும்தான் சரியான சாய்ஸாக இருக்கும். நீங்கள் ரேபிட்டில் இருந்து காம்பேக்ட் எஸ்யூவிக்கு மாறுவது பொருத்தமாக இருக்காது. எஸ்யூவிகளைப் பொருத்தவரை நீங்கள் டீசலா/பெட்ரோலா என்று சொல்லவில்லை. மேலும் இப்போது டீசலுக்கான ஆப்ஷன்களும் மார்க்கெட்டில் குறைவுதான். ரெனோவின் டஸ்ட்டர் நல்ல ஆஃப்ரோடு தன்மை கொண்ட எஸ்யூவி. இதன் 156bhp பவர் கொண்ட டர்போ பெட்ரோல், பெர்ஃபாமன்ஸில் வெளுத்து வாங்குகிறது. இதன் பிக்–அப்பும் ஓகே ரகம்தான். நீங்கள் கேட்ட விஷயம் டஸ்ட்டரில் உண்டு. ஆம், இதன் கி.கிளியரன்ஸ் 205 மிமீ. அதனால், நிச்சயம் உங்கள் கார், அப்பார்ட்மென்ட் மேட்டில் இடிக்க வாய்ப்பில்லை. என்ன, டஸ்ட்டரில் சில குறைபாடுகள் உண்டு. பெரிதாக பாட்டில் ஹோல்டர்கள்கூட இருக்காது. வசதிகளும் சுமார்தான்.

இதை ஒப்பிடும்போது இன்னொன்றும் தோன்றுகிறது. நிஸான் கிக்ஸை ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள். டஸ்ட்டரின் அதே பெர்ஃபாமன்ஸ்தான் இதிலும். இதன் கி.கிளியரன்ஸ் டஸ்ட்டரைவிட 5 மிமீ அதிகம். 360டிகிரி கேமரா, ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ் என்று இதில் வசதிகளும் எக்கச்சக்கம்.

அதையும்விட விலை குறைந்த எஸ்யூவி என்றால், 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியான நிஸான் மேக்னைட்டும் உங்களுக்குச் சரியான ஆப்ஷன். டஸ்ட்டர் போலவே இதிலும் 205 மிமீ கி.கிளியரன்ஸ்தான். கிக்ஸில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இதில் உண்டு. இதன் XV Premium மாடல் 10.02 லட்சம் ஆன்ரோடு விலை வரும்.

என் மகன் ஆத்விக்குக்கு இப்போது 10 வயதாகிறது. அவனுக்கு பைக் என்றால் உயிர். வீட்டில் எப்போதுமே மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றிய சேனல்களையே பார்க்கிறான். ராஸி, மார்க்யூஸ், ஜோஆன்மிர் பற்றி இப்போதே பேசுகிறான். பைக்குகளின் பெயரைச் சரியாகச் சொல்கிறான். அவனுக்கு பைக் ரேஸில் ஆர்வம் என்று நினைக்கிறேன். இப்போதே சில டிராஃபிக் விதிகளைப் பற்றியெல்லாம் பாடம் எடுத்து வருகிறேன். என் மகனை ஒரு தலைசிறந்த, ஒழுக்கமான ரேஸர் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

– நிஷாந்த், சென்னை.

ரேஸர்
ரேஸர்

முதலில் நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள் என்பதற்குப் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக, சென்னை–கோவை வாசிகளுக்கு ரேஸர் ஆவதற்குப் பெரும் பிரயத்தனப்படத் தேவையில்லை. முன்பு ரேஸர் ஆவதற்கு 13 வயதை நிர்ணயித்திருந்தார்கள். இப்போது அதை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து விட்டார்கள். அதாவது, 11 வயதிலேயே ஒருவர் ரேஸர் ஆகிவிடலாம். பிசிக்கல் சோதனையில் பைக்கை நிறுத்தும்போது, அவர்கள் கால் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். அவ்வளவுதான். முதலில் FMSCI அங்கீகாரம் பெற்ற அகாடமிகளில் முறையான பயிற்சி எடுக்க வேண்டும். சென்னை, கோவை, பெங்களூரு என்று நிறைய அகாடமிகள் உள்ளன. ரேஸிங் லைசென்ஸ் எடுக்க, இரண்டு அல்லது மூன்று நாள்கள் பயிற்சியே போதுமானதுதான். ஆனால், உங்கள் மகனின் திறமைக்கும் உங்களின் ஆர்வத்துக்கும் 3 அல்லது 4 மாதங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப நல்ல பயற்சி எடுத்தால், நல்ல ரைடர் ஆகி வெளியே வரலாம். ரைடருக்குத் தேவையான ரைடிங் கியர்ஸ், ஹெல்மெட், தரமான ஷூக்கள் என்று எல்லாமே அகாடமி பார்த்துக் கொள்ளும். அதன் பிறகு சென்னை தரமணியில் உள்ள FMSCI–ன் அலுவலகத்தில் சென்று FMSCI Road Racing License பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 1,400 ரூபாய் கட்டணம். இந்த லைசென்ஸை ஒவ்வொரு ஆண்டும் ரென்யூவல் செய்ய வேண்டும். பின்பு, ரேஸில் கலந்து கொள்ள வேண்டியதுதான். அகாடமி பயிற்சி அல்லாமல், தனியாகவும் முடிந்தால் Novice Category–ல் நுழைத்து விடுங்கள். இது Beginnerகளுக்கான பயிற்சி.

ரேஸிங்கைப் பொருத்தவரை, உங்கள் மகனின் ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில் முதலில் நீங்கள் இதில் தெளிவு பெற வேண்டும். உங்களுக்கு ஒரு ஆப்ஷன் இருக்கிறது. மோட்டார் விகடனும் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் இணைந்து நடந்தும் ரேஸிங் பற்றிய அகாடமியில் நீங்கள் ரெஜிஸ்ட்டர் செய்து கொண்டால், உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும். இதில் ரேஸர் ஆவது மட்டுமில்லை; ரேஸிங் துறையில் என்னென்ன துறைகள் உண்டு; வேலைவாய்ப்புகள்; ஒரு ரேஸ் எப்படி நடக்கும்; எந்த மாதிரி நடக்கும் என்பது பற்றி எல்லா விஷயங்களையும் இரண்டு நாள் இங்கே விளக்க இருக்கிறோம். முடிந்தால் கலந்து கொண்டு பயன் பெறலாமே!

நான் ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரிகிறேன். இதற்கு முன்பு ஸ்ப்ளெண்டர் வைத்திருந்தேன். சில ஊர் சுற்றும் வாண்டர்லஸ்ட்டுகளைப் பார்த்து எனக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டது. இதற்காகவே புதிதாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை வாங்கிவிட்டேன். முதல் பயணமாக ஊட்டி, மசினகுடி போன்ற இடங்களுக்குக் கிளம்பலாம் என்றிருக்கிறேன். எனக்கு டிப்ஸ் ப்ளீஸ்!

பயணம்
பயணம்

பொதுவாக, கார் பயணங்களைவிட பைக் பயணங்களில்தான் அலாதி சுகமும் அதிகம்; ரிஸ்க்கும் அதிகம். கார் பயணங்கள் என்றால், மழை – வெயிலைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், கார் போக முடியாத இடத்துக்கெல்லாம் பைக்கில் கிளம்ப முடியும் என்பது பைக் ரைடிங்கில் ஒரு மிகப் பெரிய ப்ளஸ்.

முதலில் ரைடிங் கியர் பயன்படுத்துவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். முறையான ரைடிங் ஜாக்கெட், க்ளோவ்ஸ், ஹெல்மெட் இவற்றுடன்தான் பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

லக்கேஜ் எடையைக் குறைத்து விடுங்கள். சாதாரண பைக் என்றால், பஞ்ஜீ கேபிள் வைத்து மாட்டுவது பெஸ்ட். ஹிமாலயனில் சேடில் பேக்கே வைக்கலாம்.

சில மணி நேரங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். எடுத்த எடுப்பிலேயே இலக்கை அடைந்து விட வேண்டும் என்று நினைக்காமல், அடிக்கடி இடைவெளி விடுவது பைக்குக்கும் உங்களுக்கும் நல்லது. அதேபோல், லாங் ரைடிங்கில் பைக்கை உடனுக்குடனே ஆஃப் செய்வது நல்லதில்லை. சில விநாடிகள் ஐடிலிங்கில் விடுங்கள்.

மலைப் பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரிவான பாதையில் இறங்கும்போது, சர்ரென நான்காவது கியரில் இறங்குவது ரொம்பத் தப்பு. இரண்டாவது கியரிலேயே இறங்குவது ஆபத்தில்லை. அதேபோல், பிரேக் பிடித்துக் கொண்டே இறங்கினால், பிரேக் பெடல்களும் டிரம்மும் சூடாகிவிடும். எனவே, ரிலாக்ஸ் செய்து ஓட்டுங்கள்.

குளிர் நேரங்களில் மலைப் பயணங்களில்தான் க்ளோவ்ஸின் அருமை புரியும். விரல்கள் விறைத்துவிடும் குளிரில், க்ளோவ்ஸ் இல்லாமல் பைக் ஓட்டிவிட்டு சிலர் சைலன்ஸரில் கை வைத்து குளிர் காய்வார்கள். இது ரொம்ப ஆபத்து நண்பரே! அந்த நேரத்துக்குச் சுகமாக இருக்கும். நிமிடங்கள் கழித்து கையில் கொப்புளங்கள்தான்! எனவே, சைலன்ஸரில் கை வைத்துக் குளிர் காய்வதைத் தவிர்க்கவும்.

கலந்துகட்டி அனுபவங்களைத் தருவதுதான் பயணம். எனவே, பஞ்சர் ஆகிடுமோ – வண்டி ரிப்பேர் ஆகிடுமோ என்று பயந்து பயந்து பைக் ஓட்டுவதைத் தவிருங்கள். என்ன நடந்தாலும், பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை வையுங்கள். அதிவேகத்தையும், கவனக்குறைவையும் தவிருங்கள். இனிய பயணம் உங்களது.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism