பிரீமியம் ஸ்டோரி

நான் கடந்த 10 ஆண்டுகளாக, பல்ஸர் 150 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது புதிய பைக் வாங்க முடிவெடுத்துவிட்டேன் என்றாலும், அதன் விலை கணிசமாக அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே திறன் குறைவான பைக்குக்குச் செல்லலாம் எனத் தோன்றினாலும், அவை எதிலுமே எனக்கு பல்ஸரில் கிடைத்த நிறைவு கிடைக்கவில்லை. எனது பட்ஜெட் 1 லட்ச ரூபாய். பல ஆப்ஷன்கள் இருந்தாலும், எனக்கான பைக் எதுவாக இருக்கும்?

- விக்னேஷ், சென்னை.

மோட்டார் கிளினிக்

நீங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில், 125சிசி பைக்குகளையே வாங்க முடியும். அதில் உங்கள் தேவைகளை, பஜாஜின் பல்ஸர் 125 பைக் பூர்த்தி செய்யும் எனத் தோன்றுகிறது. இதன் டிஸ்க் பிரேக் வெர்ஷன், பார்க்க பல்ஸர் 150 போலவே காட்சியளிக்கும். மேலும் பல்ஸர் 150-ல் இருந்த டிஜிட்டல் மீட்டர், 2 பீஸ் ஹேண்டில்பார், பேக்லிட் ஸ்விட்ச்கள், தடிமனான டயர்கள், கேஸ் ஷாக் அப்சார்பர் போன்ற அம்சங்கள், பல்ஸர் 125 பைக்கில் இருப்பது பெரிய ப்ளஸ். எனவே 125சிசி இன்ஜினைத் தாண்டி, இதன் ஓட்டுதலில் பெரிய வித்தியாசம் இருக்காது. பெட்ரோல் டேங்க்கின் அளவு சுருங்கிவிட்டாலும் (11.5 லிட்டர்), முன்பைவிடக் கூடுதல் மைலேஜ் அதனைச் சரிகட்டிவிடும். மற்றபடி மேட் கலர் ஆப்ஷன்கள், எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் என பைக் அப்டேட் ஆகிவிட்டது.

எனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக, இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர் கூறிவிட்டார். இதனால் புதிதாகக் கார் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனை அடிக்கடி பயன்படுத்த மாட்டேன் என்றாலும், குடும்பம் சகிதம் சொகுசாகப் பயணிக்க அது ஏற்றதாக இருக்க வேண்டும். எனது அதிகபட்ச பட்ஜெட் 15 லட்ச ரூபாய். மஹிந்திரா பொலேரோ பவர் ப்ளஸ் எனக்குப் பிடித்திருக்கிறது. வாங்கலாமா?

- ராஜ்குமார், சேலம்.

மோட்டார் கிளினிக்

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் இருக்கும் பொலேரோ பவர் ப்ளஸ், அந்தப் பிரிவில் லேடர் ஃப்ரேம் - ரியர் வீல் டிரைவ் அமைப்புடன் கூடிய ஒரே மாடலாக உள்ளது. இதில் 7 சீட்கள் இருந்தாலும், கடைசி வரிசை Jump Seat-ல் அமர்ந்து, நீண்ட தூரம் வசதியாகப் பயணிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும் அதில் சீட் பெல்ட் கிடையாது என்பது பெரிய மைனஸ். தவிர உங்கள் பட்ஜெட்டில் எம்பிவிகளைப் பரிசீலிக்கலாம். பொலேரோவின் பட்ஜெட்டிலேயே, ரெனோ ட்ரைபர் கிடைக்கிறது. சிறிய 1,000சிசி இன்ஜினைத் தாண்டி, அதில் பெரிதாகக் குறைகள் இல்லை. விரைவில் இதற்கான தீர்வாக, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை, ட்ரைபரில் வழங்க இருக்கிறது ரெனோ. இதைவிடப் பெரிய கார் வேண்டும் என்றால், மாருதி சுஸூகி எர்டிகா அல்லது மஹிந்திரா மராத்ஸோ ஆகியவை உங்களுக்கான ஆப்ஷன்கள்.

கார் ஓட்டக் கற்றுக் கொள்ள, ஒரு யூஸ்டு காரை வாங்கத் தீர்மானித்து விட்டேன். எனது பட்ஜெட் 4 லட்ச ரூபாய். அது குறித்த தேடலில் இருந்தபோது, தான் OLX-ல் பார்த்த ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா பற்றி எனது நண்பர் என்னிடம் கூறினார். அது 10 ஆண்டுகள் பழைய மாடல் என்றாலும், 85,000கிமீ மட்டுமே ஓடியிருந்தது. டாப் வேரியன்ட் என்பதால், அதிக வசதிகள் காரில் இருந்தன. 2-வது ஓனர் என்றாலும், அவர்கள் காரை நன்கு பராமரித்திருக்கிறார்கள். என் பட்ஜெட்டில் கார் வருவதால், அதை வாங்கலாமா எனத் தோன்றுகிறது. எனது முடிவு சரியா?

பாரதி, சென்னை.

மோட்டார் கிளினிக்

முதல்முறையாகக் கார் ஓட்டுவதற்கு, சிறிய பெட்ரோல் கார்களே ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில் இவற்றைக் கையாள்வது சுலபம் என்பதுடன், அவற்றின் பராமரிப்புச் செலவுகளும் குறைவாகவே இருக்கும். ஜெட்டாவின் உற்பத்தியை ஃபோக்ஸ்வாகன் எப்போதோ நிறுத்திவிட்டது என்பதுடன், நீங்கள் குறிப்பிட்ட மாடல் BS-3 டீசல் வகையறாவாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. அடிப்படையில் ஜெட்டா ஒரு எக்ஸிக்யூட்டிவ் செடான். யூஸ்டு மார்க்கெட்டில் இதன் விலை குறைவாக இருந்தாலும், பராமரிப்பு விஷயத்தில் இது மிகவும் காஸ்ட்லி என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் இந்த கார் தற்போது தயாரிக்கப்படுவதில்லை என்பதால், இதன் உதிரிபாகங்கள் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்படலாம். தவிர இது டர்போசார்ஜர் கொண்ட டீசல் கார் என்பதால், இதனை ஓட்டப் பழகுவதில் கவனம் தேவை. இதனுடன் ஜெட்டாவின் நீளத்தையும் கருத்தில் கொள்ளும்போது, நெரிசலான இடங்களில் காரைப் பார்க் செய்வது/ரிவர்ஸ் எடுப்பது, உங்களுக்குக் கடினமாக இருக்கலாம்.

நான் தற்போது பஜாஜ் ப்ளாட்டினா 100 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது கொஞ்சம் பவர்ஃபுல்லான பைக்கை வாங்க விரும்புகிறேன். 200சிசி பிரிவில் வித்தியாசமான தோற்றத்தில் வரும் எக்ஸ்பல்ஸ், எனக்கும் எனது மனைவிக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. என் பட்ஜெட்டான 1.5 லட்சத்துக்குள் அது வருவதால், இந்த ஹீரோ பைக் என்னைக் கவர்ந்துவிட்டது. இந்த பைக்கின் ப்ளஸ், மைனஸ் என்ன?

விவேக், சென்னை.

மோட்டார் கிளினிக்

நீங்கள் வைத்திருக்கும் ப்ளாட்டினாவுக்கும் எக்ஸ்பல்ஸுக்கும், Long Travel சஸ்பென்ஷனைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லை. ADV செக்மென்ட்டில் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் எக்ஸ்பல்ஸ், தினசரிப் பயன்பாட்டுக்கான பைக்காகவும் திகழ்வது பெரிய ப்ளஸ். எனவே இது ஒரு 200சிசி பைக் என்றாலும், நெடுஞ்சாலைகளுடன் நெரிசல்மிக்க நகரச்சாலைகளிலும் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். மேலும் நீளமான சிங்கிள் பீஸ் சீட், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்ற டயர்கள், பளிச் LED ஹெட்லைட், ஆயில் கூல்டு இன்ஜின், Turn by Turn நேவிகேஷன், ஏபிஎஸ் என ஒரு பிராக்டிக்கலான தயாரிப்பாகவும், இந்த ஹீரோ பைக் திகழ்கிறது. ஆனால் நீங்கள் பயன்படுத்திய பைக்கைவிட, எக்ஸ்பல்ஸின் முன்பக்கத்தில் பெரிய டயர் உண்டு (21 இன்ச்). மேலும் சீட் உயரமும், எடையும் சற்று அதிகம் (823மிமீ, 157 கிலோ). இதனால் உங்களுக்கு இந்த ADV பைக்கைக் கையாள்வது சுலபமாக இருக்கிறதா என்பதை முதலில் செக் செய்யுங்கள். பின்பக்கத்தில் எக்ஸாஸ்ட் பைப் கொஞ்சம் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளதால், அது உங்கள் மனைவிக்கு அசொளகரியத்தைத் தரவில்லை என்பதையும் உறுதி செய்யவும். எனவே கட்டாயம் அவருடன் டெஸ்ட் டிரைவ் செய்துபார்க்கவும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு