பிரீமியம் ஸ்டோரி

நான் இதுவரை கியர் இல்லாத டிவிஎஸ் டூ-வீலர்களையே பயன்படுத்துகிறேன். கியர் பைக்கை ஓரளவுக்கு ஓட்டத் தெரியும் என்றாலும், அதில் எனக்கு மிகுந்த அனுபவமில்லை. எனது எடை 85 கிலோ - உயரம் 5 அடி 7 அங்குலம். நகர்ப்புறத்தில் என்னுடைய தினசரிப் பயன்பாடு 20-30 கிமீ. கியர் பைக்குகளை ஓட்டுவதற்குப் பழகிய பிறகு வார இறுதி நாட்களில் லாங் ரைடு போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் பட்ஜெட்டில் பைக் வாங்க ஆசைப்படுகிறேன். ஸ்டைலிஷ் லுக், நல்ல பெர்ஃபாமன்ஸ் அவசியம். எனக்கேற்ற முதல் பைக் ஆப்ஷன் எதுவாக இருக்கும்?

- விக்னேஷ்வரன், திருச்சி.

மோட்டார் கிளினிக்

நீங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில், 125சிசி பைக்குகளைத்தான் வாங்க முடியும். அவை நகரப்பயன்பாட்டுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், நெடுஞ்சாலைகளை மனதில் வைத்துத் தயாரிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, பட்ஜெட்டை நீங்கள் 1.25 லட்சமாக அதிகரிக்கும் பட்சத்தில், 150-160சிசி பைக்குகளை வாங்க முடியும். நீங்கள் பைக் ஓட்டப் பழகுவதற்கு, கொஞ்சம் எடை குறைவான வாகனங்கள் சரியாக இருக்கும். அதை வைத்துப் பார்க்கும்போது, யமஹா FZ-க்கு அடுத்தபடியாக 150-160சிசி செக்மென்ட்டில் எடை குறைவான தயாரிப்பாக இருக்கும் எக்ஸ்ட்ரீம் 160R பைக்கைப் பரிசீலிக்கலாம் (139.5 கிலோ). இது FZ பைக்கைவிட பவர்ஃபுல்லாக இருப்பதுடன், அதைவிடக் குறைவான விலையில் அதிக வசதிகளுடனும் கிடைக்கிறது. ஒருவேளை 125சிசி பைக்தான் வேண்டும் என்றால், ஷைன் அல்லது கிளாமர் நல்ல ஆப்ஷன்கள்.

நான் கடந்த 5 ஆண்டுகளாக, பஜாஜ் டிஸ்கவர் 100M பைக் பயன்படுத்தி வருகிறேன். இதன் தினசரிப் பயன்பாடு 20 கிமீ என்பதுடன், 10 நாள்களுக்கு ஒருமுறை இதிலேயே சொந்த ஊருக்கும் சென்று வருகிறேன். தற்போது பவர்ஃபுல் பைக் ஒன்றை வாங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன். எனது பட்ஜெட் 2 லட்ச ரூபாய். இதில் பல மாடல்கள் இருப்பதால், எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.

- கெளதம் சித்தார்த்தன், இமெயில்.

மோட்டார் கிளினிக்

நீங்கள் ஏற்கெனவே பஜாஜ் பைக்கை வைத்திருப்பதால், உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் டொமினார் D250 உங்களுக்கு ஏற்ற தயாரிப்பாக இருக்கலாம். இது அதன் 400சிசி மாடல் போலவே இருப்பதால், அந்தப் பெரிய பைக் ஃபீல் இதிலும் கிடைக்கும். பைக்கின் விலைக்கேற்ப வசதிகள் இருப்பதுடன், 250சிசி இன்ஜினின் பெர்ஃபாமன்ஸும் மனநிறைவைத் தருகிறது. இந்த டொமினாரின் கையாளுமை நன்றாக இருந்தாலும், அதன் அதிக எடை நெருடலைத் தரலாம் (180 கிலோ). மற்றபடி உங்கள் பட்ஜெட்டைக் கொஞ்சம் அதிகப்படுத்தினால், ராயல் என்ஃபீல்டு Meteor 350 அல்லது சுஸூகி ஜிக்ஸர் 250 ஆகியவற்றை நீங்கள் பரிசீலிக்கலாம். இதில் எதிர்பார்த்தபடியே ஜிக்ஸர் ஸ்போர்ட்டி அனுபவத்தையும், Meteor ரிலாக்ஸ்டான ஓட்டுதலையும் தருகின்றன. எனவே டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டுத் தெளிவாக முடிவெடுக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்த காம்பேக்ட் எஸ்யூவி அல்லது ஹேட்ச்பேக்கில் அனைத்துப் பயணிகளுக்கும் 3 பாயின்ட் சீட் பெல்ட் இருக்கிறது? நான் புதிதாக வாங்கப்போகும் காரில், 5 பேருக்கான இடவசதி இருந்தால் நல்லது. நான் பார்த்த பல கார்களில், பின்பக்க இருக்கையில் நடுவே உட்காருபவருக்கு, Lap Belt/2 பாயின்ட் சீட் பெல்ட்தான் இருக்கிறது. எனக்கான தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

- வருணன், சென்னை.

மோட்டார் கிளினிக்

நீங்கள் குறிப்பிட்டபடி, பெரும்பான்மையான ஹேட்ச்பேக்குகளில் நடுவே உட்காரும் பயணிக்கு 3 பாயின்ட் சீட் பெல்ட் இருப்பதில்லை. வழக்கமான Lap Belt மட்டுமே இருப்பதுடன், கூடவே Fixed Headrest மட்டுமே பார்க்க முடியும். 3 பாயின்ட் சீட் பெல்ட் - Adjustable Neck Restraint உடன் சேரும்போதுதான், விபத்து நேரத்தில் காரின் பின்பக்க இருக்கையின் நடுவே அமர்ந்திருக்கும் நபருக்குப் போதுமான பாதுகாப்பு கிடைக்கும். இதுவே குழந்தைகள் என்றால், ISOFIX/Child Seat பொருத்துவதற்கான வசதி இருப்பது அவசியம். ஹேட்ச்பேக்குகளைப் பொறுத்தவரை, நீங்கள் கேட்ட அம்சங்கள் அனைத்தும் ஒருசேர இருப்பதில்லை. ஆனால் க்ராஷ் டெஸ்ட்டில் அதிக பாதுகாப்புக்கான 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கும் டாடா அல்ட்ராஸ், உங்களுக்கான காராக இருக்கலாம். இதுவே காம்பேக்ட் எஸ்யூவிகளில், மஹிந்திராவின் XUV 3OO-ல் முன்னே சொன்னவை இடம்பிடித்துள்ளன. ஆனால் இரண்டுமே வெவ்வேறு செக்மென்ட் என்பதால், விலை வித்தியாசம் இருக்கும்.

எனது உயரம் 5.2 அடி மற்றும் எடை 60 கிலோ. நான் தற்போது டிஸ்கவர் 125சிசி பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். மாதத்துக்குச் சராசரியாக 300-500 கிமீ அளவுக்கு ஓட்டுவது வழக்கம். இப்போது எனக்கு க்ரூஸர் வகை மாடல்கள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. 1.5 - 2 லட்சத்தில், வெகுதூரம் பயணிப்பதற்கு ஏற்ற பைக் எது?

- க.மணிகண்டன், அம்பாசமுத்திரம்.

மோட்டார் கிளினிக்

1.5 லட்சத்தில் கிடைக்கக்கூடிய க்ரூஸர், பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ் 220 மட்டுமே. இது உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற பைக்காக இருக்கும் எனத் தோன்றுகிறது. அதாவது இதன் எடை, தற்போது நீங்கள் பயன்படுத்தும் பைக்கைவிடச் சுமார் 40-45 கிலோ அதிகம்தான். என்றாலும், அவென்ஜரின் சீட் உயரம் குறைவு என்பதால் (737மிமீ), அதனைக் கையாள்வது உங்களுக்கு வசதியாக இருக்கலாம். தவிர பெரிய விண்ட் ஸ்க்ரீன் இருப்பதால், அதிக வேகத்தில் செல்லும்போது எதிர்க்காற்று முகத்தில் அறைவது ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும். இதுவே அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களைக் கொண்ட ஸ்ட்ரீட் எடிஷன், 160சிசி மாடலில் மட்டுமே வருகிறது.

2 லட்ச ரூபாய்க்குக் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டு Meteor 350, பஜாஜ் க்ரூஸரின் அப்கிரேடு ஆக உள்ளது. இதிலிருப்பது 350சிசி இன்ஜின் என்றாலும், அதன் பெர்ஃபாமன்ஸ், அவென்ஜர் அளவிலேயே இருக்கிறது. தவிர இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கின் எடை 191 கிலோ. அதாவது, பஜாஜைவிட 28 கிலோ அதிகம். அவென்ஜருடன் ஒப்பிடும்போது, வசதிகளைப் பொறுத்தவரை பின்பக்க டிஸ்க் பிரேக் - Tripper நேவிகேஷன் - பெரிய 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் - ஸ்ப்ளிட் சீட் - LED டெயில் லைட் - டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றைத் தாண்டி,

Meteor 350-ல் எந்தப் புதுமையும் இல்லை. ஆனால் MIY வாயிலாக இதை ஒருவர் தனது தேவைக்கேற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். இரண்டிலுமே விண்ட் ஷீல்டு & பில்லியன் பேக்ரெஸ்ட் இருந்தாலும், டேக்கோமீட்டர் கிடையாது.

ங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு