Published:Updated:

`அடுத்த வருடம் 5G ரெடி!' - முகேஷ் அம்பானி... எப்படிச் சாத்தியம்?

IMC நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2021-ன் இரண்டாம் பாதியில் நிச்சயம் 5G சேவையை மக்களுக்கு எடுத்துவருவோம் எனக் கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தொலைத்தொடர்புத் துறையின் அடுத்த பாய்ச்சலாகப் பார்க்கப்படும் ஒரு தொழில்நுட்பம் 5G. இந்தத் தொழில்நுட்பமானது தற்போதே சில நாடுகளில் கிடைக்கத் தொடங்கிவிட்டது. 5G சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பெருமளவில் விற்பனையாகத் துவங்கிவிட்டன.

இந்நிலையில் மிக விரைவில் இந்தியாவுக்கும் 5G சேவை வரும் என்று கூறப்பட்டுவருகிறது. இதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன. வந்து சில வருடங்களே ஆகியிருந்தாலும் இன்று இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. ஏற்கெனவே நாடு முழுவதும் LTE சேவைகளை மட்டுமே கொண்டுள்ள நிறுவனமாக இருப்பதால் 5G சேவை வழங்குவதற்கு ஏற்றவாறு வேகமாகத் தயாராகிவருகிறது அந்நிறுவனம். இதற்காக சாம்சங், குவால்கம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறது ஜியோ.

Jio Fiber
Jio Fiber

ஜூலை மாதம் நடந்த ரிலையன்ஸின் 43-வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் கிடைத்த மறுகணமே 5G சோதனைகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறது ஜியோ எனத் தெரிவித்திருந்தார் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. பிரதமரின் ஆத்மநிர்பர் (சுய சார்பு) இந்தியா கனவை நனவாகும் நோக்கில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாராகும் தொழில்நுட்பமாக அது இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு நேற்று முன்தினம் பிரதமர் மோடியால் துவங்கிவைக்கப்பட்டது. நான்காவது ஆண்டாக நடக்கும் இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்குகொண்டனர். கொரோனா காரணமாக இதுவும் இம்முறை விர்ச்சுவலாகவே நடக்கிறது. இதில் 5G தொழில்நுட்பம்தான் முக்கிய பேசுபொருளாக இருந்தது.

இந்த நிகழ்வில் பேசிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2021-ன் இரண்டாம் பாதியில் நிச்சயம் 5G சேவையை மக்களுக்கு எடுத்துவருவோம் எனக் கூறியிருக்கிறார்.

"இணையப் புரட்சியில் இந்தியா முன்னணி நாடாக இருந்துவருகிறது. அது தொடர 5G-யை விரைவாகவும், குறைந்த விலையிலும் மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கேற்ற கொள்கைகளை நிறுவ வேண்டும் இந்திய அரசு. 2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5G புரட்சியை முன்னெடுக்கும் ஒரு நிறுவனமாக ஜியோ இருக்கும்." என்று உறுதியளித்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

Mukesh Ambani
Mukesh Ambani
"5G இந்தியாவை நான்காவது தொழிற்புரட்சியில் பங்குகொள்ள வைப்பதுடன், அதை முன்னெடுத்து நடத்தும் ஒரு நாடாகவும் மாற்றும். கல்வி, சுகாதாரம், நிதி, வேளாண்மை, கட்டமைப்பு, வணிகம் என அனைத்து துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் 5G சேவைகளை இங்கேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் நிரூபிக்கப்பட்ட பின் உலகமெங்கும் இந்த சேவைகள் அளிக்கப்படும்."
முகேஷ் அம்பானி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"இந்தியப் பொருளாதாரமும் இந்தியச் சமூகமும் பரபரவென டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்த வேகத்துக்கு ஈடுகொடுக்கத் தேவைப்படும் சாதனங்களுக்கான டிமாண்ட் பன்மடங்கு அதிகரிக்கும். ஏற்கெனவே சர்வதேச நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. உலகத்தரத்தில் சிப்களை வடிவமைக்க இந்தியா கற்றுக்கொண்டுள்ளது. அதிநவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி நாடாக வருங்காலத்தில் நிச்சயம் உருவெடுக்கும் இந்தியா" என்ற முகேஷ் அம்பானி 2G யுகத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

60,000 ரூபாய்க்கு ஆப்பிள் ஹெட்போன்ஸ்... ஏர்பாட்ஸ் மேக்ஸில் அப்படி என்ன ஸ்பெஷல்?

"இன்றும் கூட சுமார் 30 கோடி இந்தியச் சந்தாதாரர்கள் 2G யுகத்தில்தான் இருக்கிறார்கள். இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தொழில்நுட்ப அளவில் இப்படிப் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும். அப்போதுதான் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அவர்களால் பங்குகொள்ள முடியும்" என்று கூறினார் முகேஷ் அம்பானி.

கூகுளுடன் கூட்டணி அமைத்துக் குறைந்த விலையில் (4000 ரூபாய்) 5G ஆண்ட்ராய்டு போன் ஒன்றை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஜியோ இருப்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு