Published:Updated:

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட `Remove China Apps’, `Mitron!'- பின்னணி என்ன?

கூகுள் பிளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோர்

இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்த சீனாவின் டிக்டாக் செயலிக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரம் சில தினங்களுக்கு முன்பிருந்து நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க, ஊரடங்கால் இந்தியா முழுவதும் பல வழிகளில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. இதனிடையே, சமீபத்தில் நாட்டு மக்களிடயே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியர்கள் அனைவரும் இந்தியத் தொழில்களை ஆதரிக்க வேண்டும் என்பதோடு இந்தியர்கள் சுயசார்பு குறித்தும் அவர் பேசினார்.

அதேநேரம், இந்திய எல்லைகளில் சீன ராணுவத்தின் அத்துமீறும் செயல்கள் தொடங்கின. இந்தச் சூழலில், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டு இந்தியாவில் பிரபலமான டிக்டாக் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு செயலிகளுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதை நிறுத்தவும், பயன்பாட்டில் வைத்திருப்போர் அவற்றை தங்களது போன்களிலிருந்து நீக்கவும் பெரிய அளவிலான பிரசாரம் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, சீனாவின் ஆண்ட்ராய்டு செயலிகளை இந்தியர்கள் தங்களது போன்களில் உள்ளதைக் கண்டறியவும் பின், அவற்றை நீக்கவும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒன்டச் ஆஃப் டெவலப்ஸ் என்ற நிறுவனம் `Remove China Apps' என்ற செயலியை உருவாக்கி கடந்த மே 17ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சீன எதிர்ப்பு மனநிலையால் கடந்த வாரம் பெரும்பாலானோரைச் சென்றடைந்த இந்தச் செயலியை சுமார் 50 லட்சம் பேர் பதிவிறக்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர். கூகுள் பிளே ஸ்டோர் ரேட்டிங்கில் இந்தச் செயலிக்கு 4.2 நட்சத்திர மதிப்புகள் அளித்துள்ளதோடு, சுமார் 24,000 பேர் இந்தச் செயலி குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

கூகுள் பிளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோர்

மற்ற ஆண்ட்ராய்டு செயலிகளில் விளம்பரங்கள் வருவதைப் போல, இந்தச் செயலியில் விளம்பரங்கள் வரவில்லை. இதனால், இந்தச் செயலியை நிர்வகிக்கும் நிறுவனத்தார் லாபத்திற்காக இந்தச் செயலியை வெளியிடவில்லை என்று கூறப்பட்டது. சீனச் செயலிகளைப் புறக்கணிக்கவே இந்த ஏற்பாடு என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது `Remove China Apps’ செயலியை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. கூகுளின் நடத்தை விதிமுறைகளின் படி, ஒரு செயலி மற்ற செயலிகளைப் பயனர்கள் பதிவிறக்கம் செய்வதை தடுக்க இயலாது என்பதால், இந்தச் செயலியை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்த சீனாவின் டிக்டாக் செயலிக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரம் சில தினங்களுக்கு முன்பிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு இணையாக இந்தியாவின் தயாரிப்பாக மித்ரான் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 5 மில்லியனுக்கும் மேலாக இந்தச் செயலி குறுகிய காலத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. `இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்தியச் செயலி’ என்ற விளம்பரத்தால், அறிமுகப்படுத்தப்பட்ட சில தினங்களிலேயே இந்தியாவில் அதிக கவனம் ஈர்த்தது. இந்தியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி எனப் பேசப்பட்டு வந்த நிலையில், இந்தச் செயலி பாகிஸ்தான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கோடிங்கைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது மித்ரான் செயலியும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மித்ரான் நீக்கப்பட்டது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூகுளின் ஸ்பேம் மற்றும் குறைந்தபட்ச செயல்பாட்டுக் கொள்கையை மீறியதற்காக செயலி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிளே ஸ்டோரில் ஏற்கெனவே உள்ள செயலியின் உள்ளடக்கத்தை நகலெடுப்பது போல இந்தச் செயலி அமைந்துள்ளது. இந்தச் செயலி பிளே ஸ்டோர் விதிகளை மீறியுள்ளது. ஏற்கெனவே, பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளைப் போல அனுபவம் உள்ள பிற செயலிகளை கூகுள் அனுமதிப்பதில்லை. தனித்துவமான உள்ளடக்கம் மற்றும் சேவைகளை வழங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மித்ரான் செயலியின் உண்மையான வடிவமைப்பு பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட பின்னர், இது பாகிஸ்தானின் மென்பொருள் உருவாக்கும் நிறுவனமான கியூபாக்ஸிடமிருந்து 2,600 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. கியூபாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், `செயலியை டெவலப் செய்து விற்பனை செய்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அதில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாது, முன்பு இருக்கும் ஒரு செயலியைப் போலவே பிளே ஸ்டோரில் பதிவேற்றிய முறை சரியானதல்ல. மேலும், இந்தச் செயலியை இந்தியத் தயாரிப்பு எனக் கூறுவதில் சிக்கல் இருக்கிறது’ என்றார்.

இந்நிலையில், இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்தவர்களின் தனி விவர தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லாததால் பயன்படுத்தி வருவோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த வாரத்தில் மட்டும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சர்ச்சைக்கு உள்ளாகி இரண்டு செயலிகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு