Published:Updated:

கலவரமான ட்விட்டர்; புதிய ப்ளூ டிக் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தம் - எலான் மஸ்க் பின்வாங்கியது ஏன்?

எலான் மஸ்க்

ட்விட்டர் பயனர்கள், ட்விட்டர் அதன் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் இழந்துவிடும் என்று எச்சரித்து வருகின்றனர்.

கலவரமான ட்விட்டர்; புதிய ப்ளூ டிக் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தம் - எலான் மஸ்க் பின்வாங்கியது ஏன்?

ட்விட்டர் பயனர்கள், ட்விட்டர் அதன் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் இழந்துவிடும் என்று எச்சரித்து வருகின்றனர்.

Published:Updated:
எலான் மஸ்க்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியது முதல் அதிரடி அறிவிப்புகளாக வந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, ப்ளூ டிக் கட்டணம் தொடர்பான சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகி இருக்கிறது. அந்த வகையில், $8 அமெரிக்க டாலர் மாதாந்திர கட்டணமாகச் செலுத்தி ப்ளூ டிக்கைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற புதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கடந்த நவம்பர் 10ம் தேதி உலகின் பல நாடுகளில் நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வண்ணமே இருக்கின்றன. இதில் இருக்கும் முக்கியமான சிக்கல் என்னவென்றால், போலிக் கணக்குகள் அனைத்தும் இந்த மாதாந்திர கட்டணத்தைப் பயன்படுத்தி ப்ளூ டிக்கைப் பெற்றுக் கொள்கின்றன. இதனால் ட்விட்டர் பயனர்கள், ட்விட்டர் அதன் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் இழந்துவிடும் என்று எச்சரித்து வருகின்றனர்.

இதில் இன்னொரு சிக்கலாக, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் 'Parody' மற்றும் 'Fake' கணக்குகள் ப்ளூ டிக் வாங்கிக்கொண்டு அந்நிறுவனத்தை விமர்சித்து ட்வீட்களைப் பதிவு செய்துவருகின்றனர். இதனால் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்துள்ளன. அதேபோல, பிரபலங்களின் பெயரில் உலாவும் போலிக்கணக்குகளும் இதில் அடக்கம்.

முன்னர் ப்ளூ டிக் என்பது 'இவரின் பெயர் இதுதான்', 'இவர் இங்கேதான் பணிபுரிகிறார்', 'இவர் இந்நிறுவனத்தை நடத்திவருகிறார்' என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு ஆராய்ந்தே வழங்கப்பட்டு வந்தது. இப்போது வெறும் பணம் செலுத்தினால் கிடைத்துவிடும் என்பதால் ட்விட்டரில் தன் இயற்பெயரைக்கூடப் போடாத பல கணக்குகள் ப்ளூ டிக்கைப் பெற்று வருகின்றன. இது மொத்தமாக ட்விட்டரையே கலவர பூமியாக மாற்றியிருக்கிறது.

இந்நிலையில் இந்த விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு $8 அமெரிக்க டாலர் மாதாந்திர கட்டணமாகச் செலுத்தி ப்ளூ டிக்கைப் பெற்றுக் கொள்ளும் இந்தப் புதிய நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், போலியான (parody) கணக்குகளில் 'parody' என்று குறிப்பிடப்படும் என்று எலான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது பற்றிப் பதிவிட்டுள்ள எலான், "இனி, போலியான கணக்குகளின் பயோவில் மட்டும் இல்லாமல், அவர்களின் பெயரில் 'parody' என்று சேர்க்க வேண்டும். இனியும் போலியான கணக்குகளால் மக்களை ஏமாற்றுவது சரியல்ல" என்று பதிவிட்டுள்ளார்.