Published:Updated:

`இப்போதுகூட 4G சேவை இல்லையென்றால் என்ன செய்வது?' - அரசிடம் காஷ்மீர் மக்கள் வைக்கும் கோரிக்கை

 Kashmir
Kashmir

சில வாரங்களுக்கு முன்புதான் இந்த இணைய முடக்கம் தளர்த்தப்பட்டது. அப்படியும் 2G சேவைகளே மக்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உதயமாகின. இந்தத் திட்டத்தால் அங்கு எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்ற சூழல் இருப்பதாகச் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கப் பல கட்டுப்பாடுகளை விதித்தது இந்திய அரசு. இந்தக் கட்டுப்பாடுகளால் மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்தனர். பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் பெரும்பாலான நாள்களை வீட்டிலேயே கழிக்க நேர்ந்தது. இணையச் சேவையும் அங்கு முற்றிலுமாக முடக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

சில வாரங்களுக்கு முன்புதான் இந்த இணைய முடக்கம் தளர்த்தப்பட்டது. அப்படியும் 2G சேவைகளே மக்களுக்கு வழங்கப்பட்டன. அதிலும் குறிப்பிட்ட இணையதளங்களுக்கு மட்டும்தான் செல்ல முடியும். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் 4G இணையச் சேவையில்லாத காரணத்தால் மாணவர்களால் பள்ளி பாடங்களை இணையம் மூலம் கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணி செய்யும் சூழலும் அங்கு இல்லை. இந்த இக்கட்டான சூழலிலாவது மீண்டும் இணையச் சேவைகள் கொடுக்கப்பட வேண்டும் எனக் காஷ்மீர் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இணைய முடக்கம்... இந்தியா நம்பர் ஒன்!

காஷ்மீரின் JKAP கட்சியின் தலைவர் அல்டாஃப் புகாரி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உடனடியாக 4G சேவையை ஜம்மு காஷ்மீரில் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அல்டாஃப் புகாரி
அல்டாஃப் புகாரி

இதுகுறித்து அவர் பேசுகையில், ``கடந்த ஆண்டு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் பலரும் கற்கும் காலத்தை இழந்தனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் அந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் மற்ற மாணவர்களோடு சரி சமமாகப் போட்டியிட 4G இணையச் சேவையை பழையபடி ஜம்மு காஷ்மீரில் கொடுக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ், பள்ளி செல்லும் குழந்தைகள் மூலம் வேகமாகப் பரவும் என்ற காரணத்தால் பள்ளிகள் தடைபடுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், மாற்றுக் கல்வி முறைகளைப் பயன்படுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. பெரும்பாலான ஜம்மு காஷ்மீர் பள்ளிகள் இணையப் பாடத்திட்டத்துக்கு மாறியுள்ளன. ஆனால், 4G சேவை கிடைக்காததால் மாணவர்களால் இணையப் பாடத்தைப் படிக்க முடியவில்லை. இதனால் திரும்பவும் அவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மேலும், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களும் வர்த்தகம் செய்வோரும் கூட 4G சேவை கிடைக்காததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதோடு சுற்றுலாத்துறை, பட்டயக்கணக்காளர்கள், புதிய ஸ்டார்ட் அப்கள், கால் சென்டர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

சில வாரங்களுக்கு முன்தான் ஜம்மு-காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. தற்போது கொரோனாவால் அது மீண்டும் முடங்கியுள்ளது. இணையச் சேவையும் சரி வரக் கிடைக்காத காரணத்தால் கொரோனா பற்றிய செய்திகளும் விழிப்புணர்வும் கூட அவர்களுக்குச் சென்று சேர்வது சிரமமே. இப்படிப்பட்ட சூழலில் 4G இணையச் சேவையை மீண்டும் கொடுப்பதில் இந்திய அரசாங்கம் துரிதம் காட்ட வேண்டும் என்பதே ஜம்மு காஷ்மீர் மக்களின் ஒரே கோரிக்கையாக தற்போது உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு