Published:Updated:

ரூ.756 கோடி முதலீடு, இந்தியர்களுக்கென தனி கேம்... PUBG இஸ் பேக்! எப்படி?

PUBG இஸ் பேக்!
PUBG இஸ் பேக்! ( கார்த்திகேயன் மேடி )

சமீபத்தில் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் கூட PUBG Corporation உடன் கைகோப்பதில் ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் வெளிவந்தன. இந்த சூழலில்தான் 'மிக விரைவில் மீண்டும் வருகிறோம்' என இப்போது அறிவித்திருக்கிறது PUBG Corporation.

சில மாதங்களாகவே சீன-இந்திய எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி ஆப்கள் பலவற்றைத் தடைசெய்து வருகிறது மத்திய அரசு. வெளிப்படையாக அரசு குறிப்பிடவில்லை என்றாலும் தடைசெய்யப்பட்டதில் கிட்டத்தட்ட அனைத்துமே சீன நிறுவனங்களுக்கு எதோ ஒரு வகையில் தொடர்புள்ள ஆப்கள்.

முதலில் டிக் டாக் உட்பட 59 ஆப்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. அதன்பின் இந்த ஆப் தொடர்பான மற்றும் சில ஆப்கள் தடைசெய்யப்பட்டன. அடுத்து செப்டம்பர் மாதத்தில் இன்னும் 118 ஆப்களைத் தடைசெய்வதாக அறிவித்தது அரசு. “130 கோடி இந்தியர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை” என்றது மத்திய அரசு. இதில் பிரபல மொபைல் கேம்மான PUBG-ம் இடம்பெற்றிருக்கிறது. அப்போது இந்தியாவில் மட்டும் 3.3 கோடி பயனாளர்கள் PUBG ஆடிவந்தனர். அவர்களுக்கு இந்த தடை அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. தடை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதன் பின்னும் பலரும் PUBG ஆடிக்கொண்டுதான் இருந்தனர். முழுவதுமாக சேவை நிறுத்தப்பட்டது சில நாட்களுக்கு முன்தான்.

PUBG தடை
PUBG தடை

ஒரு பக்கம் COD Mobile, Freefire போன்ற மாற்று கேம்கள் பக்கம் பயனாளர்கள் தாவிவிட்டனர். சிலர் கேமிங்கையே கைவிட்டனர். PUBG-க்கு மாற்றாக இந்தியாவிலேயே FAU-G என்ற கேம் தயாராகிறது என்ற அறிவிப்பு வெளிவந்தது. இப்படி PUBG-யை சுற்றிப் பல விஷயங்கள் நடந்தேறினாலும் எப்படியும் PUBG மீண்டும் வந்துவிடும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. காரணம் PUBG-யை வடிவமைத்த PUBG Corporation நிறுவனம் சீன நிறுவனம் இல்லை. அது தென்கொரிய நிறுவனம். அதை வெளியிடும் டென்சென்ட் கேம்ஸ்தான் சீன நிறுவனம். இந்த நிறுவனம்தான் PUBG மொபைல் வெர்ஷனின் வெளியிடும் உரிமத்தை வைத்திருந்தது. இதனால் டென்சென்ட்டுக்கு பதிலாக இந்தியாவில் இந்தப் பொறுப்பை வேறு நிறுவனத்திடம் கொடுத்தாலோ, அல்லது அதை PUBG Corporation தானே எடுத்துச் செய்தாலோ தடைநீங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தடை அறிவிக்கப்பட்டதுமே இந்தியாவில் டென்சென்ட் உடனான உறவை முறிப்பதாக அறிவித்தது PUBG Corporation. சமீபத்தில் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் கூட PUBG Corporation உடன் கைகோப்பதில் ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் வெளிவந்தன. இந்த சூழலில்தான் 'மிக விரைவில் மீண்டும் வருகிறோம்' என இப்போது அறிவித்திருக்கிறது PUBG Corporation.

இந்தியப் பயனாளர்களுக்கென பிரத்யேகமாக 'PUBG Mobile India' என்ற கேம்மை அறிமுகப்படுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கும் PUBG corporation, இந்த கேம் டேட்டா பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசின் வழிமுறைகளுக்கேற்ப வடிவமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படும் ஸ்டோரேஜ் சிஸ்டம்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றனவா என அவ்வப்போது தணிக்கை செய்வோம்.
PUBG Corporation
PUBG
PUBG

கேம்மிலும் மாற்றங்கள் இருக்கின்றன. இனி சுட்டால் சிவப்புக்குப் பதிலாகப் பச்சை நிறத்தில்தான் ரத்தம் வருமாம். இப்படி உள்ளூர் தேவைக்கேற்ப சில இன்னும் சில மாற்றங்கள் இருக்கின்றனவாம். வயது குறைந்த வீரர்களை அனுமதிக்காத வண்ணம் ஒரு வசதியும் கேம்மில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது PUBG தரப்பு. மேலும் இந்தியாவில் ஒரு அலுவலகத்தை நிறுவி 100 பேருக்கு வேலை தரப்போகிறதாம் PUBG Corporation. 'மற்ற உள்ளூர் நிறுவனங்களுடனும் கைகோர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்' எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதியாக, PUBG Corporation நிறுவனத்தின் தாய் நிறுவனமான Krafton இந்தியாவில் 100 மில்லியன் டாலர் முதலீட்டை செய்யவிருக்கிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது PUBG Corporation. இது உள்ளூர் வீடியோ கேம்களை ஊக்கப்படுத்தவும், இந்தியாவில் ஈ-ஸ்போர்ட்ஸை வளர்த்தெடுக்கவும் பயன்படுத்தப்படவுள்ளது. ஒரு பங்கு பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளிலும் முதலீடு செய்யப்படும். இந்த PUBG Mobile India எப்போது அறிமுகமாகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

PUBG மீண்டும் வருவது பற்றிய உங்கள் கருத்து என்ன... மறக்காமல் கமென்ட்களில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு