Published:Updated:

`10 நாள்கள்; கைகோத்த தனியார் நிறுவனம்!' - சேலம் மாணவர்களின் `கொரோனா பரவல் தடுப்பு ஆப்'

ஆப் அறிமுகம்
ஆப் அறிமுகம்

சோனா கல்லூரி மாணவர்களும், வீ டெக்னாலஜி பொறியாளர்களும் இணைந்து 10 நாள்கள் கடினமாக உழைத்து வீ ட்ரேஸ் என்னும் ஆப்பை உருவாக்கி இருக்கிறோம்.

''கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் எவரேனும் 1 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளார்களா என்ற விபரங்கள் மொபைல் திரையில் பார்க்க முடியும். மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் அந்த நபருடன் 14 நாள்களில் தொடர்பில் இருந்தவர்களையும் இந்த ஆப்பின் மூலம் கண்டறிய முடியும்'' என்கின்றனர் ஆப் உருவாக்கிய மாணவர்கள்.

புதிய ஆப்
புதிய ஆப்

கொரோனா வைரஸ் தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்களைக் கண்காணிக்கவும், கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களிடமிருந்து பொதுமக்கள் அலர்ட்டாக இருக்கவும் சேலம் சோனா பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை வீ டெக்னாலஜி நிறுவனமும் இணைந்து `வீ ட்ரேஸ்' என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளன. இந்தச் செயலியை சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் அறிமுகப்படுத்தி வைத்தார்.

வீ டெக்னாலஜி பொறியாளர் சுரேஷ்குமாரிடம் பேசினோம். ''உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் சமூகப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இத்தருணத்தில் சோனா கல்லூரியின் சேர்மன் சொக்க வள்ளியப்பா எங்களை அழைத்து கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு புதிய ஆப்பை உருவாக்க சில ஆலோசனைகளைக் கூறினார்.

இதையடுத்து சோனா கல்லூரி மாணவர்களும் வீ டெக்னாலஜி பொறியாளர்களும் இணைந்து 10 நாள்கள் கடினமாக உழைத்து வீ ட்ரேஸ் என்னும் ஆப்பை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஆப்பை ஒவ்வொருவரும் அவரவர் ஆன்ட்ராய்டு மொபைலில் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

கொரோனா
கொரோனா

வீ ட்ரேஸ் ஆப்பில் தங்களுடைய மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மொபைலுக்கு வரும் பாஸ்வேர்ட் குறிப்பிட்ட பிறகு பெயர், வயது, பாலினம் விபரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தாங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்ற பதிவைத் தேர்வு செய்ய வேண்டும். மாநகராட்சி மூலம் கண்டறியப்படுவதால் தவறாகப் பதிவைத் தேர்வு செய்ய முடியாது.

ஆம், இல்லை என்பதைத் தேர்வு செய்த பிறகு, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் எவரேனும் 10 மீட்டர் இடைவெளி, 100 மீட்டர் இடைவெளி மற்றும் 1 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளார்களா என்ற விபரங்கள் தங்களது மொபைல் திரையில் பார்க்க முடியும்.

மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டால் அந்த நபருடன் 14 நாள்களில் தொடர்பில் இருந்தவர்களையும் இந்த ஆப்பின் மூலம் கண்டறிய முடியும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு