Published:Updated:

செமிகண்டக்டர் பற்றாக்குறை: அல்லல்படும் ஆட்டோமொபைல் மற்றும் டெக் நிறுவனங்கள்! காரணம் என்ன?

ஆப்பிள், சோனி ஆகிய டெக் நிறுவனங்கள் தொடங்கி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுஸுகி வரை முடங்கிப்போக காரணமாக இருக்கும் செமிகண்டக்டர் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோவின் மலிவு விலை 4G ஸ்மார்ட்போன் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. கடந்த வருடம் ஒப்பிடும்போது மாருதி சுஸுகியின் செப்டம்பர் மாத கார் உற்பத்தி பாதியாகக் குறைந்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன் ஆப்பிள் அறிமுகப்படுத்திய ஐபோன் 13 உற்பத்தி குறைக்கப்படும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. கடந்த வருடம் அறிமுகமான ப்ளேஸ்டேஷன் 5 வாங்க கேமர்கள் ஆர்வமாக இருந்தாலும் அதைத் தயாரிக்க முடியாமல் திணறிவருகிறது சோனி. இவை அனைத்துக்கும் ஒரே காரணம்தான். அது மைக்ரோ சிப் பற்றாக்குறை!

மைக்ரோ சிப் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன?

செமிகண்டக்டர் பற்றாக்குறை!
செமிகண்டக்டர் பற்றாக்குறை!

இன்றைய டெக் உலகில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் செமிகண்டக்டர்களை வைத்து உருவாக்கப்படும் மைக்ரோ சிப்களைப் பயன்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் தொடங்கி மிகப்பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பிரமாண்ட இயந்திரங்கள் வரை ஒரு எலக்ட்ரானிக் பொருள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதன் உருவத்தில் நூறில் ஒரு பங்கு கூட இல்லாத இந்த மிகச் சிறிய சிப்களில்தான் அவை இயங்கத் தேவையான கட்டளைகள் பதிந்து வைக்கப்படுகின்றன. இந்த மைக்ரோ சிப்களை உருவாக்க செமிகண்டக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிலிக்கானை மூலப்பொருளாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் செமிகண்டக்டர் தட்டுகளில் (Wafers) இருந்துதான் தேவைக்கேற்ப சிறிய அளவிலான மைக்ரோ சிப்கள் வடிவமைக்கப்படுகின்றன.

கொரோனாவால் அதிகரித்த தேவை!

கடந்த வருடம் லாக்டௌன் காலத்தில் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை பல்வேறு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தவும் ஸ்மார்ட்போன், லேப்டாப், தகவல் தொடர்பு சாதனங்களின் தேவை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. அது மட்டுமல்ல பொழுதுபோக்கு சாதனங்கள், மருத்துவ சாதனங்கள் என மக்களுக்குத் தேவைப்படும் மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களின் தேவையும் அதிகரித்தது. இவை அனைத்துக்கும் அடிப்படைத் தேவை மைக்ரோ சிப்கள்தான் என்பதால் அவற்றின் தேவையும் எப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கத் தொடங்கியது.

ஆனால் செமிகண்டக்டர் ஆலைகளில் கொரோனா கட்டுப்பாடுகள், பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றால் உற்பத்தி பாதிக்கப்படவே இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டது. செமிகண்டக்டர் துறையைப் பொறுத்தவரையில் ஆசியாவின் பங்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இன்டெல், சாம்சங் போன்ற பிரபலமான நிறுவனங்கள் சொந்தமாகவே செமிகண்டக்டர், மைக்ரோசிப் போன்றவற்றைத் தயாரித்துக் கொள்கின்றன. அந்த வசதி இல்லாத சில நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மைக்ரோசிப்களின் வடிவமைப்பைப் பிற செமிகண்டக்டர் நிறுவனங்களிடம் கொடுத்து மைக்ரோ சிப்களை வாங்கிக் கொள்கின்றன.

iPhone 13 Series
iPhone 13 Series

இது போலப் பிற டெக் நிறுவனங்களுக்கு மைக்ரோசிப்களை தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் தைவானைச் சேர்ந்த TSMC நிறுவனம். ஆப்பிள், குவால்காம் போன்ற நிறுவனங்கள் TSMC-யின் வாடிக்கையாளர்கள். சந்தையில் 56 சதவிகித பங்கை கொண்டிருக்கும் TSMC-யை போலவே பிறருக்கு மைக்ரோசிப்களைத் தயாரித்துக் கொடுக்கும் பல நிறுவனங்கள் தைவான், தென் கொரியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில்தான் இருக்கின்றன. கொரோனாவால் ஆசியப் பகுதிகளில் நிலவிய சிக்கலான நிலைமை செமிகண்டக்டர் / மைக்ரோ சிப் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது தொடங்கிய பற்றாக்குறை இன்று வரை சரியாகாமல் இருந்து வருகிறது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆட்டோமொபைல் துறை!

இப்போது எண்ட்ரி லெவல் கார்கள், விலை அதிகமான கார்கள் என அனைத்து வகையான கார்களிலும் ​செமிகண்டக்டர்களின் தேவை என்பது அதிகமாக இருக்கிறது. ஒரு காரில் இருக்கும் இன்ஜின், ஹெட்லைட், டிரைவிங் அசிஸ்ட் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்புக்குத் தேவையான ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்துவது என காரின் வெளிப்பக்கத்திலும் சரி உட்புறத்திலும் சரி பல்வேறு பகுதிகளில் மைக்ரோ சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால்தான் செமிகண்டக்டர் பற்றாக்குறை ஆட்டோமொபைல் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செமிகண்டக்டர் பற்றாக்குறை!
செமிகண்டக்டர் பற்றாக்குறை!

உலக அளவில் ஹோண்டா, பிஎம்டபிள்யூ, ஃபோர்டு என பல்வேறு நிறுவனங்கள் மைக்ரோ சிப் பற்றாக்குறையால் கார்கள் தயாரிப்பை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இப்படித் தொடர்ச்சியான உற்பத்தி நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வருவாயை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட 47 சதவிகிதத்தை கையில் வைத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1,66,086 கார்களை உற்பத்தி செய்திருந்த நிலையில், இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 81,278 கார்களை மட்டுமே தயாரிக்க முடிந்திருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனம் உள்பட அனைத்து கார் நிறுவனங்களும் இந்த சிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்களுக்கு மைக்ரோ சிப் தட்டுப்பாடு - சமாளிக்க என்ன வழி?

கடந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் கார் விற்பனை 41 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM) அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கார்கள் மட்டுமல்ல பிஎஸ்-6 விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர் மோட்டார் பைக்குகளும் மைக்ரோ சிப்பை நம்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆகவே அவற்றின் உற்பத்தியும், விற்பனையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

மைக்ரோ சிப் - ஆட்டோமொபைல்
மைக்ரோ சிப் - ஆட்டோமொபைல்

உலக அளவில் தொடங்கிய செமிகண்டக்டர் ரேஸ்!

வருங்காலத்தில் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகம் இருக்கும் என்பதால் அதன் உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்கள் பெரும் முதலீடுகளை செய்யத் தொடங்கியிருக்கின்றன. TSMC நிறுவனம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. உலகின் முன்னணி மெமரி சிப் தயாரிப்பாளரான சாம்சங் 2030-க்குள் 116 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. எலக்ட்ரானிக் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வரும் சீனாவும் செமிகண்டக்டர் உற்பத்தியில் இனிமேல் கவனம் செலுத்தக்கூடும். செமிகண்டக்டர்களுக்கான தேவை இருப்பதால் முதலீடுகளை ஈர்க்க இந்தியாவும் முயற்சி செய்து வருகிறது.

கடந்த மாதம் இறுதியில் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மைக்ரோசிப் நிறுவனமான குவால்காமின் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஸ்டியானோ அமானை (Cristiano Amon) சந்தித்து உரையாடியிருக்கிறார். அதே சமயம் செமிகண்டக்டர்களுக்காக இனிமேல் தைவானை மட்டுமே நம்பியிருப்பது சரியல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன மேற்கத்திய நாடுகள். சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை செமிகண்டக்டர் துறைக்காக ஒதுக்கியிருக்கிறது அமெரிக்க அரசு. இப்படி உலகம் முழுக்க செமிகண்டக்டர் விநியோகத்தைச் சீரமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் எப்படியும் 2023-ம் ஆண்டு வரை இந்த பற்றாக்குறை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது என்பதால் அதுவரை இந்த சிக்கலை சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன டெக் நிறுவனங்களும், கார் நிறுவனங்களும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு