Published:Updated:

`நாசாவால் முடியாததை செய்யணும்னு நினைச்சேன்!’- விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய சென்னை இன்ஜினீயர்

இன்று அதிகாலை, விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்துவிட்டதாக நாசா அறிவித்தது. மேலும் அந்த அறிவிப்பில், இந்தக் கண்டுபிடிப்புக்கு உதவியதாக சண்முக சுப்பிரமணியன் என்பவரைக் குறிப்பிட்டுள்ளது.

சண்முக சுப்பிரமணியன்
சண்முக சுப்பிரமணியன்

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்தும் பொருட்டு, இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்2 -வின் விக்ரம் லேண்டர், கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், நிலவை நெருங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் , விக்ரம் லேண்டரின் நிலை கேள்விக்குறியானது.

நாசா வெளியிட்ட புகைப்படம்
நாசா வெளியிட்ட புகைப்படம்

விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோவுடன் நாசாவும் இணைந்தது. நாசாவின் முதல் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காத நிலையில், விக்ரம் லேண்டர் தொடர்பான மர்மம் தொடர்ந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்துவிட்டதாக நாசா அறிவித்தது. மேலும் நாசாவின் அந்த அறிவிப்பில், இந்தக் கண்டுபிடிப்புக்கு சண்முக சுப்பிரமணியன் என்பவர் உதவியதாகக் குறிப்பிட்டுள்ளது.

`க்ளூ கொடுத்த தமிழர்; களமிறங்கிய நாசா'- 2 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர்!

இவர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையில் இஜினீயராகப் பணியாற்றிவருகிறார். இவர், விக்ரம் லேண்டர் நிலவைச் சென்றடையும் முன்பு எடுக்கப்பட்ட படங்கள், அதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்மூலம் விக்ரம் லேண்டர் இந்தப் பகுதியில்தான் விழுந்திருக்கும் எனக் கணித்து, இது தொடர்பாக நாசாவுக்கு மெயில் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில்தான், நாசாவின் LROC டீம் (நிலவை ஆய்வு செய்யும் நாசா குழு) ஆய்வு மேற்கொண்டு, விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை உறுதிசெய்துள்ளது.

`நாசாவால் முடியாததை செய்யணும்னு நினைச்சேன்!’- விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய சென்னை இன்ஜினீயர்

இந்த அறிவிப்பு வெளியானது முதல், அந்த இளைஞர் குறித்த தகவல் பரவியது. இதுதொடர்பாக 'ஹிந்துஸ்த்தான் டைம்ஸ்' ஊடகத்திடம் பேசிய சண்முக சுப்பிரமணியன், ``இதை ஒரு சவாலாகத்தான் எடுத்துச் செய்தேன். நாசாவால் கண்டுபிடிக்க முடியாததை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டேன்.

அதுதான் என்னை விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவியது. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் சாஃப்ட் லேண்டிங் ஆகி இருந்தால், இந்திய மக்கள் மனதில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், திட்டம் இறுதிக்கட்டத்தில் தோல்வியில் முடியவே, விக்ரம் லேண்டர் குறித்த பேச்சுதான் எல்லா பக்கமும்” என்கிறார்.

மேலும், நாசாவின் LORC வெளியிட்ட புகைப்படங்கள் மூலம்தான் விக்ரம் லேண்டர் விழுந்திருக்கும் இடத்தைக் கணித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ``நாசாவின் புகைப்படங்களைத் தொடர்ச்சியாக 4,5 நாள்கள் இரவில் பார்த்துக்கொண்டே இருந்தேன். தரையிறங்கவேண்டிய பகுதிக்கு வடக்கில் தேடும்போது, ஒரு சிறிய புள்ளியைக் கண்டேன். கடந்த 9 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு, நாசாவுக்கு மெயில் அனுப்பினேன். அதன் பின்னர், அவர்கள் தேவையான ஆய்வை மேற்கொண்டு உறுதிசெய்து, முடிவை அறிவித்தனர்” என்றார்.