
CES 2020 நிகழ்வில் சோனி நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு 'Vision S' என்ற தன் புது ரக அதிநவீன மின்சார காரின் மாதிரியை அறிமுகப்படுத்தியது.
செவ்வாய் சென்றே ஆகவேண்டும் எனத் திண்ணமான எண்ணம் கொண்டிருக்கும் Elon Musk, தன் வருங்கால 'நிச்சய' வருமானத்திற்கு, அதிநவீன மின்சார கார்கள் எனும் விதையை Tesla மூலம் பெரியளவில் விதைத்துக்கொண்டிருக்கிறார். இந்த வருங்காலச் சந்தைக்கான போட்டியில் தன்னையும் ஈடுபடுத்தியுள்ளது ஜப்பானிய நிறுவனமான சோனி (Sony).

அண்மையில் நடைபெற்ற CES 2020 நிகழ்வில் சோனி நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு 'Vision S' என்ற புது ரக அதிநவீன எலெக்ட்ரிக் காரின் மாதிரியை அறிமுகப்படுத்தி அனைவரையும் (Tesla உட்பட) ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அதிநவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஜப்பானிய கார், போக்குவரத்துத் துறையில் பல அதிசயங்களை நிகழ்த்தும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் வெளிப்புறத் தோற்றம் Porsche, Tesla மற்றும் Lucid motors air ரக கார்களின் சேர்க்கையைப் போன்று பார்ப்போர் கண்களைக் கவரும் வண்ணம் உள்ளது.
இந்த 'Vision S' ரக கார் மொத்தம் 33 சென்சார்களும் நிறைய திரைகளும் நவீன ஒலி அமைப்பையும் பெற்றுள்ளது.
வருங்கால கார்கள் பெற்றிருக்க வேண்டிய அனைத்துத் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியுள்ளது இந்த கார்.
காரின் டேஷ் போர்டின் குறுக்கே மிகவும் அகலமான திரை பொருத்தப்பட்டுள்ளது.
இதில் வாகனம் செலுத்துதல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் டிஜிட்டல் முறையில் பார்வையிட முடியும். காரின் பின் இருக்கையில் உள்ளவர்களுக்கென தனித்தனி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன.
``இந்தத் தொழில்நுட்பம் போக்குவரத்துத் துறைக்கு எங்கள் பங்களிப்பாக அமையும்" என்று சோனி நிறுவனத்தின் CEO Kenichiro Yoshida தெரிவித்தார்.
எனினும் இந்த வடிவமைப்பு மாதிரியை காராகத் தயாரிப்பது பற்றியும், மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வடிவமைப்பை தங்கள் தயாரிப்பில் பயன்படுத்துவது தொடர்பாகவும் எதுவும் கூறப்படவில்லை.
இயற்கையின் விதியாக இன்றும் பலராலும் நம்பப்படுவது, நிகழ்வுகளின் மறுபதிப்பு தான் வரலாறு. எ.கா ., சூரியன் முதலில் உதிக்கும் நிலம் ஜப்பான்.