சினிமா
Published:Updated:

ஐ.டி துறையை ஆட்டிப் படைக்கும் மூன்லைட்டிங்!

ஐ.டி துறையை ஆட்டிப் படைக்கும் மூன்லைட்டிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.டி துறையை ஆட்டிப் படைக்கும் மூன்லைட்டிங்!

மூன்லைட்டிங் பெரும் பிரச்னையானதும், பல நிறுவனங்கள் வாரத்தில் சில நாட்களாவது ஆபீஸ் வர வேண்டும் என்று பணியாளர் களுக்குக் கட்டளை போட்டிருக் கின்றன.

300 பணியாளர்களை விப்ரோ நிறுவனம் சமீப மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது. ‘‘அவர்கள் மூன்லைட்டிங் செய்தார்கள்'' என்பதே குற்றச்சாட்டு. ஐ.டி துறை முழுக்க ‘மூன்லைட்டிங்' என்பது சுட்டெரிக்கும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. அது என்ன மூன்லைட்டிங்?

தங்களது பணிநேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தில் வேலை பார்ப்பதே மூன்லைட்டிங் எனப்படுகிறது. தான் பணியாற்றும் நிறுவனத்துக்கே செய்தால் பிரச்னை இல்லை. வேறு நிறுவனங்களுக்குச் செய்தால் அது ‘இரண்டாவது வேலை'. சிலர் தங்கள் டியூட்டி டைம் போக வேறு ஒரு நிறுவனத்துக்கு மட்டும் பகுதிநேர வேலை செய்கிறார்கள். சிலர் ஃப்ரீலான்சிங் என்ற பெயரில் வேறு நிறுவனங்களுக்கு சின்னச்சின்ன வேலைகள் செய்து தருகிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங் களில் முழுநேர வேலை பார்க்கும் கில்லாடிகளும் இருக்கிறார்கள்.

‘‘எங்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு பணிபுரியும் ஒருவர், எங்களின் போட்டி நிறுவனங்களுக்கும் வேலை பார்ப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? இது அறமற்ற, நியதிகள் இல்லாத செயல். ரகசியமாக மூன்லைட்டிங் செய்ததைக் கண்டுபிடித்தே இந்த 300 பேரைத் தூக்கினோம்'' என்கிறார் விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி.

இந்திய ஐ.டி துறையில் சுமார் 50 லட்சம் பேர் வேலை பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ‘மூன்லைட்டிங்' மோகம் இவர்களில் பலரை ஆட்டிப் படைக்கிறது. 'ஐ.டி பணியாளர்களில் 100 பேரில் ஒருவர் மூன்லைட்டிங் செய்கிறார்' என்கிறது ஒரு புள்ளிவிவரம். ‘‘அதெல்லாம் இல்லை. நூறில் ஐந்து பேர் செய்கிறார்கள்'' என்கிறது இன்னொரு சர்வே. ஒரே நேரத்தில் ஏழு நிறுவனங்களுக்கு வேலை பார்த்து ஒருவர் சிக்கியிருக்கிறார். கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால் சிலர் மூன்லைட்டிங் செய்கிறார்கள். சிலருக்கோ தங்களின் வழக்கமான வேலை போரடிக்கிறது. அதிலிருந்து மாறுதல் தரும், சுவாரசியமான வேலையை பகுதிநேரமாகச் செய்ய வாய்ப்பு கிடைப்பதால் மூன்லைட்டிங் செய்கிறார்கள்.

இவர்கள் மாட்டிக் கொள்வ தற்கு ஒரு காரணம் உள்ளது. பிராவிடன்ட் ஃபண்ட் பிடித்தம் செய்து, அதை ஊழியர் கணக்கில் செலுத்துவது வழக்கம். இந்தக் கணக்கிற்கு ஒரே யு.ஏ.என் நம்பர் உள்ளது. நிறுவனங்களும் இந்தக் கணக்கை கவனிக்க முடியும். ஒரே ஊழியரின் அக்கவுன்டில் இரண்டு நிறுவனங்கள் பிராவிடன்ட் ஃபண்ட் செலுத்தி னால் அவர் மாட்டிக்கொள்வார்.

அலுவலகங்கள் முழுவீச்சில் செயல்பட்டபோது இந்த மூன்லைட்டிங் பஞ்சாயத்து குறைவாக இருந்தது. வார இறுதிகளில் சிலர் ஃப்ரீலான்சிங் செய்வது மட்டுமே நடந்தது. கொரோனாவுக்குப் பிறகு வொர்க் ஃப்ரம் ஹோம் சிஸ்டம் அமலானது பலருக்கு வசதியாகிவிட்டது. வீட்டில் இருந்தபடியே தனித்தனியாக இரண்டு லேப்டாப்கள் வைத்துக்கொண்டு இரண்டு நிறுவனங்களுக்கு வேலை பார்க்கலாம். எந்த நிறுவனமும் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்று வற்புறுத்த வில்லை. வேலை நடந்தால் போதும் என்றிருந்தன.

ஐ.டி துறையை ஆட்டிப் படைக்கும் மூன்லைட்டிங்!

ஆனால், மூன்லைட்டிங் செய்யும்போது பணியின் தரம் பாதிக்கப்படும் என்பது நிறுவனங்களின் கவலை. இரவு நெடுநேரம் கண்விழித்து இன்னொரு நிறுவனத்துக்கு வேலை பார்க்கும் ஒருவர், மறுநாள் காலையில் தன் முழுநேர வேலையை எப்படி கவனத்துடன் செய்ய முடியும்? அத்துடன், போட்டி நிறுவனத்துக்கு ஒருவர் வேலை செய்யும்போது நிறுவன ரகசியங்கள் கசியலாம்.

மூன்லைட்டிங் பெரும் பிரச்னையானதும், பல நிறுவனங்கள் வாரத்தில் சில நாட்களாவது ஆபீஸ் வர வேண்டும் என்று பணியாளர் களுக்குக் கட்டளை போட்டிருக் கின்றன. ‘மூன்லைட்டிங் அறமற்ற செயல்' என்று ஐபிஎம் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் கூறுகின்றன. ‘எங்களுக்குத் தெரியாமல் இன்னொரு வேலை செய்வது தவறு. அப்படிச் செய்தால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள்' என்று பணியாளர்களை இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது.

ஆனால், டெக் மஹிந்திரா நிறுவன சி.இ.ஓ குர்னானி, ‘‘பணியாளர்களுக்கு இதனால் கூடுதல் பணம் கிடைக்கும் என்றால், மூன்லைட்டிங்கை வரவேற்கலாம். ஆனால், அதை ரகசியமாகச் செய்யாமல் வெளிப்படையாக சொல்லிவிட்டு செய்யலாம்'' என்கிறார். இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பை, ‘‘ஒரு நிறுவனத்துக்கு இத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கான்ட்ராக்ட் இருக்கிறது. அதுபோக மற்ற நேரத்தில் அந்த பணியாளர் என்ன செய்யலாம் என்பது அவரின் சுதந்திரம்'' என்கிறார். ஸ்விக்கி நிறுவனம், ‘‘எங்கள் போட்டியாளர்களுக்குச் செய்யாமல், எங்கள் நிறுவன வேலை பாதிக்கப்படாமல் மூன்லைட்டிங் செய்யலாம்'' என்று ஊழியர்களுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது.

மூன்லைட்டிங் சரி என்றோ, சட்டவிரோதம் என்றோ எந்த அரசு விதிகளும் இல்லை. வேடிக்கை என்னவென்றால், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே, தனியாக உழைத்து அதேபோன்ற துறையில் இன்ஃபோசிஸை உருவாக்கினார். சச்சினும் பின்னி பன்சாலும் அமேசானில் வேலை பார்த்தபடி, அதற்குப் போட்டியாளரான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை உருவாக்கினார்கள். இந்த எல்லாமே கிட்டத்தட்ட மூன்லைட்டிங் மாதிரி. இன்று அந்த நிறுவனங்களே மூன்லைட்டிங் பிரச்னையால் தவிக்கின்றன.