இன்று உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் மீம்களுக்கும் ரியாக்சனுக்கும் அதிகம் பகிரப்படுவது GIF தான். ஓரிரு நொடிகள் மட்டுமே வீடியோ வடிவில் ஓடும் இந்த GIF-ஐ கண்டுபிடித்தவர்களில் ஒருவரான 'ஸ்டீபன் வில்ஹைட்' கடந்த வாரம் தனது 74-வது வயதில் மறைந்தார். இவர் இந்த GIF-ஐ 1980 களில் காம்புசெர்வே (CompuServe) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தபோது கண்டுபிடித்துள்ளார். அப்போது இணையதளம் அவ்வளவு பிரபலமாக இல்லாததால் அவரின் இந்தக் கண்டுபிடிப்பு பிரபலமாகவில்லை. ஆனால் இன்று உலகளவில் ட்ரெண்டாகியுள்ளது.

25 வருடத்திற்குப் பிறகு இவரது இந்த கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 'வீபெய் வாழ்நாள் சாதனையாளர் விருது (Webby Lifetime Achievement Award)' வழங்கப்பட்டது. அப்போது விருது வாங்கும் போது கூட தனது நன்றியுரையை ஒரு GIF ஆக வெளியிட்டார் ஸ்டீபன். ஸ்டீபன் வில்ஹைட் குறித்து பேசிய அவரது மனைவி ' அவர் வீட்டின் அடித்தளத்தில் தனியாக எப்போதும் வேலை செய்துகொண்டிருப்பார். இந்த GIFஐக் கூட அவர் வீட்டில் தான் வடிவமைத்தார், பின்னர் தான் அதை முழுமையாக மாற்றி வெளியிட்டார்' என்று கூறினார்
மேலும், ஸ்டீபன் அவரது குடும்பத்தார் அனைவரும் சூழ்ந்திருக்கும் சமயத்தில் உயிரிழந்தார் என்று உருக்கமாக கூறிய அவரது மனைவி 'அவரது அனைத்து சாதனைகளுடனும் கூட, அவர் மிகவும் அடக்கமாகவும், கனிவாகவும், நல்ல மனிதராகவும் இருந்தார்' என்று கூறினார்.
