Published:Updated:

`ஸ்டீவ் ஜாப்ஸ், இன்னும் உயிருடன்தான் இருக்கிறாரா?'- வைரலாகும் புகைப்படம்

ம.காசி விஸ்வநாதன்

இந்தப் புகைப்படம் கடந்த சனிக்கிழமை reddit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

'Steve Jobs is still alive' New conspiracy theory
'Steve Jobs is still alive' New conspiracy theory

உங்களுக்குத் தெரிந்த ஒரு டெக் ஜாம்பவானின் பெயரைக் கூறுங்கள் எனக் கேட்டால் பலருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். இன்று ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரும் பழமாக இருக்கிறது என்றால் அது இவர் போட்ட விதையினால்தான். இவர் கணையப் புற்றுநோயால் 2011-ல் தனது 56-வது வயதில் காலமானார். இப்போது ஆப்பிள் சி.இ.ஓ-வாக டிம் குக் செயல்பட்டுவருகிறார்.

இந்நிலையில் இணையத்தில் வைரலான ஒரு புகைப்படத்தினால் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணிக்கவில்லை, எகிப்தில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என வதந்திகள் பரவத் தொடங்கியிருக்கின்றன. அப்படி என்ன போட்டோ அது?

Steve Jobs look-alike
Steve Jobs look-alike
Reddit

எகிப்தின் தலைநகரான கெய்ரோ நகரில் அப்படியே ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற உருவத்தில் இருக்கும் ஒருவர் தேநீர் அருந்தும் புகைப்படம்தான் இதற்குக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு ஷூ அணிவதில் பெரிய விருப்பம் இருந்ததில்லை இந்தப் புகைப்படத்திலும் அவர் ஷூ அணியாமல்தான் இருக்கிறார். அவர் உட்காரும் ஸ்டைலிலேயே தெரிகிறது அவர் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் என விதவிதமாக காதில் பூ சுற்றுகின்றனர் பலர். இன்னொருபுறம் அவர் ஆப்பிள் வாட்ச்சே அணியவில்லை அது எப்படி ஸ்டீவ் ஜாப்ஸாக இருக்கமுடியும் என்ற லாஜிக் வேறு. இதெல்லாம் சனிக்கிழமை reddit தளத்தில் இந்த போட்டோ பதிவேற்றப்பட்ட பிறகு நடந்த உரையாடல்கள். இது எப்போது எங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் இல்லை.

இதற்கு முன் ரியோ டி ஜெனிரோவில் ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமறைவாக இருக்கிறார் என ஒரு செல்ஃபி ஐந்து வருடங்களுக்கு முன்பு டிரெண்ட் ஆனது. ஆனால் அது ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என்று அந்த நபரே முன்வந்து விளக்கம் கொடுத்தார்.

இப்படியே போனால் உலகம் உருண்டையானது இல்லை, இல்லுமினாட்டிகளால்தான் உலகம் இயங்குகிறது போன்ற கான்ஸ்பிரஸி தியரிகளுடன் இந்த `ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறார்' தியரியும் சேர்ந்துவிடும் போல!

வைரலாகும் `அஜித்'தின் துப்பாக்கிச் சுடும் போட்டோ - பின்னணி இதுதான்!