Published:Updated:

பிட்காய்ன்களைப் பயன்படுத்தலாமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன? #bitcoin

பிட்காய்ன்
பிட்காய்ன்

க்ரிப்டோகரன்சி அல்லது பிட்காய்ன் தொடர்பான எந்தவொரு சட்டமும் இந்தியாவில் இல்லாத நிலையில், அதை ரிசர்வ் வங்கியால் தடை செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

`பிட்காய்ன்', இரண்டு ஆண்டுகளாக இந்த வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு பிட்காய்ன்கள் இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கியபோதே, ரிசர்வ் பேங்க் முட்டுக்கட்டைப் போட்டுவிட்டது. பிட்காய்ன் கொண்டு பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தியும் மக்களும் பிட்காய்ன் வணிகத்தில் ஈடுபடக் கூடாது எனவும் கூறியதால் அதன் பின்னர் பிட்காய்ன் தொடர்பான விவாதங்களும் பெரிதாக நடைபெறவில்லை. ஆனால், பிட்காய்ன் தொடர்பாக எந்தவொரு சட்டமும் இன்னும் கொண்டுவரப்படவும் இல்லை. எனவேதான், இன்று அதற்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது உச்ச நீதி மன்றம்.

supreme court
supreme court

`க்ரிப்டோகரன்சி தொடர்பான எந்தவொரு சட்டமும் இந்தியாவில் இல்லாத நிலையில், அதை ரிசர்வ் வங்கியால் தடைசெய்ய முடியாது' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதோடு க்ரிப்டோகரன்சி மேல் ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையையும் நேற்று (மார்ச் 4) நீக்கியுள்ளது. நிஜ உலகில் புழங்க முடியாத, டிஜிட்டலாக மட்டுமே உள்ள கரன்சிக்குத்தான் கிரிப்டோகரன்சி எனப் பெயர். அதில் நமக்கு மிகவும் பரீட்சையமானவை பிட்காய்ன்கள். இதுதவிர எத்திரியம் (Ethereum), ரிப்பில் (Ripple), லைட்காய்ன் (Litecoin) எனப் பல வகையான கிரிப்டோகரன்சிகள் உலகமெங்கும் உள்ளன. உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இவையனைத்துக்கும் பொதுவானதே.

Vikatan

கடந்த 2019-ம் ஆண்டு க்ரிப்டோகரன்சிகளைப் பற்றிய வரைவு தயரிக்க உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு கொடுத்த அறிக்கையின்படி க்ரிப்படோகரன்சிகள் தடை செய்யப்பட வேண்டும் எனவும். மீறி க்ரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துபவர்கள் கடுமையான தண்டைனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் ஒரு வரைவைத் தயார்செய்து கொடுத்தது. அதன் அடிப்படையில் இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை மைனிங் செய்யவோ பயன்படுத்தவோ கூடாது. மீறினால், ஐந்திலிருந்து 10 வருடம் வரை சிறைத்தண்டனையும் 25 கோடி வரை அபராதமும் விதிக்க வேண்டும் என அந்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வரைவைப் பற்றிய விவாதங்கள், நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத் தொடரிலும் விவாதிக்கப்படவில்லை. க்ரிப்டோகரன்சிகள் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதைச் சற்றுகாலம் தள்ளி வைத்துள்ளதையே இது காட்டுகிறது.

உருவமில்லை... உலகத்தில் இல்லை... ஆனால், கரன்சிகளின் கடவுளா 'பிட்காயின்'? #Bitcoin
உருவமில்லை... உலகத்தில் இல்லை... ஆனால், கரன்சிகளின் கடவுளா 'பிட்காயின்'? #Bitcoin

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகம் முழுவதும் பிட்காய்ன்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஐந்து மில்லியன் இந்தியர்கள் 1,000 கோடிக்கும் அதிகமாக க்ரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக வசீர்எக்ஸ் என்ற க்ரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிக்கல் ஷெட்டி (Nischal Shetty) தெரிவித்திருந்தார். க்ரிப்டோகரன்சிகளைக் கண்ணை மூடிக்கொண்டு தடைசெய்ய வேண்டும் என்பது பொருளாதாரத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியாது.

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் க்ரிப்டோகரன்சியைத் தடை செய்திருக்கின்றன. சீனா, இந்தோனேசியா, நேபால் உள்ளிட்ட சில நாடுகளில் க்ரிப்டோகரன்சியை வைத்திருக்கலாம். ஆனால், வணிகப் பயன்பாட்டுக்கோ வேறு வகையான நேரடிப் பணப் பரிமாற்றங்களுக்கோ அவற்றைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் ஜப்பான், சிங்கப்பூர், இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகள் க்ரிப்டோகரன்சியை அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருக்கின்றன. இவை தவிர, மற்ற நாடுகள் எந்த விதமான தடையும் அமல்படுத்த வில்லை. அதே நேரம், அதைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கவில்லை.

Cryptocurrency
Cryptocurrency

பிட்காய்ன் போன்ற க்ரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக்க குறைந்த அளவிலேயே இருப்பதால். அதன் மதிப்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தனிப்பட்ட நபர் எடுக்கும் முடிவுகூட அதன் மதிப்பைப் பாதிக்கும் வகையில் இருக்கிறது. அதோடு பல நாட்டு அரசுகளும் க்ரிப்டோகரன்சி தொடர்பான முடிவுகளை இன்னும் எடுக்காமல் இருப்பதும் அதன் மதிப்பு நிலைத் தன்மை அடையாமல் தடுக்கிறது. மேலும் பிட்காய்ன்கள் யாரிடம் இருக்கிறது, எங்கே செய்கிறது என்பதை அறிய முடியாது என்பதுதான் அதைத் தடை செய்ய வேண்டும் என்று பலரும் கூறுவதற்கான காரணமாக இருக்கிறது. அதே நேரம், பிட்காயின்கள் எவரிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது என்பதால்தான் பலரும் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Vikatan

க்ரிப்டோகரன்சிகளை அங்கீகரிப்பதன் மூலம் பல வகையான வேலை வாய்ப்பு உருவாகும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ப்ளாக் செய்ன் டெவலப்பர்கள், மைனிங் செய்பவர்கள் என வேலைவாய்ப்புகள் உருவாகும். 20,000 ப்ளாக் செய்ன் டெவலப்பர்களுடன் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

Reserve Bank of India
Reserve Bank of India

தற்போது பிட்காய்ன் வைத்திருப்பவர்கள் அல்லது இது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் குழப்பமான சூழ்நிலையே இருந்து வருகிறது. தற்போது உச்ச நீதி மன்றத் தீர்ப்பிலும், இது தொடர்பான சட்டங்கள் இல்லாத நிலையில் ரிசர்வ் வங்கி க்ரிப்டோகரன்சியைத் தடை செய்யக் கூடாது, என்றுதான் குறிப்பிட்டிருக்கிறது. மத்திய அரசு, க்ரிப்டோகரன்சி தொடர்பான வரையரைகளைப் பரிசீலனை செய்து, க்ரிப்டோகரன்சிக்கான சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு