Published:Updated:

வெறிகொண்டு உயரும் பிட்காயின் மதிப்பு... முதலீடு செய்யலாமா? #Bitcoin

Bitcoin
News
Bitcoin

உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது சீனாவில்தான். அடுத்த இடத்தில் இருப்பது இந்தியாவில். ஆனால், பிட்காயின்கள் குறித்து இன்னும் இங்குத் தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டுமே கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிட்காயின் மோகம் கடந்த ஓரிரு ஆண்டுகளாக கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால், இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பிட்காயின் பற்றிய பேச்சு அடிபடத்தொடங்கியிருக்கிறது. இப்படி கிரிப்டோகரன்சி மீண்டும் ட்ரெண்டாக காரணம், என்றுமில்லாத அளவுக்கு பிட்காயினின் மதிப்பு சடசடவென உயர்ந்து கொண்டிருப்பதுதான்.

முதல்முறையாக இரண்டு நாட்களுக்கு முன் 23,000 டாலர் மதிப்பை எட்டியது ஒரு பிட்காயினின் மதிப்பு. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய். இந்த ஆண்டு மட்டும் சுமார் 220% உயர்ந்திருக்கிறது. திடீரென பிட்காயின் மதிப்பு இந்த வருடம் உயரக் காரணம் என்ன, இப்படியான கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாமா?

Bitcoin
Bitcoin

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கு முன் பிட்காயின் எப்படியானது என்பதை பார்ப்போம். பிட்காயின் எப்படி உருவானது என்பதில் இன்னும் சில குழப்பங்கள் நீடிக்கவே செய்கிறது. ஆனால், சடோஷி நக்காமோட்டோ என்ற புனைபெயர் கொண்ட ஒருவர்தான் இந்த கிரிப்டோகரன்சி முறையை வடிவமைத்திருக்கிறார். 2008-ல் உலகமெங்கும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்த புதிய எலெக்ட்ரானிக் கரன்ஸி முறைக்கான திட்டத்தை விளக்கும் வெள்ளை அறிக்கையை இவர் வெளியிட்டார். Peer-to-peer முறையில் நடுவில் எந்த ஒரு பொருளாதார அமைப்போ, வாங்கியோ குறுக்கிடாமல் ஒருவரிடமிருந்து ஒருவர் பரிமாறிக்கொள்ளும் முறையாக இதை அவர் வடிவமைத்திருந்தார். பிரபல டோரென்ட் பதிவிறக்க முறையைப் போன்றதுதான் இது. நடுவில் சர்வர் என்று ஒன்று இருக்காது. ஒருவர் தேவையான ஃபைலை பதிவிறக்கிய பின் அவர் கணினியே seeder ஆக மற்றவர்களுக்கு அந்த ஃபைலை பதிவிறக்க உதவும். இதே போன்றதொரு முறையில் பரிவர்த்தனை ஒன்றைத் தொடங்குவதே பிட்காயினின் திட்டம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

bitcoin.org தளத்தில் குறிப்பிட்டிருப்பது இதுதான்,

"nothing more than a mobile app or computer program that provides a personal Bitcoin wallet and allows a user to send and receive Bitcoins with them"

அதாவது இன்று நாம் பயன்படுத்தும் பணப் பரிவர்த்தனை மொபைல் ஆப்/இணையதளம் போன்றதுதான் பிட்காயின். உங்களுக்கு பிட்காயின் வாலட் ஒன்று வழங்கப்படும். அதைக்கொண்டு உங்களால் பிட்காயினை அனுப்பவும் பெறவும் முடியும். பொதுவாக ஒரு பிட்காயின் அதன் முகவரி கொண்டு அடையாளம் கொள்ளப்படும். 26 முதல் 35 ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்களைக் கொண்டிருக்கும் இந்த முகவரி. '1' அல்லது '3' என்ற எண்ணில் இந்த முகவரி தொடங்கும். இது வெளிப்படையாக வெளியில் தெரியாது. ஆனால், ஒரு பிட்காயின் அல்லது அதன் பகுதியை இதைக் கொண்டுதான் குறிக்க முடியும். பிட்காயின் வைத்திருப்பவர்களுக்கு ஒரு 'Private Key' தரப்படும். அதைக் கொண்டுதான் வாலட்டை திறக்க முடியும்.

Bitcoin
Bitcoin

ஒரு நாட்டின் அரசால் வழங்கப்படும் டாலர், ரூபாய், யென் போன்ற கரன்ஸிகளுக்கு மாற்றாகவே இந்த கிரிப்டோகரன்சிகள் கொண்டுவரப்பட்டன. உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒற்றை கரன்ஸியாக இருக்கவேண்டும் என்ற நோக்கில்தான் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகள் உருவாகின. இப்போதுதான் ரூபாயும் கூட டிஜிட்டல் ஆகிவிட்டதே எனக் கேட்கிறீர்களா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஜிட்டல் கரன்ஸிக்கும் பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிக்கும் வித்தியாசம் உண்டு. இப்போது டிஜிட்டலாக நாம் செய்யும் பரிவர்த்தனைகளில் நிஜ கரன்ஸியை டிஜிட்டல் வடிவில் பரிமாறிக்கொள்வோம். அதாவது, 100 ரூபாய் நோட்டை கையில் எடுத்துச் செல்லாமல் டிஜிட்டலாக பரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், 100 ரூபாய் என்பது தாளாலான நோட்டுதான். ஆனால், க்ரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படுபவை.

சரி, ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு கடையில் பொருட்கள் வாங்கி வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்துகிறீர்கள் என எடுத்துக்கொள்வோம். 100 ரூபாய் செலுத்தவேண்டும் என்றால் அந்த கடை உங்கள் கணக்கிலிருந்து 100 ரூபாயை வங்கியிடம் கேட்கும். அந்த வங்கி அந்த தொகை உங்களிடம் இருப்பில் இருக்கிறதா என்று பார்த்து அந்த தொகையைக் கடைக்கு அனுப்பிவைக்கும். அனைத்தும் டிஜிட்டல் என்பதால் எல்லாம் நொடிகளில் நடந்துவிடுகிறது. பரிவர்த்தனைகள் மற்றும் பேலன்ஸ் தொகை கணக்குகளை வங்கிகள் பராமரிக்கும். இப்படி ஒரு அமைப்பே தேவையில்லை என்கின்றன கிரிப்டோகரன்ஸிகள்.

Bitcoin
Bitcoin
QuoteInspector.com

பிட்காயினில் ஏற்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் பிளாக்-செயின்(block-chain) முறையில் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்றை மட்டும் மாற்றுவது முடியாத காரியம். மொத்த சங்கிலியிலும் அது மாற்றத்தை உண்டாக்கும். இதனால் இதில் முறைகேடுகள் நடக்கவோ, திருட்டுகள் நடக்கவோ வாய்ப்பில்லை. முன்பு சொன்னது போல டோரன்ட் பதிவிறக்கத்துக்கு தேவைப்படுவது போல இந்த சங்கிலியை வைத்திருக்கப் பல கணினிகள் தேவைப்படும். இதற்குத் தேவையான கம்ப்யூட்டிங் திறனைக் கொடுப்பதன் மூலம் நீங்களும் சங்கிலியின் ஒரு பகுதியாக மாறுவீர்கள். உலகமெங்கும் இப்படி இந்த சங்கிலியில் பலரும் இருப்பார்கள். இவர்களின் கணினிகள் அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும். இப்படி சங்கிலியில் ஒரு பங்காக இருப்பதால் என்ன பயன் கிடைக்கும்? இதைச் செய்வதற்கு அவ்வப்போது புது பிட்காயின் உருவாக்கப்பட்டு உங்களுக்குச் சன்மானமாக அது தரப்படும். இப்படி பிட்காயின் பெறுவதை 'பிட்காயின் மைனிங்' என்பார்கள். இப்படி இருப்பதால்தான் பிட்காயினை 'Global decentralised currency' என்கிறார்கள்.

இன்னும் விரிவாக பிட்காயின் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரைகளைப் படியுங்கள்.

சரி, தொழில்நுட்ப பின்னணியில் மூழ்கிப் போகாமல் விஷயத்துக்கு வருவோம். ஏன், என்றுமில்லாத அளவு பிட்காயின் மதிப்பு சடசடவென உயர்ந்துவருகிறது?

பிட்காயினை ஒருவர் மூன்று வழிகளில் பெற முடியும். ஒன்று கம்ப்யூட்டிங் வசதிகள் கொண்டு 'பிட்காயின் மைனிங்' செய்து புதிய பிட்காயின்களை பெறலாம். இல்லை, ஏற்கெனவே பிட்காயின் வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து அதை வாங்கலாம். இது அல்லாமல் தற்போது பிட்காயின்களை பரிமாறிக்கொள்ளப் பங்குச்சந்தை போன்று 'Bitcoin Exchange' அமைப்புகளையும் சில நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. இதில் பணம் கொடுத்து பிட்காயின்களை உங்களால் பெற முடியும். இப்படி பங்குச்சந்தை போன்ற ஒரு கட்டமைப்புக்குள் வந்துவிட்டதால் ஒரு பிட்காயினுக்கு பண மதிப்பு ஒன்று நிர்ணயிக்கப்பட்டது. இது டிமாண்ட் சப்ளை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும்.

Bitcoin
Bitcoin

டிமாண்ட் அதிகரித்திருப்பதால் இப்போது பிட்காயினும் வரலாறு காணாத வளர்ச்சியை கண்டுவருகிறது. பிட்காயினுக்கென இன்னொரு அம்சமும் உண்டு, புதிய பிட்காயின்களை குறிப்பிட்ட அளவுதான் உருவாக்க முடியும். தனிநபர் ஒருவர் மட்டும் அதிகப்படியான பிட்காயின்களை உருவாக்கி லாபம் பார்க்க அனுமதிக்காது பிட்காயின் ப்ரோடோகால். மொத்தமாகவே உலகமெங்கும் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே மொத்தமாக உருவாக்க முடியும். அதுதான் லிமிட். இப்போதுவரை 1.85 கோடி பிட்காயின்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இதனால்தான் டிமாண்ட் அதிகரிக்க மதிப்பும் எகிறுகிறது.

ரூபாய்க்கு பைசா இருப்பது போல பிட்காயினிலும் பகுதியாகப் பரிவர்த்தனைகள் செய்ய முடியும். பிட்காயினின் மிகக் குறைந்த பின்னம் 'சடோஷி'(Satoshi) என்று அழைக்கப்படுகிறது.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் இன்னும் சில விஷயங்களும் பிட்காயின்களின் இந்த வரலாறு காணாத வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றன. உலகின் முன்னணி பணப் பரிவர்த்தனை சேவையான PayPal தொடங்கி நம்மூர் வங்கிகள் வரை வெளிப்படையாக இல்லையென்றாலும் மறைமுகமாக கிரிப்டோகரன்ஸிகளுக்கு அதன் முடிவுகள் மூலம் பச்சைக்கொடி காட்டியிருக்கின்றன. எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, யெஸ் பேங்க் போன்ற வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை வங்கிக் கணக்குகளின் மூலம் கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்தில் ஈடுபட அனுமதித்துள்ளன.

2018-ல் ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் கிரிப்டோகரன்சி பரிமாற்ற கணக்குகளை முடக்கியது இந்திய வங்கிகள். கிரிப்டோகரன்சிக்கான பரிவர்த்தனைகளை அப்போது தடைசெய்திருந்தது மத்திய ரிசர்வ் வங்கி. உச்சநீதிமன்றம் இந்த தடையை நீக்குமாறு இந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்திருந்த பணத்தையும், காப்பீடு முதலீடுகளையும் பிட்காயின் பக்கம் திருப்ப ஏற்கெனவே குறைவான இருப்பு இருக்கும் அதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளன. 2010-களின் தொடக்கத்தில் ஒரு டாலருக்கு உங்களால் பல பிட்காயின்களை பெற்றிருக்க முடிவும்.

Bitcoin
Bitcoin

இப்போது உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது சீனாவில்தான். அடுத்த இடத்தில் இருப்பது நாம்தான். ஆனால், இன்னும் இங்குத் தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை. கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டுமே கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

க்ரிப்டோகரன்சி தொடர்பான எந்தவொரு சட்டமும் இந்தியாவில் இல்லாத நிலையில், அதை ரிசர்வ் வங்கியால் தடைசெய்ய முடியாது
உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் க்ரிப்டோகரன்சியைத் தடை செய்திருக்கின்றன. சீனா, இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளில் க்ரிப்டோகரன்சியை வைத்திருக்கலாம். ஆனால், வணிகப் பயன்பாட்டுக்கோ வேறு வகையான நேரடிப் பணப் பரிமாற்றங்களுக்கோ அவற்றைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றன. ஆனால் ஜப்பான், சிங்கப்பூர், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 15 நாடுகள் க்ரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கின்றன. இவை தவிர, மற்ற நாடுகள் எந்த விதமான தடையும் அமல்படுத்தவில்லை. அதே நேரம், அதைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமான ஒரு விஷயம் என அங்கீகரிக்கவும் இல்லை.

முன்பு சொன்னது போல பிட்காயின் முறையை ஆரம்பித்தவர்கள் இதை ஒரு முதலீட்டு முறையாகப் பார்க்கவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் பணத்திற்கு மாற்றாகவே பார்த்தனர். ஆனால், மக்களின் போக்கு இதை ஒரு முதலீடாக மாற்றியிருக்கிறது. இருந்தும் பொருளாதார நிபுணர்கள் பிட்காயினில் முதலீடு செய்யலாம் எனப் பரிந்துரைக்கத் தயங்கவே செய்கின்றனர்.

திடீர் ஏற்ற இறக்கங்களும் காரணம். டிசம்பர் 2017-ல் பிட்காயினின் மதிப்பு 18,000 டாலர் இருந்தது. இது 2018 டிசம்பரில் வெறும் 3200 டாலராகச் சரிந்தது. மீண்டும் ஜூலை 2019-ல் 10,000 டாலர் மதிப்பைத் தொட்டது. அடுத்து 2020 மார்ச்சில் மீண்டும் 5,500 டாலராக சரிந்தது. இப்போது 20,000 டாலர் மதிப்பைக் கடந்திருக்கிறது. இப்படி வெறும் சப்ளை டிமாண்டை மட்டும் வைத்து மதிப்பு இப்படி கன்னாபின்னாவென ஏறி இறங்குவதால் யாராலும் தைரியமாக கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யலாம் எனச் சொல்ல முடியவில்லை.

பொருளாதார நிபுணர்கள் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கிரிப்டோகரன்சிகள் பற்றிக் குறிப்பிடுகின்றனர். தங்கம், பணம் போன்று பிட்காயினுக்கு பின் நிஜ உலகில் எந்த பொருளோ, சொத்தோ கிடையாது. அதனால் முறையாக அரசு அமைப்புகள் இதை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே நிலையான முதலீட்டு விஷயமாக பிட்காயின் மாறும்.

ஆனால், அப்படிச் செய்தால் கிரிப்டோகரன்ஸி ஆரம்பிக்கப்பட்ட காரணமே மழுங்கடிக்கப்படும். Decentralized கரன்ஸியாக அது இருக்காது!