தமிழகத்தில் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் பெற ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு கடந்த அக்டோபர் 6-ம் தேதி பிறப்பித்த ஆணையில், ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருந்தால் தான் அரசு வழங்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண் இணைப்பில் 2.36 கோடி வீட்டு பயனாளர்கள், 21 லட்ச விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்களும் கட்டாயமாக உள்ளடக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆதார் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆதார் இல்லாதவர்கள், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்த நகலுடன் பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவசம் மற்றும் மானிய மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதாரை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது எப்படி?
மின்பகிர்வு நிறுவன (Discom) இணையதளத்தில், `consumer info'-வின் கீழ் ஆதாரை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பதற்கான லிங்க் இன்னும் ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும். அதில் தகவல்களைப் பூர்த்தி செய்தால், உங்களது மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
மேலும், ஆன்லைனில் மின்சார கட்டணம் செலுத்தும்போது, தங்களது மின்சார நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தகவல் தரப்படும். ஆதார் எண்ணுடன் மின்சார நுகர்வோர் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.