Published:Updated:

2ஜிபி டேட்டா கார்ட்... பயனளிக்குமா எடப்பாடி அரசின் திட்டம்?!

Online class
Online class ( representational image )

இன்றைய சூழலில் அனைவருக்கும் இணையமும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருக்கிறது. தொடர்ந்து தொழில்நுட்பம் கொண்டு கல்வியை மேம்படுத்துவதில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் இருந்துவருகிறது.

பாலிடெக்னிக், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தினமும் 2 GB டேட்டா வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாகக் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் இணைய வழி வகுப்புகள் மூலமே கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அமையும் எனத் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இணையம்
இணையம்

"கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காகக் கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (2GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Card) வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்'' என்கிறது எடப்பாடியின் அறிக்கை.

கோவிட் 19-க்கு பிறகான கல்வி இணையம் சார்ந்துதான இருக்கப்போகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நேரடி பாதி இணைய வழி பாதி எனத்தான் இனிவரும் காலங்களில் கல்வியானது இருக்கப்போகிறது. அதனால் அரசின் இந்தத் திட்டமானது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. அதே நேரத்தில் இது மட்டுமே முழுமையான தீர்வாக அமைந்துவிடாது. இது தற்போது நிலவும் சிக்கலுக்குத் தற்காலிக தீர்வாகவே இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

college students
college students

என்னதான் டேட்டா கொடுத்தாலும் கிராமங்களில் அதைப் பயன்படுத்தும் அளவுக்கு நெட்வொர்க் இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதனால், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நீண்டகால திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.

கல்வி அமைப்புகளுக்கு அருகிலோ, கிராமங்களிலோ 'ஸ்மார்ட் கல்வி மையங்கள்' அமைக்கப்பட வேண்டும். நொடிக்கு 10 GB நெட்வொர்க் பேண்ட்வித் கொண்ட இந்தக் கல்வி மையங்களால் குறிப்பிட்ட அளவிலான மாணவர்கள் பயனடைவார்கள் என்கின்றனர் சில கல்வியாளர்கள்.

முதலில் குறிப்பிட்டிருப்பது போல எல்காட் இந்த டேட்டா கார்டுகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்யும். தனியார் கல்லூரிகளில் உதவித்தொகை (Scholarship) பெரும் மாணவர்களும் இந்த டேட்டா கார்டுகளை பெறலாம்.

இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டாலும் பெரும்பாலான கல்லூரிகள் இன்னும் இணைய வழி வகுப்புகள்தான் எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு குறித்த உங்களின் கருத்தை இந்த லிங்க்கில் பதிவு செய்யலாம்.
"மாணவர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா!"- முதல்வர்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
அடுத்த கட்டுரைக்கு