Published:Updated:

உக்ரைன் நாட்டின் டெக் முகம்: உலக அளவில் கோலோச்சும் உக்ரைனியர்கள் இவர்கள்தான்!

உக்ரைன் டெக்

உக்ரைனைத் தாயகமாகக் கொண்டு டெக் உலகை ஆண்டு வரும் சிலரைப் பற்றிய கட்டுரையே இது!

உக்ரைன் நாட்டின் டெக் முகம்: உலக அளவில் கோலோச்சும் உக்ரைனியர்கள் இவர்கள்தான்!

உக்ரைனைத் தாயகமாகக் கொண்டு டெக் உலகை ஆண்டு வரும் சிலரைப் பற்றிய கட்டுரையே இது!

Published:Updated:
உக்ரைன் டெக்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பிரச்னை தீவிரமடைவதற்கு முன்னாள், உக்ரைன் என்றொரு நாடு இருக்கிறது என்பது மட்டுமே நமக்குத் தெரியும். அது வளர்ந்த நாடா, வளர்ந்து கொண்டிருக்கிற நாடா, அதன் வரலாறு என்ன என்பது பற்றி அனேகம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உக்ரைன் சிறிய நாடு தான் எனினும், நாம் நினைத்ததை விடப் பல இடங்களிலும் உக்ரைனின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. கூகுளின் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை இருப்பதையே இந்தியர்கள் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். டெக் உலகில் உக்ரைனைச் சேர்ந்தவர்களின் பங்கும் நிறையவே இருக்கிறது. உக்ரைனைத் தாயகமாகக் கொண்டு டெக் உலகை ஆண்டு வரும் சிலரைப் பற்றிய கட்டுரையே இது.

ஜான் கூப் - வாட்ஸ்அப் (Whatsapp)

ஜான் கூம் (Jan Koum)
ஜான் கூம் (Jan Koum)

நம் தினசரி வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு செயலி வாட்ஸ்அப். வாட்ஸ்அப்பை தற்போது ஃபேஸ்புக் வைத்திருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், வாட்ஸ்அப்பை உருவாக்கியவர் ஜான் கூம் என்ற உக்ரேனியர். உக்ரைனில் இருக்கும் கையூ (Kyiu) நகரில் பிறந்து பாஸ்டிவ் நகரில் வளர்ந்தவர் ஜான் கூம். 16-வது வயதில் தன்னுடைய அம்மா மற்றும் பாட்டியுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் மவுண்டெய்ன் வ்யூவில் குடியேறியிருக்கிறார். அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பையும் தொடங்கிய கூம் கல்லூரி படிக்கும் போதே அங்கிருக்கும் Ernst & Young நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார். அங்குதான் வாட்ஸ்அப்பின் மற்றொரு நிறுவனரான ப்ரையன் ஆக்டனையும் சந்தித்திருக்கிறார் கூம். அதன் பிறகு 1997-ல் இருந்து 9 வருடங்கள் யாகூவில் இருவரும் ஒன்றாகப் பணி செய்கிறார்கள். 2007-ல் யாகூவில் இருந்து விலகி இருக்கும் போது தான் வாட்ஸ்அப்பை உருவாக்குவதற்கான யோசனை கூமுக்கு உருவாகியிருக்கிறது. இந்த யோசனையைத் தனது மற்றொரு நண்பரான அலெக்ஸ் பிஷர்மென்னுடன் பகிர்ந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து தனது 33-வது பிறந்தநாளின் போது வாட்அப்பை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் ஜான் கூம். வாட்அப் உருவான பிறகே ப்ரையன் ஆக்டனையும் தன்னுடன் சேர்த்து வாட்ஸ்அப்பை மேம்படுத்தியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேக்ஸ் லெவ்சின் - பேபால் (PayPal)

மேக்ஸ் லெவ்சின் (Max Levchin)
மேக்ஸ் லெவ்சின் (Max Levchin)

இந்தியாவில் இருக்கும் போன்பே, பேடிஎம் போல அமெரிக்காவின் பிரபலமான எலக்ட்ரானிக் பேமன்ட் சேவை பேபால். 1998-ல் பீட்டர் தெய்ல், லூக் நாசெக் மற்றும் மேக்ஸ் லெவ்சின் ஆகியோர் இணைந்து கான்ஃபினிட்டி என்ற பெயரில் பாதுகாப்பு மென்பொருட்களை உருவாக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இவர்களில் மேக்ஸ் லெவ்சின் உக்ரைனைச் சேர்ந்தவர். இவரும் உக்ரைனில் இருக்கும் கையூ நகரில் பிறந்தவர் தான். 1975-ல் பிறந்த இவர் 1991-ல் அமெரிக்காவில் குடியேறினார். இவர்கள் உருவாக்கிய கான்ஃபினிட்டி ஒரே வருடத்தில் பாதுகாப்பு மென்பொருட்களைத் தயாரிக்கும் வணிகத்தில் இருந்து விலகி டிஜிட்டல் வாலெட் சேவை வழங்கும் நிறுவனமாக வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியது. தொடங்கிய இரண்டே ஆண்டில் எலான் மஸ்க்கின் x.com நிறுவனத்துடன் இணைந்தது கான்ஃபினிட்டி. 2001-ல் பேபால் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கடந்த 2021-ல் வருவாய் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் 134-வது இடத்தைப் பிடித்திருக்கிறது பேபால்.

இதனைத் தொடங்கியவர்களுள் ஒருவரான உக்ரைனைச் சேர்ந்த மேக்ஸ் லெவ்சின் அதன் பிறகு ஸ்லைடு, HVF மற்றும் Affirm என மேலும் மூன்று நிறுவனங்களுக்கும் துணை நிறுவனராக இருந்திருக்கிறார். தற்போது Affirm நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார் லெவ்சின்.

கிராமர்லி (Grammarly)

கிராமர்லி (Grammarly)
கிராமர்லி (Grammarly)

இன்று ஆங்கிலத்தை எழுத்து வடிவில் தங்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் அனைவரும் கிராமர்லியை கண்டிப்பாகப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆங்கிலத்தில் நாம் எழுதியதைச் சரிபார்த்து, திருத்திக் கொடுக்கும் வகையிலான சேவை அது. அதனை உருவாக்கியவர்கள் அலெக்ஸ் ஷெவ்சென்கோ, மேக்ஸ் லிட்வின் மற்றும் மைட்ரோ லிடர் ஆகிய மூவர் தான். இவர்கள் மூவருமே உக்ரேனியர்கள் என்பது கூடுதல் தகவல். முழுவதுமாக உக்ரேனியர்களாலேயே உருவாக்கப்பட்ட சேவை கிராமர்லி. இன்று உலகம் முழுவதும் இருக்கும் பல முன்னணி பல்கலைக்கழகங்கள் முதல் ஆங்கிலம் பயன்படுத்தும் அனைவரும் கிராமர்லியைப் பயன்படுத்தி வருகிறார்கள். 2009-ல் தொடங்கப்பட்ட கிராமர்லியின் தற்போதைய மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலர்.

இவை தவிர ப்ளாக்செயின் தளமான சொலனாவின் (சோலோன்) நிறுவனர்களுள் ஒருவரான அனாடலி அகோவென்கோவும் உக்ரைனைச் சேர்ந்தவர் தான். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளைக் கடந்து சிறிய நாடான உக்ரைன் நாட்டிலும் தங்களுடைய அலுவலகத்தை அமைத்திருக்கிறது ஸ்னாப்சாட்.