Published:Updated:

டெக்தமிழா Notifications

கடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு!

ஒன்ப்ளஸ் 8

ஒன்ப்ளஸ் 7T-யின் சூடே இன்னும் அடங்கவில்லை அதற்குள் ஒன்ப்ளஸ்ஸின் அடுத்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. ஒன்ப்ளஸ் 8-ன் ப்ரோடோடைப் ரெண்டர் படங்களை OnLeaks என்னும் பிரபல இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களை வைத்துப் பார்க்கும்போது தோற்றத்தில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவை போலவே இது இருக்கும் எனத் தெரிகிறது. பாப்-அப் கேமராவுக்குப் பதிலாக பஞ்ச்-ஹோல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்ப்ளஸ் 7 ப்ரோவில் இருந்த ஃபுல் டிஸ்ப்ளே அனுபவம் முழுவதுமாக கிடைக்காது என்றாலும் சற்றே பெரிய பேட்டரிக்கான இடத்தை இது தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ஒன்ப்ளஸ் போனில் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வரலாம் எனத் தெரிகிறது. 7 ப்ரோவைவிட ஒன்ப்ளஸ் மெலிதானதாகவும் இருக்கும். இது அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

ஆப்பிள் ஈவென்ட்

எப்போதும் போல இந்த வருடமும் ஆப்பிள் சிறப்பு நிகழ்வு நல்ல முறையில் நடந்துமுடிந்தது. ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். முதலில் பின்புற கேமரா வடிவமைப்புக்காக இவை அனைத்துமே முதலில் கலாய்க்கப்பட்டாலும் கேமராவின் தரத்தை வைத்து மக்களை கவர்ந்திருக்கிறது ஆப்பிள். இதுபோக சிறிய அப்டேட்களுடன் புதிய 7th ஜென் ஐபேடும் வெளியானது. ஆனால் இந்த நிகழ்வின் ஹைலைட் ஆப்பிளின் புதிய சேவைகள்தான். ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி ப்ளஸ் என இம்முறை கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங்கில் களம் காணவுள்ளது. இந்தியாவில் இந்த சேவைகள் இரண்டும் மாதம் தலா 99 ரூபாய்க்கு கிடைக்கும். இது ஆப்பிள் சாதனங்களுக்கு மட்டுமேயான ஸ்பெஷல் சேவைகள். ஆப்பிள்++!

MI Tv | ஷியோமி டிவி

புதிய அறிமுகங்களால் ஸ்மார்ட்போன் சந்தை எந்த அளவு சூடுபிடித்திருக்கிறதோ அதே அளவு டிவி சந்தையும் சூடுபிடித்திருக்கிறது. மோட்டோரொலோ தனது புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. ஒன்ப்ளஸ் தனது Q1 டிவி சீரிஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வாவேவும் இந்த வேளைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருக்கும் ஷியோமியும் 4 புதிய டிவிகளை அறிமுகப்படுத்தியது. இப்படி எல்லா விலைகளிலும் இப்போது மொபைல் நிறுவனங்களாக தொடங்கிய நிறுவனங்கள் டிவிகள் விற்கத்தொடங்கியுள்ளன. மொபைல் விற்பனையில் சம்பாதித்த பெயரை வைத்து டிவி சந்தையிலும் அறுவடை செய்ய நினைக்கின்றன இந்த நிறுவனங்கள். சோனி, சாம்சங், எல்ஜி போன்ற முன்னணி டிவி நிறுவனங்களுடன் இவை எப்படி போட்டிபோடும் என்பது விரைவில் தெரியும். ஆனால் இந்த போட்டி எப்படியும் வாடிக்கையாளருக்கே லாபமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்திருப்போம்!

Emmy | எம்மி

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி மற்றும் வெப்-சீரிஸுக்கான விருது வழங்கும் 'எம்மி' விருதுகள் விழா கடந்த மாதம் நடந்துமுடிந்தது. டி.வி தொடர்களின் ஆஸ்காரான இதில் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'செர்னோபில்' போன்ற HBO-வின் முன்னணி தொடர்கள் சிறந்த தொடர்களுக்கான விருதுகளை வென்றன. இருப்பினும் இம்முறை பாரம்பரிய டிவியை விட வெப்சீரிஸ்களே அதிக விருதுகளைத் தட்டிச்சென்றன. மொத்தமாக HBO தயாரிப்பில் வெளிவந்த நிகழ்ச்சிகள் 9 ப்ரைம்டைம் எம்மி விருதுகள் வெல்ல, நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சிகள் 4 விருதுகளும், ப்ரைம் வீடியோ நிகழ்ச்சிகள் 7 விருதுகளும் வென்றன. அதாவது இந்த டிவி vs ஸ்ட்ரீமிங் போட்டியில் 11-9 என இம்முறை வெற்றிகண்டிருக்கிறது ஸ்ட்ரீமிங்.

Microsoft | மைக்ரோசாஃப்ட்

கூட்டத்தோடு கூட்டமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வருடாந்தர சர்ஃபேஸ் நிகழ்வும் சமீபத்தில் நடந்து முடிந்தது. சர்ஃபேஸ் மொபைல், விண்டோஸ் 10x இயங்குதளம், சர்ஃபேஸ் நியோ, சர்ஃபேஸ் ப்ரோ x , சர்ஃபேஸ் இயர்பட்ஸ் , சர்ஃபேஸ் ப்ரோ 7 மற்றும் சர்ஃபேஸ் லேப்டாப் 3 என இம்முறை அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட். இதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது சர்ஃபேஸ் நியோ மொபைலின் அறிவிப்புதான். அனைவரும் மடங்கும் வகை போன்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினாலும் மைக்ரோசாஃப்ட் மொபைல் பக்கம் திரும்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதில் கூடுதல் சர்ப்ரைஸ் இந்த சர்ஃபேஸ் நியோ ஆண்ட்ராய்டில் இயங்கும் என்பதுதான். தற்போதைக்கு ப்ரோடோடைப் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது 2020-ம் ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேலக்ஸி ஃபோல்ட் | Galaxy Fold

சாம்சங் புதிய முயற்சியாக முதல் மடங்கும் போனை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. பல சோதனைகளைக் கடந்து இந்த 'கேலக்ஸி ஃபோல்ட்' மொபைல் இறுதியாக தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அக்டோபர் 4-ம் தேதி, சாம்சங்கின் இணையதளத்தில் இதற்கான முதல்கட்ட முன்பதிவுகள் தொடங்கின. இந்த மொபைலை வாங்கப் பலரும் காத்திருக்கின்றனர் போல, தொடங்கி 30 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்திருக்கிறது இந்த போன். 1,600 போன்கள்தான் முன்பதிவுக்கு வந்தன என்றாலும் இப்படி விற்றுவிடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம் இதன் விலை. ஆம், கேலக்ஸி ஃபோல்ட்டின் விலை ரூபாய் 1.65 லட்சம்! இந்த மொபைல் வரும் 20-ம் தேதி முன்பதிவு செய்தவர்களின் கைகளுக்கு வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் இந்தப் புதிய போனின் வாடிக்கையாளர்களுக்குப் பல சிறப்புச் சேவைகளையும் வழங்கவிருக்கிறது. ஒரு வருடத்துக்கு Accidental Damage Protection அளிக்கிறது. இதில் ஒரு தடவை போனின் டிஸ்ப்ளேவை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இந்தச் சலுகை இந்தியாவில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.