Published:Updated:

கொரோனாவுக்கு எதிராகக் கைகோக்கும் ஆப்பிள் - கூகுள் கூட்டணி! இது எந்தளவுக்குப் பலன் தரும்? #LongRead

Technology v Corona
Technology v Corona

சுமார் 98% ஸ்மார்ட்போன்களை நிர்வகிக்கும் டெக் உலகின் இரு பெரும் நிறுவனங்களான கூகுளும் ஆப்பிளும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கைகோத்துள்ளன. இந்த நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன, இந்தப் போரில் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும்?

நாம் நினைத்ததை விடவும் அதிகப் பாதிப்புகளை மனிதக்குலத்திற்கு ஏற்படுத்திவருகிறது கொரோனா வைரஸ் (COVID-19). நாம் யோசித்துக்கூடப் பார்க்காத பல விஷயங்கள் உலகைச் சுற்றி நடந்துவருகின்றன. அப்படிதான் சாத்தியமாக வாய்ப்பே இல்லை என அனைவரும் கருதிய ஒரு கூட்டணி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காகச் சமீபத்தில் ஒன்றுசேர்ந்துள்ளது. டெக் உலகின் இருபெரும் நிறுவனங்களான கூகுள், ஆப்பிள் அமைத்திருக்கும் கூட்டணி பற்றித்தான் குறிப்பிடுகிறேன். குறைகூற எப்போது வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருக்கும் இந்த இரு நிறுவனங்களும் கைகோத்திருப்பது எதற்காக, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கூட்டணியால் ஏதேனும் பயனிருக்குமா போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்தான் இந்தக் கட்டுரையில் தேடப்போகிறோம்.

கொரோனா பாதிப்புகள்
கொரோனா பாதிப்புகள்
AP | Rajanish Kakade

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வதற்கு முன்பு, கொரோனாவிற்கு எதிரான நம்முடைய போராட்டத்தில் தொழில்நுட்பம் என்னென்ன வகைகளில் உதவலாம் என்று பார்ப்போம். இன்றைய லாக்-டவுன் சூழலில் கிட்டத்தட்ட அனைத்திலுமே நமக்குத் தொழில்நுட்பம் உதவிகரமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், குறிப்பாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு என்று பார்த்தால் இரண்டு முக்கிய விஷயங்களில் தொழில்நுட்பம் பங்காற்ற முடியும்.

Quarantine Monitoring
தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிப்பது

முதல் விஷயம் இதுதான். ஏற்கெனவே இந்த விஷயத்தில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற தொடங்கிவிட்டது. உலகமெங்கும், ஒவ்வொரு பகுதியிலும் இதற்காகப் பல செயலிகள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. தைவானில் பயன்படுத்தப்பட்டுவரும் 'Electronic Fence' முறையை இதற்கு ஒரு முக்கிய உதாரணமாகச் சொல்லலாம். தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், அவரது வீட்டை விட்டு வெளியே சென்றாலோ (மற்றொரு டவரில் கனெக்ட்டாகினால்), மொபைலை ஸ்விட்ச்-ஆப் செய்தாலோ 15 நிமிடங்களுக்குள் அவரைத் தேடி வீட்டிற்கே வந்துவிடுகின்றார்கள் தைவான் அதிகாரிகள்.

Quarantine | தனிமைப்படுத்தப்பட்டவர்
Quarantine | தனிமைப்படுத்தப்பட்டவர்
Emilio Morenatti
சென்னை மாநகராட்சியின் `GCC CORONA Monitoring’ ஆப்! - பயன்படுத்த எளிதான சில வழிமுறைகள்

ஹாங்காங்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் கைகளில் லொகேஷன் ட்ராக்கிங் பேண்ட்கள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பூரில் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை மெசேஜ் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் வீட்டில் இருக்கிறாரா என்பது சோதனைசெய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கூட சமீபத்தில் 'GCC Corona Monitoring' என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியது. 'Photo Geotagging' முறையைப் பயன்படுத்தும் இந்த ஆப், தனிமைப்படுத்தப்பட்டவர் வீட்டில்தான் இருக்கிறாரா என்பதைக் கண்காணிக்கவும், புதிதாகக் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் கொண்டுள்ளவர்களைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது.

இதுபோன்ற தீர்வுகள் பற்றி ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் ஒருவர் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பதைக் கண்காணிக்கத் தொழில்நுட்பம் உதவினாலும், மனிதர்களின் உதவியில்லாமல் இந்த நடைமுறை முழுமையடையாது. மேலே குறிப்பிட்ட தைவான் உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். அதில் முக்கிய ஓட்டை ஒன்று உண்டு. போன் கையிலிருந்தால்தான் இந்த ட்ராக்கிங்கையெல்லாம் செய்ய முடியும். தனிமைப்படுத்தப்பட்டவர் வீட்டிலேயே மொபைலை விட்டுவிட்டு வெளியே சென்றால் என்ன செய்வது... இதற்காக 'எப்போதும் போன்களை கைகளிலேயே வைத்துக்கொள்ளுங்கள்!' என அவர்களுக்கு அவ்வப்போது அழைத்து வலியுறுத்துகின்றனர் தைவான் அதிகாரிகள். திடீரென முளைத்த பிரச்னை என்பதால் மேலே குறிப்பிட்ட அனைத்துத் தொழில்நுட்பத் தீர்வுகளிலுமே இப்படி எதாவது ஒரு ஓட்டை இருக்கும். அதை மனிதன்தான் தன் கைகளை வைத்து மறைத்தாக வேண்டும். இதனால் இந்த விஷயத்தில் தொழில்நுட்பம் அவசியமானதுதான், ஆனால் அது முழுமையான தீர்வாக முடியாது.

Contact Tracing
பாதிக்கப்பட்டவர்கள் யாரையெல்லாம் தொடர்புகொண்டார்கள் எனக் கண்டுபிடிப்பது

தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற வாய்ப்புள்ள இன்னொரு விஷயம் இதுதான். பாதிக்கப்பட்டவரை நேர்காணல் செய்தால் அவர் யாரையெல்லாம் சந்தித்தார் என அவருக்குத் தெரிந்தவர்களை மட்டுமே பட்டியலிடுவார். எங்கோ ஒரு கடையில் வரிசையில் அருகில் நின்றவர் பற்றியோ, பேருந்தில் உடன் அமர்ந்து பயணித்தவர் பற்றியோ அவரால் கூற முடியாது. ஆனால், அவர்களுக்கும் தொற்று பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இங்குதான் தொழில்நுட்பத்தின் உதவி தேவைப்படுகிறது.

தென்கொரிய அதிகாரிகள்! | South Korean Officers
தென்கொரிய அதிகாரிகள்! | South Korean Officers
Lee Jin-man

இதற்கும் பல தீர்வுகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. தென்கொரியாவை எடுத்துக்கொள்வோம். அங்கு கிட்டத்தட்ட கான்டக்ட் ட்ரெஸிங் என்பது முழுக்க முழுக்கவே தொழில்நுட்பம் சார்ந்ததுதான். அந்நாட்டு அரசு, மொபைலின் லொகேஷன் டேட்டாவில் தொடங்கி சிசிடிவி கேமராக்கள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் என அனைத்தையுமே இதற்காகப் பயன்படுத்துகிறது. இதன்மூலம் ஒரு குடிமகனின் அனைத்து நகர்வுகளையும் கண்காணிக்கிறது. இப்போது ஒருவருக்குக் கொரோனா இருப்பது தெரியவந்தால் அவரது இரண்டாவது பெயர், பாலினம், வயது, வீடு இருக்கும் பகுதி, கிரெடிட் கார்டு ஹிஸ்டரி என அனைத்தையும் கொண்டு ஒரு அலெர்ட்டை மக்களுக்கு அனுப்புகிறது. இந்த முறையால் கடந்த 40 நாள்களில் புதிதாக கொரோனவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் குறைந்துள்ளது.

கேட்க நன்றாக இருந்தாலும் இதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. இப்படித் தகவல்களை முழுவதுமாக பொதுவெளியில் வெளியிடுவது என்பது பாதிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு அவரை அவமதிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. பெயர் முழுவதுமாகக் கிடைக்கவில்லை என்றாலும் இரண்டாம் பெயர் மற்றும் கூடுதல் தகவல்களைக் கொண்டு ஒருவர் இவர்தான் என எளிதில் துப்பறிந்து அடையாளம் கண்டுவிடுகின்றனர் சிலர். அவர்களைக் குறிவைத்து அவமதிக்கவும் செய்கின்றனர். அந்த ஊரின் மனித உரிமை ஆணையம், இதனால் கொரோனா சோதனை செய்யவே சிலர் பயப்படுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவைத் தவிர மற்ற நாடுகள் மொபைலின் ப்ளூடூத், GPS'யையே இதற்கும் நம்புகின்றன. பல கான்டக்ட் ட்ரெஸிங் செயலிகள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன.

சென்னையின் கான்டக்ட் ட்ரெஸிங்
சென்னையின் கான்டக்ட் ட்ரெஸிங்

சென்னை மாநகராட்சி பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்த முக்கியமான இடத்தையும் நேரத்தையும் குறிப்பிட்டு மக்களை எச்சரிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவரை பற்றிய தனிநபர் தகவல்கள் வெளியிடப்படுவதில்லை. அந்த வகையில் சென்னையின் முயற்சியைப் பாராட்டலாம். ஆனால், இந்த முறையில் வெகு சிலரையே நம்மால் ட்ரெஸ் செய்யமுடியும்.

மத்திய அரசு `ஆரோக்கியா சேது' என்ற ஆப்பை இதற்காக அறிமுகப்படுத்தியது. இது GPS, ப்ளூடூத் என இரண்டையுமே பயன்படுத்துகிறது. இதில் எக்கச்சக்க பிரைவசி சிக்கல்கள் இருக்கின்றனவாம். Internet Freedom Foundation (IFF) இந்த முறை குறித்துப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகள் ப்ளூடூத் மட்டுமே பயன்படுத்துகின்றன. அப்படிச் செய்யும்போது தனிநபர் சார்ந்த தகவல்கள் பெரிதாகச் சேமிக்கப்படுவது இல்லை.

ஆனால், இவை அனைத்தும் தனித்தனி செயலிகள் என்பதால் மக்கள் பதிவிறக்கினால் மட்டுமே இவற்றால் எதாவது நன்மை நடக்கும். ஒவ்வொருவரையும் கட்டாயப்படுத்தி செயலியைப் பதிவிறக்க வைக்க முடியாது. இந்த இடத்தில்தான் உள்ளே வருகின்றன ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள்.

ஆப்பிள் - கூகுள் கூட்டணி
ஆப்பிள் - கூகுள் கூட்டணி
`கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால்..!’ - மத்திய அரசின் `ஆரோக்கிய சேது' செயலி

இன்று உலகின் ஸ்மார்ட்போன்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒன்று அது ஆப்பிளின் ஐபோனாக இருக்கும், இல்லை கூகுளின் ஆண்ட்ராய்டில் இயங்கும் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது அல்லாத ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம்தான்.

85.41%
மொத்த ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு போன்களின் சதவீதம். (2019 தரவு)
ஐபோன் | Iphone
ஐபோன் | Iphone
AP / Kathy Willens
13.28%
மொத்த ஸ்மார்ட்போன்களில் ஐபோன்களின் சதவீதம். (2019 தரவு)

இப்படி இருக்கையில் கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் இந்த இரு வகைகளுக்குள் வந்துவிடும்.

என்ன செய்யப்போகிறது ஆப்பிள்-கூகுள் கூட்டணி?

இந்தக் கூட்டணி கான்டக்ட் ட்ரெஸிங்கிற்கு ப்ளூடூத்தைப் (Bluetooth Lower Energy) பயன்படுத்தப்போகிறது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டிலும் இது வேலைசெய்யும். அது எப்படி என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். இரு நபர்கள் அருகருகே இருக்கிறார்கள் என்றால், அவர்களது மொபைல்கள் இரண்டும் அவற்றுக்குள் 'கீ' (Key) ஒன்றை ப்ளூடூத் மூலம் பரிமாறிக்கொள்ளும். இதில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சுகாதார ஆப்பில் அதைப் பதிவிடவேண்டும். அப்படிச் செய்தால் அதற்கு முந்தைய 14 நாள்களில் அவர் மொபைலில் பதிவான அனைத்து கீ-களும் கிளவுடிற்கு அனுப்பப்படும். அனைத்து மொபைல்களும் அவ்வப்போது தங்களது கீ கிளவுடில் இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டே இருக்கும், இருந்தால் அதை உடனடியாக தெரியப்படுத்தும்.

ஆப்பிள்-கூகுள் 'கான்டக்ட் ட்ரெஸிங் | Apple-Google Contact Tracing
ஆப்பிள்-கூகுள் 'கான்டக்ட் ட்ரெஸிங் | Apple-Google Contact Tracing

இதை இரண்டு கட்டங்களாக நடைமுறைக்குக் கொண்டுவரவுள்ளன கூகுளும் ஆப்பிளும். முதல் கட்டமாக ஒரு API (Application Program Interface) அடுத்த மாதம் வெளியிடப்படும். இதை அங்கீகரிக்கப்பட்ட சுகாதார செயலிகள் (ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டும்) பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் செயலிகளில் ஏதேனும் ஒன்றை நாம் பதிவிறக்கவேண்டும். பின்பு மேலே சொன்னது போலப் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டிருந்தால் உங்களுக்குத் தகவல் வந்துசேரும்.

இதிலும் முன்பு சொன்ன அதே சிக்கல் உண்டு. இது பயனுள்ளதாக இருக்கச் செயலிகளை மக்கள் பெருமளவில் பதிவிறக்கவேண்டும். இதைச் சுகாதார அமைப்புகள் ஒவ்வொருவருக்கும் சென்று அறிவுறுத்த வேண்டும்.

ஆண்ட்ராய்டு/ஐஓஎஸ்
ஆண்ட்ராய்டு/ஐஓஎஸ்

இதற்குத்தான் இரண்டாம் கட்டத்தில் தீர்வு வைத்திருக்கிறது ஆப்பிள்-கூகுள் கூட்டணி. அடுத்தடுத்த மாதங்களில் ஆண்ட்ராய்டு/ஐஓஎஸ் இயங்குதளத்திலேயே இது, ஓர் அம்சமாகச் சேர்க்கப்படும். அப்படிச் செய்யும்போது தனியாகச் செயலி ஒன்றைப் பதிவிறக்க வேண்டிய அவசியம் இருக்காது. உங்கள் போனுக்கு நீங்கள் அனுமதி கொடுத்தால் போதும். இது செயல்பாட்டுக்கு வந்துவிடும். இன்னும் இதுகுறித்த தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பிரைவசி சர்ச்சைகளில் இதற்கு முன்பு கூகுள் சிக்கியிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் பிரைவசி பெரிய சிக்கலாக இருக்காது. சாதாரண கான்டக்ட் ட்ரெஸிங்கைவிடவும் இந்த முறை பாதுகாப்பானதாகத்தான் தெரிகிறது. உங்களது அடையாளம் என்னவென்று வெளியில் தெரியாமல்தான் மொத்த ட்ரெஸிங்குமே இதில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் சிக்கல் அதன் ப்ளூடூத் பயன்பாட்டில்தான் இருக்கிறது. 2012-க்கு பிறகு வெளியான ஆண்ட்ராய்டு போன்களிலும், 2011-க்கு பிறகு வெளியான ஐபோன்களிலும் Bluetooth LE வசதி இருக்கும். இதனால் உங்களிடம் மிகவும் பழைய போன் ஒன்று இருந்தால் மட்டுமே சப்போர்ட் இல்லாமல் போகும். இதனால் சப்போர்ட் என்பது பெரிய பிரச்னை இல்லை.

Bluetooth LE
Bluetooth LE

Bluetooth LE சிக்னலானது சுமார் 30 அடிவரை செல்லக்கூடியது. ஆனால், சுகாதார அமைப்புகள் இருவருக்கிடையேயான பாதுகாப்பான இடைவெளி என்பது 6 அடி என்கின்றன. ப்ளூடூத் சிக்னல்களால் பைனரியில்தான் வேலை செய்யமுடியும். அதாவது இரண்டு போன்கள் அருகிலிருந்தனவா என்று கேட்டால் ஆம், இல்லை என்ற பதில்களை மட்டுமே அதனால் தர முடியும். 'இந்த போன் அந்த போனிலிருந்து 4 அடி தூரத்தில் இருக்கிறது' என்றெல்லாம் அதை வைத்துக் கண்டுபிடிக்க முடியாது. மேலும் நடுவில் சுவர் இருந்ததா இல்லையா என்று கூட தெரியாது. இதனால் கான்டக்ட் ட்ரெஸிங்கில் ப்ளூடூத் பயன்பாடு என்பது தவறான முடிவுகளைத் தருமோ என்ற கவலையும் எழுகிறது. தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லாத பலரும் (False-Positive) இந்த முறையால் எச்சரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலும் ஒருவர் இன்னொருவருடன் எவ்வளவு நேரம் இருந்தால் அது தொடர்பாக (Contact) எடுத்துக்கொள்ளப்படும் என்ற தகவலும் தெளிவாக இல்லை. வல்லுநர்கள் இது ஐந்து நிமிடங்களாக இருக்கும் என்கின்றனர். மேலும் ஒருவருக்குத் தொற்று இருக்கிறது என்பதை எப்படி வெரிஃபை செய்வது என்பதிலும் குழப்பங்கள் இருக்கிறது. ஒருவர் விளையாட்டாக தனக்கு கொரோனா இருக்கிறது எனப் பதிவுசெய்தால் அவருடன் தொடர்பில் வந்த அனைவரும் தேவையில்லாமல் பதட்டமடைய வேண்டியது வரும். இந்த பிரச்னைக்கு அரசின் சுகாதார அமைப்புகளுடன் ஆப்பிள்-கூகுள் கூட்டணி நெருக்கமாக வேலை செய்யும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பில் மத்திய அரசு சொல்லும் `ஆக்ரா மாடல்' - ஹாட்ஸ்பாட் நகரம், மாடல் நகரமானது எப்படி?

இப்படி உண்மையான தொடர்புகளை விட அதிக பொய்யான (False-Positive) தொடர்புகளைக் கண்டுபிடிக்குமேயானால் இதனால் எந்த நன்மையுமே இல்லை. இதன் செயல்பாடு எப்படியானதாக இருக்கும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்பு சொன்னது போல இந்தப் போராட்டத்தில் தொழில்நுட்ப உதவியானது இன்னும் முழுமை பெறவில்லை!
அடுத்த கட்டுரைக்கு