Published:Updated:

"சொன்னா செய்வோம்!"- அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் களமிறங்கிய டெஸ்லா!

Tesla | டெஸ்லா
Tesla | டெஸ்லா

கர்நாடகா மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா போன்ற பிற மாநில அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது டெஸ்லா. ஆராய்ச்சி மையம் (R&D) ஒன்று அமைக்க இடம் தேடிவருகிறது அந்நிறுவனம்.

உலகின் பிரபல மின்சார கார் நிறுவனம் டெஸ்லா. எலான் மஸ்க்கை உலகின் நம்பர் 1 பணக்காரர் (தற்போது நம்பர் 2) ஆக்கிய நிறுவனம் இதுதான். அமெரிக்க நிறுவனமான டெஸ்லா இந்தியாவுக்கு எப்போது வரும், வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன எனப் பல கேள்விகள் சில வருடங்களாகவே ஆட்டோமொபைல் ரசிகர்களால் கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதுபற்றி கேட்கும் போதெல்லாம் 'விரைவில் வந்துருவோம் பாஸ்' என எஸ்கேப் ஆகிக்கொண்டே இருந்தது டெஸ்லா.

இப்போது இங்கு அதிரடி என்ட்ரிக்கு முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது டெஸ்லா. சொல்லப்போனால் அதிகாரப்பூர்வமாக இந்திய மண்ணில் காலடியெடுத்து வைத்துவிட்டது டெஸ்லா. ஆம், 'டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்டு எனர்ஜி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தைப் பெருநிறுவன விவகாரங்கள் துறையிடம் பதிவுசெய்திருக்கிறது டெஸ்லா.

Tesla Car
Tesla Car

வெளிநாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமாக பெங்களூரில் இது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின்படி வைபவ் தனேஜா, வேங்கடரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபெயின்ஸ்டீன் ஆகிய மூவரும் இந்தியத் துணை நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

எங்கள் மாநிலத்திற்கு வரும் டெஸ்லாவை வரவேற்கிறோம். அந்நிறுவனத்திற்கு முழு ஒத்துழைப்பு தருவோம். எந்த பிரச்னையுமின்றி இயங்க அனைத்து வசதிகளும் டெஸ்லாவுக்கு செய்து தரப்படும்.
கர்நாடக தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர்

இன்னும் தொழிற்சாலையை எங்கு அமைப்பது என்பது முடிவுசெய்யப்படவில்லை, அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார் ஜெகதீஷ் ஷெட்டர். இந்தியா மின்சார வாகனங்கள் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் டெஸ்லா என நம்புகிறது கர்நாடக அரசு. சமீபத்தில்தான் 2021-ல் இந்தியா வரும் டெஸ்லா எனத் தெரிவித்திருக்கிறார் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. முதலில் இங்கு விற்பனையில் மட்டும் களமிறங்கும் டெஸ்லா. அதற்குப் பின்பே தேவை பொறுத்து உற்பத்தியில் இறங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

2016-ம் ஆண்டு முதலே இந்தியச் சந்தையில் நுழைய முயற்சி செய்துவருகிறது டெஸ்லா. ஆனால், போதிய கட்டமைப்பு இல்லாததாலும் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை விரிவடையாததாலும் இத்தனை நாள் தன் என்ட்ரியை தள்ளிப்போட்டிருந்தது டெஸ்லா. கடந்த அக்டோபரில் 'நிச்சயம் அடுத்த வருடம் இந்தியாவில் களமிறங்குவோம்' என்றிருந்தார் எலான் மஸ்க். கர்நாடகா மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா போன்ற பிற மாநில அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது டெஸ்லா. ஆராய்ச்சி மையம் (R&D) ஒன்று அமைக்க இடம் தேடிவருகிறது அந்நிறுவனம்.

Tesla plant in Fremont, California
Tesla plant in Fremont, California
AP Photo/Ben Margot, File
'As Promised' எனக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டோம் என இந்திய என்ட்ரி குறித்து ட்வீட் செய்திருக்கிறார் எலான் மஸ்க்.

அதிகம் விற்பனையாகும் டெஸ்லாவின் மாடல் 3 தான் முதலில் இந்தியாவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் அதன் விலை $37,990 – $54,990 இருக்கும். இந்திய மதிப்பில் 28-40 லட்சம் ரூபாய். இந்தியாவில் சற்றே அதிக விலையில் 70 லட்சம் ரூபாய்க்கு மாடல் 3 விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் ஹை-எண்டு EV-க்களுக்கென தனி சந்தை இல்லை. டெஸ்லாவின் அறிமுகம் பல உற்பத்தியாளர்களை இந்த செக்மென்ட் பக்கம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மின்சார வாகன புரட்சியில் பெரும் நிறுவனமாக டெஸ்லா எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த கட்டுரைக்கு