Published:Updated:

இருக்கு ஆனா இல்லை... எலான் மஸ்க்கை புலம்பவிட்ட கொரோனா டெஸ்டிங்!

எலான் மஸ்க் | Elon Musk
எலான் மஸ்க் | Elon Musk ( Wikimedia Commons )

"ஒரே மாதிரியான டெஸ்ட், ஒரே சாதனம், எடுத்த செவிலியர் கூட ஒரே ஆள்தான். ஆனால் டெஸ்ட் ரிசல்ட் மட்டும் வேறு வந்திருக்கிறது" எனப் பொங்கியிருக்கிறார் எலான் மஸ்க்.

டெக் ஜீனியஸாக பலராலும் அறியப்படுபவர் எலான் மஸ்க். அதிநவீன மின்சார கார்கள் தயாரிக்கும் டெஸ்லாவின் நிறுவனர் மற்றும் CEO. இது அல்லாமல் ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் போன்ற நிறுவனங்கள் மூலம் வருங்கால தொழில்நுட்பங்களை அறுவடை செய்துவருபவர். இருந்தும் கொரோனா விஷயத்தில் இவர் தெரிவித்த பல கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின. அது பற்றிய செய்தியைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

`ஊரடங்கை மீறி டெஸ்லா நிறுவனத்தைத் திறந்த எலான் மஸ்க்!’- ஆதரவளித்த ட்ரம்ப்

இப்படி இருந்த மனிதனையும் கொரோனா டெஸ்டிங் பாடாய்ப்படுத்தியிருக்கிறது. இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர் COVID-19 டெஸ்ட் எடுத்திருக்கிறார். ஆனால், இன்னும் தீர்மானமாக அவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. நான்கு ரேபிட் டெஸ்ட்கள் எடுக்கப்பட்டதாகவும் அதில் இரண்டு பாசிட்டிவாகவும், இரண்டு நெகட்டிவாகவும் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். "ஒரே மாதிரியான டெஸ்ட், ஒரே சாதனம், எடுத்த செவிலியர் கூட ஒரே ஆள்தான். ஆனால் டெஸ்ட் ரிசல்ட் மட்டும் வேறு வந்திருக்கிறது" எனப் பொங்கியிருக்கிறார் மஸ்க்.

இந்த ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்கள் வைரஸுக்குப் பதிலாக வைரஸின் மேல் புறத்தில் இருக்கும் புரதம் இருக்கிறதா என்பதையே டெஸ்ட் செய்யும். இவற்றுக்கு எந்த சோதனை கூடங்களும் (Lab) தேவைப்படாது. கல்வி நிலையங்கள் போன்ற இடங்களிலேயே வேகமாக எடுத்து ரிசல்ட்டை சொல்லி விட முடியும். ஆனால், இவை வைரஸ் இருக்கிறதா என நேரடியாகச் சோதனை செய்யும் RT-PCR டெஸ்ட் அளவுக்குத் துல்லியமாக இருப்பதில்லை. நம்மூரிலும் ரேபிட் டெஸ்ட்கள் அதிக அளவில் தவறான முடிவுகளைக் காட்டியதை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். அதனாலேயே நம்மூர் அரசு RT-PCR பக்கம் முழுவதுமாக ஒதுங்கிவிட்டது. ஏற்கெனவே கொரோனவை பற்றிய புரிதல் இல்லாமல் பேசிவரும் மஸ்க்குக்கு இந்த அனுபவம் கொரோனா குறித்து இன்னும் நம்பிக்கையில்லாத உணர்வைக் கொடுத்திருக்கிறது.

Elon musk
Elon musk
Sebastian Gollnow | AP

"மிகவும் போலியான ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கிறது" எனத் தனது அனுபவம் பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். "டெஸ்ட் வேண்டுமானால் போலியாக இருக்கலாம் அதிலிருந்து வரும் வருமானம் போலியல்ல" என அவர் ட்வீட்டுக்கு ஒருவர் ரிப்ளை தட்ட "நிச்சயமாக!" என அதற்கு பதில் ட்வீட்டியிருக்கிறார் மஸ்க்.

முன்பு சொன்னது போலத் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பிவருபவர் மஸ்க். சில நேரங்களில் வதந்திகளையும் உண்மையென நம்பி பகிர்ந்திருக்கிறார். "மருத்துவர்கள் கொரோனா எண்ணிக்கைகளை அதிகமாகக் காட்டி வருமானத்தைக் கூட்டப் பார்க்கின்றனர்" என்று ஒரு முறை கூறியிருந்தார். அடுத்து பலரும் பலனில்லை எனத் தூக்கிப்போட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயினின் பலன்களை விளக்கும் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

"இப்படி பெருந்தொற்றுக்கு பயந்து போய் கிடப்பது முட்டாள்தனம்" என்றார். "வீட்டிலேயே இருக்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது ஃபாசிசம்" என்றார். மார்ச்சில் ஒரு முறை, ஏப்ரலுக்குள் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாகக் குறையும் என்றும் கூறியிருந்தார். இப்படி கொரோனா விஷயத்தில் ட்ரம்ப்புக்குப் போட்டி கொடுத்துவந்தவருக்கு இப்படியான ஓர் அனுபவம் ஏற்பட இன்னும் கொரோனா குறித்த சந்தேகங்கள் அவருக்கு அதிகமாகியிருக்கிறது. இந்த ரேபிட் டெஸ்ட்களுடன் இரண்டு RT-PCR டெஸ்ட்களும் எடுத்திருக்கிறார் எலான் மஸ்க். முடிவு தெரிய 24 மணிநேரம் ஆகும் என்பதால் அதற்குக் காத்துக்கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் இன்னும் தொற்று பரவுவது பெரிதாக அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் அங்குப் புதிதாக சுமார் 1,60,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
அடுத்த கட்டுரைக்கு