Published:Updated:

நம்மை மட்டும் அல்ல... AI-யையும் நெருக்குகிறது கொரோனா! #LongRead

AI-யையும் நெருக்கும் கொரோனா
News
AI-யையும் நெருக்கும் கொரோனா

கொரோனா பாதிப்புகள் உலகமெங்கும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இது மறைமுகமாக செயற்கை நுண்ணறிவு மீதும் அழுத்தம் கொடுத்துவருகிறது. எப்படி?

கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர்... இவைபோன்ற சேவைகள் சரிவரச் செயல்பட அதிகம் தேவைப்படும் ஊழியர்கள் யாரெனக் கேட்டால் மென்பொருள் வடிவமைப்பாளர்கள், டேட்டா பொறியாளர்கள் என்று பலரும் பதிலளிப்பார்கள். ஆனால், உண்மையில் இந்த நிறுவனங்களின் முக்கிய ஊழியர்கள் யாரென்றால், `Content Moderators' தான்.

யார் இவர்கள்?
இவர்கள் ஏன் இந்தச் சமூக வலைதள சேவைகள் இயங்க மிகவும் அவசியம்?

மேலே குறிப்பிட்ட சேவைகள் யாவும் மக்களால் ஆனது. அவர்களின் கருத்துகள், வீடியோக்கள், புகைப்படங்களால் நிறைந்தது. இந்தத் தளங்கள் கருத்துச்சுதந்திரம் மிக்கவை என்றாலும் சில விஷயங்களை இவற்றால் அனுமதிக்க முடியாது. ஆபாசப் படங்கள்/வீடியோக்கள், வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள், தீவிரவாத பரப்புரைகள், தற்கொலையைத் தூண்டும் பதிவுகள், சிறார் வதை பதிவுகள் எனப் பல விஷயங்களைக் களையெடுக்க வேண்டிய கட்டாயம் இந்த நிறுவனங்களுக்கு உண்டு. இதுபோன்ற பதிவுகளை, தங்கள் கண்களில் பட்டுவிட்டால் பலரும் இந்தச் சேவைகளைவிட்டு வெளியேறிவிடுவார்கள். இதனால் முதலில் பயனாளர்களைத் தக்கவைக்க இதுபோன்ற பதிவுகளை நீக்கவேண்டியதாக இருந்தது. பின்னாளில் இதன் ஆபத்துகள் கருதி இதற்கான அதிகாரபூர்வ சட்டங்களும் அமலுக்கு வந்தன. இதுபோன்ற பதிவுகளைச் சோதித்து அவை விதிமுறைகளை மீறுகிறதா இல்லையா என்று உறுதிசெய்து நீக்குவதுதான் Content Moderators-ன் வேலை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், இதைச் செய்வதில் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்குச் சிக்கல் இருந்தது. இணையப் புரட்சியால் தினமும் லட்சக்கணக்கில் பயனாளர்களைச் சேர்த்துவந்தன இந்தச் சேவைகள். அப்படி, கோடிக்கணக்கான பயனாளர்கள் இருக்கும் இந்தச் சேவைகளில் தினமும் லட்சக்கணக்கான சர்ச்சைக்குரிய பதிவுகள் `ரிப்போர்ட்' செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தன. இந்தப் பதிவுகளை ஒவ்வொன்றாகப் பார்த்து அது தங்களின் விதிமுறைகளை மீறாமல் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். ஆனால், அத்தனை ஊழியர்கள் இந்த நிறுவனங்களிடம் இல்லை. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண மற்ற நிறுவனங்களை நாடின இந்தச் சேவை நிறுவனங்கள். அதாவது இந்த வேலைகளை அவுட்சோர்ஸ் செய்யத் தொடங்கின.

Content Moderators
Content Moderators

இந்த மாற்றங்கள் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பெருமளவில் நடந்தன. தேர்தல்களின் போதுதான் விதிமுறைகளை மீறும் பதிவுகள் அதிகளவில் பதிவிடப்படுகின்றன. இது அமெரிக்கா என்றில்லை, எல்லா நாடுகளுக்குமே பொருந்தும். அப்போதுதான் Accenture, Cognizant போன்ற பல நிறுவனங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான `Content Moderators'-யை ஒப்பந்த ஊழியர்களாகப் பணியமர்த்தின ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருந்தது, அது தகவல் பாதுகாப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்தக் கணினியில் யார் வேலைபார்க்கிறார்கள், எந்த டேட்டாவை யார் பயன்படுத்துகிறார்கள் என, தனது சொந்த ஊழியர்களை இந்த நிறுவனங்களால் எளிதில் கண்காணிக்க முடியும், கட்டுக்குள் வைத்திருக்கமுடியும். ஆனால், இப்படி மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வேலையைப் பிரித்து கொடுக்கும்போது அதைச் செய்ய முடியாது. பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிய வாய்ப்புகள் உண்டு. ஏற்கெனவே ஃபேஸ்புக் 2016-ல்தான் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையில் சிக்கியது. அது பலருக்கும் ஃபேஸ்புக் மீது இருந்த நம்பிக்கையை மொத்தமாகச் சிதைத்தது. இதனால் தகவல் பாதுகாப்பை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தன டெக் நிறுவனங்கள்.

ஃபேஸ்புக் தலைமையகத்தில் மார்க்
ஃபேஸ்புக் தலைமையகத்தில் மார்க்

இதனால் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டாலும், அங்கு வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்படி வேலைபார்ப்பவர்களுக்கு கடும் பாதுகாப்புக்கு உட்பட்ட தனி வேலையிடங்கள் (குறிப்பிட்ட தளங்கள்) அவர்களின் அலுவலகத்திலேயே தயார்செய்யப்பட்டன. அதற்குள் அவர்கள் மொபைல்களைக் கூட எடுத்து செல்ல அனுமதி கிடையாது. இதன்மூலம் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்தன ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள். இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான வேலைச்சூழல் மிகவும் கடுமையாகவே இருந்தது. தங்களை அறியாமல் மொபைல்களை உள்ளே எடுத்து சென்றதுக்குச் சிலர் பணிநீக்கம் கூடச் செய்யப்பட்டனர். அங்கே அவர்கள் பார்த்து நீக்கும் பதிவுகளும் அவர்களை மனதளவில் பாதித்தன. இப்படியான பணிச்சூழலில் பலரும் மனஅழுத்தத்துக்கு உள்ளானார்கள். இந்தச் சூழலை மாற்றும்படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவர்களுக்கு ஆதரவாகப் பல குரல்களும் எழுந்தன. ஆனால், மக்களின் தகவல் பாதுகாப்பு விஷயத்தில் சிறிய தவறு நடந்தாலும் பெரிய அவப்பெயர் வந்துவிடும் என்பதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்த எந்த நிறுவனமும் தயாராக இல்லை.

இப்படியான நேரத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகமெங்கும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனாவைவிடவும் அது குறித்த வதந்திகள் காட்டுத்தீ போலப் பரவிவருகின்றன. அதைக் கட்டுக்குள் வைக்க அதிக Content Moderators தேவைப்படத்தொடங்கினர். ஆனால், தற்போது வேலையில் இருப்பவர்களை இந்தப் பாதுகாக்கப்பட்ட வேலையிடங்களுக்கு வர வைப்பதே சிக்கலாகத்தான் இருந்தது. அப்படிச் செய்தால் நோய் பரவ இந்த நிறுவனங்களே காரணமாகிவிடும். அதற்காக இந்த இக்கட்டான நேரத்தில்கூட வீட்டிலிருந்து அவர்களை வேலைசெய்ய அனுமதிக்க முடியாது. இந்த மாதிரியான நேரத்தில் தகவல் கசிந்தால் அவ்வளவுதான்.

டெக் அலுவலகம்
டெக் அலுவலகம்
axios

இதனால் ஒப்பந்த ஊழியர்கள் பலரையும் கடந்த சில நாள்களுக்கு முன்புவரை கட்டாயமாக வேலைக்கு வரச் சொல்லியிருக்கின்றன சில நிறுவனங்கள். `சொந்த ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் உண்டு, ஒப்பந்த ஊழியர்கள் எங்களுக்குக் கிடையாதா?' எனக் குமுறினர் இந்த ஊழியர்கள். இறுதியாக, தற்போதுதான் அவர்களையும் வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனால், பணி கிடையாது. ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்க்காத இந்த காலத்திற்கான ஊதியத்தையும் வழங்குவதாக அறிவித்தது ஃபேஸ்புக்.

இதுகுறித்து ஃபேஸ்புக் வெளியிட்ட அறிக்கை,

For both our full-time employees and contract workforce there is some work that cannot be done from home due to safety, privacy and legal reasons. We have taken precautions to protect our workers by cutting down the number of people in any given office, implementing recommended work from home globally, physically spreading people out at any given office and doing additional cleaning. Given the rapidly evolving public health concerns, we are taking additional steps to protect our teams and will be working with our partners over the course of this week to send all contract workers who perform content review home, until further notice. We’ll ensure that all workers are paid during this time.
ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

இந்த அறிவிப்பு வந்த அதே நேரத்தில் COVID-19 குறித்த தவறான பரப்புரைகள் மற்றும் வதந்திகளைக் கட்டுப்படுத்துவதில் முழுவீச்சில் செயல்படுவோம், நம்பகமான தகவல்களை மட்டுமே ஆதரிப்போம் என்றும் தெரிவித்துள்ளன கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள். அது எப்படி, Content Moderators பலரும் வீட்டில் இருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து பணியும் செய்யவுமில்லை, பிறகு எப்படி இதை இந்த நிறுவனங்கள் சாத்தியப்படுத்தும் என்ற கேள்வி உங்களுக்கு எழும். அதற்குப் பதில் வைத்திருக்கின்றன இந்த நிறுவனங்கள்.

பெரும் சர்ச்சைகள் இல்லாத சில விஷயங்களை வீட்டிலிருந்தே Moderate செய்ய அனுமதி தந்துள்ளன சில நிறுவனங்கள். மிக முக்கியமான Content Moderation வேலைகளைத் தனது நிறுவனத்தின் முழு நேர ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளன ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள். ஆனால், இவை மட்டும் இதற்குப் பதில் கிடையாது. இன்னொரு முக்கிய ஆயுதத்தையும் இதற்காகக் கையில் எடுத்திருக்கின்றன இந்த நிறுவனங்கள். அதுதான் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence).

செயற்கை நுண்ணறிவு(AI)
செயற்கை நுண்ணறிவு(AI)

இதுபோன்ற வேலைகளை மொத்தமாக AI-யிடமே விட்டுவிடுவதுதான் டெக் நிறுவனங்களின் பல வருடக் கனவு. ஆனால், அந்த அளவுக்கு இன்றைய செயற்கை நுண்ணறிவு முறைகள் இன்னும் மேம்படவில்லை. ஆனால், இந்தக் கொரோனா அவற்றையும் தற்போது களமிறக்கியுள்ளது.

யூடியூப் நிறுவனம் இதைச் செய்யத்தொடங்கிவிட்டது. அதாவது ஒரு வீடியோவை யூடியூபில் வைத்திருக்கலாமா... வேண்டாமா என்ற முடிவை மனிதர்களின்றி AI மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்கத்தொடங்கியிருக்கிறது. இப்படி AI மீதான சார்பு அதிகமாகியுள்ளதால் ``அவ்வப்போது தவறுகள் நடக்கும். எங்களின் விதிமுறைகளை மீறாத வீடியோக்கள் நீக்கப்படலாம்" என்று வெளிப்படையாகவே தெரிவிக்கிறது யூடியூப். ஆனால், முக்கிய முடிவுகளைப் பெரும்பாலும் AI எடுக்காது என்றும் நம்பிக்கையளித்துள்ளது. காப்புரிமை மற்றும் பிற காரணங்களுக்காக யூடியூப் உங்களது வீடியோவை `Strike' செய்யமுடியும். அப்படி ஒரு சேனலுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் Strike வந்தால் அந்தச் சேனல் தடைசெய்யப்படும். இதுபோன்ற முடிவுகளை மனிதர்களே எடுப்பர், AI-யிடம் இப்போதைக்கு இந்த முக்கிய முடிவுகள் தரப்படாது.

யூடியூப்
யூடியூப்

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரும் கூட யூடியூபின் ரூட்டைப் பிடித்தன. அவற்றிலும் ஒரு அக்கவுன்ட்டைத் தடைசெய்யும் அளவுக்கான விஷயங்களை மட்டும் மனிதர்களே பார்த்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மக்கள் தனியாக இருப்பார்கள் என்பதால் தற்கொலை மற்றும் மனஅழுத்தம் சார்ந்த பதிவுகளைக் கையாள்வதிலேயே மனித ஊழியர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவார்கள் என்று ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இப்படி AI பொறுப்பேற்ற முதல் நாளே சின்னச் சின்ன தவறுகள் நிகழத்தொடங்கிவிட்டன. கொரோனா தொடர்பான தவறான தகவல்களுடன் சேர்த்துச் சரியான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் நீக்கியது ஃபேஸ்புக். The Atlantic, Usa Today மற்றும் Buzzfeed ஆகிய ஊடகங்கள் வெளியிட்டிருந்த சரியான தகவல்களை `Spam' எனக் குறித்தது. பலரும் இதைச் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்ட ஃபேஸ்புக் பாதுகாப்பு பிரிவின் துணைத் தலைவரான கை ரோசென் (Guy Rosen) ட்விட்டரில் இதற்கு விளக்கமளித்தார். ``அவதூறுகளைக் கண்டறியும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக இது நடந்துள்ளது. இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுத் தவறுதலாக நீக்கப்பட்ட அனைத்துப் பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கும் Content Moderators பணிக்குழுவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றும் அவர் தெளிவுபடுத்தினார். மற்ற தளங்களிலும் இதுபோன்ற சிறிய கோளாறுகள் நடந்துள்ளன. அதனால் AI-க்கு இதில் சற்றே தடுமாற்றமான தொடக்கம்தான், ஆனால் டெக் நிறுவனங்களிடம் வேறு மாற்றுவழிகளும் தற்போது இல்லை.

இப்படி திடீரென கொரோனாவின் அழுத்தத்தால் நீச்சல் தெரியாதவரைக் கிணற்றில் தள்ளிவிட்டதை போலச் செயற்கை நுண்ணறிவைக் களத்தில் இறக்கியிருக்கின்றனர். நீச்சல் கற்று வெளிவரும் என அவர்கள் நம்புகிறார்கள். பார்ப்போம்!