Published:Updated:

`எடிசனுக்கே மூலப் பொருள் கொடுத்த இந்தியா!' -பாலிமருக்கும் இசைக்கும் என்ன தொடர்பு? #MyVikatan

Representational Image
Representational Image

மியூசிக் ரெகார்டிங்கில் பாலிமரின் பங்கு என்ன? ஒரு சின்ன அலசல்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திரைப்படங்களின் பாடல் வெளியிடும் நிகழ்வை இசை வெளியிடும் விழா என்று நடத்துகிறார்கள். இதற்கு முன்பு, இதுபோன்ற விழாக்கள் குறுந்தகடு வெளியீடு என்று நடத்தப்பட்டது. அதற்கு முன்பு ஒலிநாடா வெளியீடு என்றும் அதற்கும் முன்பு ஒலித்தட்டு வெளியீடு என்றும் இருந்தது. இந்த மாற்றங்களுக்கு காரணம், இசையைப் பதிவு செய்யும் உபகரணங்களில் ஏற்பட்ட மாற்றம்.

Representational Image
Representational Image

மனிதன் பேசுவதும் கை கால்களை அசைப்பதும் இயல்பாக நடந்தவை. அவற்றில் மாற்றம் செய்து வாய்ப்பாடலாகவும் நடனமாகவும் மாற்றிய மனித மூளை வியப்பானது. நடனமும் பாடலும் எப்போது தொடங்கியது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அவை இரண்டும் பொழுதுபோக்கின் முக்கிய அங்கமாக மாறி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. பாடலைப் பதிவு செய்வது எப்போது தொடங்கியது?

கிராமஃபோனை முதல் ஒலிப்பதிவுக் கருவியாக கருதலாம். கிராமஃபோனை தயாரித்ததில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முக்கியப் பங்குண்டு. அவருடைய ஒலித்தட்டுகள் அலுமினியம் தகடுகளால் அல்லது மெழுகினால் ஆனவை. இவை இரண்டும் சிறப்பாகச் செயல்படவில்லை. எனவே, எந்தப் பொருளை பயன்படுத்தி ஒலித்தகடுகள் தயாரிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்த எடிசனின் மூலையில் உதித்த ஒரு பொருள் இந்தியாவில் கிடைத்தது. அது அரக்கு (Shellac).

Representational Image
Representational Image

ஒரு அரக்கு நிற குச்சியை தீயில் உருக்கி அதன்மீது முத்திரையிடுவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த அரக்கு பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கிடைக்கும். இதை தெரிந்துகொண்ட எடிசன், அவருடைய ஆட்களை இந்தியாவுக்கு அனுப்பி, ஒப்பந்தங்களை நிறைவேற்றி இங்கிருந்து அரக்கை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். அதைப் பயன்படுத்தி ஒலித்தகடுகளைத் தயாரித்தார். இந்த நடைமுறை Poly vinyl Chloride (PVC) என்ற பாலிமர் கண்டுபிடிக்கும்வரை தொடர்ந்தது.

நாம் இன்றைக்கு PVC பைப் என்று தண்ணீர் குழாய்களில் பயன்படுத்துகிறோமோ, அந்தப் பாலிமர்தான் ஒலித்தகடு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஒலித்தகடு குறைந்தது ஒரு அடி விட்டம் (Diameter) கொண்டது. அந்த ஒலித்தட்டின் மீது கிராமஃபோனின் ஊசியை வைத்து ஓடவிட்டால் பாடல் ஒலிக்கும். ஆனால், ஒலித்தட்டில் கீறல் விழுந்துவிட்டால் ஒரே வார்த்தை தொடர்ந்து ஒலிக்கும்.

Representational Image
Representational Image

உதாரணமாக, ``எங்கள் திராவிட பொன்னாடே" என்ற பாடலில் திராவிட என்று வரும் இடத்தில் கீறல் விழுந்துவிட்டால், திராவிட திராவிட திராவிட என்று தொடர்ந்து ஒலிக்கும். யாராவது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தால், ``ஏன் கீறல் விழுந்த ரெக்கார்ட் போல பேசுகிறாய்" என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

அந்தச் சொற்றோடரின் மூலம், கிராமஃபோன் மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட ஒலித்தட்டுகள்தான். ஒலித்தட்டில் ஏற்படும் கீறல்களும் கிராமஃபோன் உபகரண அளவும் பிரச்னையாக இருந்தது. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வும் வந்தது. அந்தத் தீர்வு, டேப் ரெக்கார்டர்கள். இவை ஒலிநாடாவால் இயங்குபவை. இந்த ஒலிநாடா Poly ethylene terephthalate) (PET) என்ற பாலிமரால் தயாரிக்கப்பட்டது. இந்த PET பாலிமர் தண்ணீர் பாட்டில்கள், தலையணைகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஒலிநாடாக்கள், இரண்டு சக்கரங்களை இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். இந்த ஒலிநாடாக்களிலும் ஒரு சிக்கல் இருந்தது. உண்மையிலேயே அது `சிக்கல்' தான். கேசட்டில் உள்ள சக்கரங்கள் சுழலும்போது, டேப் ரெக்கார்டரில் ஒலிநாடா சிக்கிக் கொள்ளும். உதாரணமாக, ``நான் ஆளான தாமரை" என்ற பாடல் ஒலிக்கும் பொழுது, ஒலிநாடா சிக்கிக்கொண்டால், நா ஆ ஆ ஆ ஆ ஆ ளா ஆ ஆ ஆ ஆ என்று இழுக்க ஆரம்பிக்கும். உடனே டேப் ரெக்கார்டரை அனைத்து விட வேண்டும். தாமரை வரும் வரைவிட்டால் சிக்கல் பெரிதாகி ஒலிநாடா அறுந்துவிடும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் குறுந்தகடு மூலம் விடிவுகாலம் பிறந்தது.

Vikatan

குறுந்தகடுகள் Polycarbonate (PC) பாலிகார்பனேட் எனும் பாலிமரால் ஆனவை. புனேயின் சி.எஸ்.ஐ.ஆர் - தேசிய வேதியியல் ஆய்வக (CSIR-National Chemical Laboratory) விஞ்ஞானியாக இருந்த முனைவர் சிவராம் மற்றும் அவருடன் பணி செய்த மற்றோரு விஞ்ஞானியான முனைவர் பிரகாஷ் வட்கவுங்கர் ஆகியோர் PC யின் இன்னொரு வகையைக் கண்டுபிடித்தனர். அந்த PC தான் உங்கள் வாகன ஹெட்லைட்டுக்களில் பயன்படுத்தப்படுகிறது. உலகெங்கும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹெட்லைட்கள் இந்திய விஞ்ஞானியான முனைவர் சிவராம் கண்டுபிடித்தது.

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, இன்றுவரை குறுந்தகடுகள் PC கொண்டு தயாரிக்கப்படுகிறது. பென்டிரைவ்கள் குறுந்தகடுகளின் பயன்பாட்டை பெருமளவு குறைந்துவிட்டன. இந்த பென்டிரைவ்களில் பாலிமர் பயன்படுத்தப்படுவதில்லை. மின்கடத்தும் மற்றும் பிளாக் கோபாலிமர்களை பென்ட்ரைவ்களில் பயன்படுத்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

பாலிமர் என்று சொல்கிறோமே, அது என்ன? அதன் வகைகளை எப்படி புரிந்துகொள்வது? உதாரணமாக, தனியாக நிற்கும் மனிதர் `மோனோமர்' (Monomer). இன்னொருவருடன் கைகோத்தால் அது `டைமர்' (Dimer). பலர் கைகோத்து நின்றால் அது `பாலிமர்' (Polymer).

முனைவர் சிவராம்
முனைவர் சிவராம்

பாலிமர் என்பது இவ்வளவுதான். இந்த ஒப்பீட்டை வேதிப்பொருள்களில் பார்க்கலாம். வினைல் குளோரைட் (Vinyl Chloride) என்பது மோனோமர். பல வினைல் குளோரைடுகள் சேர்ந்தால் அது பாலிவினைல்குளோரைட் (PVC) எனும் பாலிமர் ஆகிவிடுகிறது. பாலிமரை எப்படி வகை பிரிக்கிறார்கள் என்பதை மனிதச் சங்கிலி போராட்டங்களை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு மனிதச் சங்கிலியில், ஆயிரம் ஆண்கள் கைகோத்து நிற்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். இதற்குப் பெயர் ஹோமோ பாலிமர் (Homopolymer). இந்த வரிசையில் சில ஆண்களுக்குப் பதிலாக பெண்களும் கலந்து நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அது ரேண்டம் கோபாலிமர் (Random Copolymer). இந்த வரிசையில், ஆணும் பெண்ணும் மாறி மாறி நிற்பதாக வைத்துக்கொள்வோம். அது அல்டெர்நேட் கோபாலிமர் (Alternate Copolymer). பாலிமர்களில் இன்னொரு வகையும் இருக்கிறது.

Representational Image
Representational Image

ஒரு ஐநூறு ஆண்கள் வரிசையாக கைகோத்து நிற்கிறார்கள். அதற்கடுத்து ஐநூறு பெண்கள் வரிசையாக நிற்கிறார்கள். இதற்கு பிளாக் கோபாலிமர் (Block Copolymer) என்று பெயர். PVC என்பது ஹோமோபாலிமர். PET மற்றும் PC போன்றவை அல்டெர்நேட் கோபாலிமர் வகையைச் சார்ந்தது. ஒலிப்பதிவில் பாலிமர்களின் பங்கு மற்றும் பாலிமர் வகைகளைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சியாளர், சி.எஸ்.ஐ.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு