Published:Updated:

உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா... ப்ளே ஸ்டோரிலிருந்து ஏன் Paytm நீக்கப்பட்டது?!

Paytm
Paytm

இதனால் இனி புதிதாக யாரும் பேடிஎம் ஆப்பை ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க முடியாது, அப்டேட் செய்ய முடியாது.

இந்தியாவின் மிகப் பிரபல ஆப்களில் ஒன்று பேடிஎம். ஆன்லைன் மொபைல் ரீசார்ஜ் சேவையாக ஆரம்பித்த பேடிஎம் இன்று கிட்டத்தட்ட அனைத்து முக்கிய டிஜிட்டல் சேவைகளும் அடங்கிய 'சூப்பர் ஆப்'பாக (Super App) உருவெடுத்திருக்கிறது. பல கோடி இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேடிஎம்மை தங்களது ப்ளேஸ்டோரிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். இதனால் இனி யாரும் புதிதாக பேடிஎம் ஆப்பை ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க முடியாது, அப்டேட் செய்ய முடியாது.

பேடிஎம்
பேடிஎம்

காரணம் என்ன?

இது குறித்து விளக்கமளித்த ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் பிரைவசி பிரிவின் துணைத் தலைவர் சூசன் ஃபிரே, "நாங்கள் ஆன்லைன் கேசினோ மற்றும் முறைப்படுத்தப்படாத சூதாட்ட ஆப்களை அனுமதிப்பதில்லை. ஒரு ஆப்பில் இது நேரடியாக நடக்காமல் அதிலிருந்து வேறொரு இணையதளத்திற்கு அனுப்பி அதில் பணம் கட்டி இது போன்ற விளையாட்டுகளில் ஆட வைத்தாலும் அவற்றை நாங்கள் நீக்கிவிடுவோம்" என்றவர், "இப்படி எங்கள் பாலிசிகளை மீறும் ஆப்களின் டெவலப்பர்களிடம் என்ன பிரச்னை என்று தெரிவித்துவிட்டு அதை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்குவது வழக்கம். அவர்கள் பிரச்னைகளை சரி செய்யும்பட்சத்தில் மீண்டும் ப்ளே ஸ்டோரிலில் அனுமதிப்போம். தொடர்ந்து எங்கள் பாலிசிகளை மீறும் செயல்களில் ஈடுபட்டால் அந்த டெவலப்பர் கணக்கை மொத்தமாக நீக்கிவிடுவோம்" என்றார்.

இந்த அடிப்படையில்தான் பேடிஎம் நீக்கப்பட்டிருக்கிறது. "விரைவில் மீண்டும் ப்ளே ஸ்டோருக்கு வந்துவிடுவோம். உங்கள் பணத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அனைத்தும் அப்படியே பத்திரமாக இருக்கும். ஏற்கெனவே இன்ஸ்டால் செய்திருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையுமின்றி பேடிஎம் இயங்கும்'' எனவும் இந்த நீக்கம் குறித்துத் தெரிவித்திருக்கிறது பேடிஎம்.

Paytm First Games என்னும் ஃபேன்ட்ஸி ஸ்போர்ட்ஸ் சேவைதான் இந்த நீக்கத்துக்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது பேடிஎம் ஆப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. இதுதான் தொடர்ந்து கூகுள் ப்ளே ஸ்டோரின் 'ஆன்லைன் கேசினோ மற்றும் முறையற்ற சூதாட்ட விளையாட்டுகளைத் தடுக்கும்' விதிமுறைகளை மீறியதாகச் சொல்லப்படுகிறது. ஐபிஎல் ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் இப்படி ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படுவது பேண்டஸி ஸ்போர்ட்ஸ் களத்தில் கால்பதிக்க நினைத்த பேடிஎம்-க்கு பெரிய பின்னடைவு. சமீபத்தில்தான் Paytm First Games-க்கு சச்சின் டெண்டுல்கரை விளம்பர தூதராக பிடித்திருந்தது பேடிஎம்.

 Paytm First Games
Paytm First Games

மிக விரைவில் இந்த பிரச்னைக்கு இரு நிறுவனங்களும் இணைந்து தீர்வுகாணும் என எதிர்பார்க்கலாம்.

இதே விதிமுறையை மீறியதால்தான் ட்ரீம்11 கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு